தனது பணியாளர்களுக்கு வழங்கப்படும் தொலைத் தொடர்புச் சேவைக்கு ஜியோ நிறுவனத்தைப் பயன்படுத்த இந்தியன் ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதன் மூலமாக 35 விழுக்காடு தொலைபேசிக் கட்டணம் குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இயங்கும் இந்தியன் ரயில்வே துறையில் பணியாற்றி வரும் 1.95 லட்சம் ஊழியர்களுக்கு ஏர்டெல் நிறுவனத்தின் தொலைத் தொடர்புச் சேவை ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வந்தது. 2018 டிசம்பர் 31ஆம் தேதியோடு இந்த ஒப்பந்தம் காலாவதியாகவுள்ளதால், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தோடு புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இது 2019 ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது. புதிய ஒப்பந்தப்படி ஜியோ நிறுவனம் 3.78 லட்சம் பணியாளர்களுக்குத் தொலைத் தொடர்புச் சேவையை வழங்கவிருக்கிறது.
ஆண்டுதோறும் நூறு கோடி ரூபாய் விகிதம் தொலைப்பேசிக் கட்டணமாக இந்தியன் ரயில்வே செலுத்தி வருகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தற்போது ஜியோ நான்கு வகையான வசதிகளை வழங்கியுள்ளது. 60 ஜி.பி திட்டம் ரூ.125க்கும், 45 ஜி.பி திட்டம் ரூ.99க்கும், 30 ஜி.பி திட்டம் ரூ.67க்கும் மற்றும் ரூ.49க்கு எஸ்.எம்.எஸ் திட்டத்தை அறிவித்துள்ளதால் தொலைத் தொடர்புக் கட்டணம் குறையுமென ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.�,