�
ரயிலுக்கு முன் நின்று செல்பி எடுத்தால் ஆறு மாத சிறை தண்டனையுடன், ரூ. 2000 அபராதமும் விதிக்கப்படும் என்று வடக்கு ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.
சமீப காலமாக இளைஞர்கள் செல்பி மோகத்தால், அதன் விபரீதம் தெரியாமல் பல ஆபத்தான இடங்களில் நின்று செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். இதற்கு அவர்கள் எடுக்கும் முயற்சிகள் சில சமயம் எல்லை மீறுகின்றன. ரயில் முன், ரயில் பெட்டியின் மேல் என்று இவர்கள் எடுக்கும் செல்பியால் பல்வேறு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனைத் தடுக்கும் விதமாக பஞ்சாப் மாநிலத்தில் ரயில்களுக்கு முன் நின்று செல்பி எடுப்பவர்களுக்கு, 2,000 ரூபாய் அபராதமும், ஆறு மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்னும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வடக்கு ரயில்வேயின் பதிந்தா பிரிவு பொறுப்பாளர் யோகேஷ் குமார் தஹியா, “ரயில்களுக்கு முன் செல்பி எடுக்கக் கூடாது என்பது குறித்துப் பயணியருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வடக்கு ரயில்வே உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வடக்கு ரயில்வேயின் அனைத்து இடங்களிலும் ரயில் முன் நின்றபடி செல்பி எடுப்பவர்கள் கண்காணிக்கப்படுவர்” எனக் கூறினார்.�,