^ரயிலை சேதப்படுத்தியதாக 13 பேர் கைது!

Published On:

| By Balaji

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சேலம் ரயிலை சிறைப்பிடித்து சேதப்படுத்திய வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரச் சட்டம் வேண்டும் என்று, தமிழகம் முழுவதும் ஜனவரி 17ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பல்வேறு இடங்களில் ரயில் மறியல் செய்யப்பட்டது. குறிப்பாக சேலம், மதுரை ரயில் நிலையங்களில் ரயில்கள் சிறைப் பிடிக்கப்பட்டன.

இந்நிலையில், சேலத்தில் கடந்த 19ஆம் தேதி மாணவர்கள் பெங்களூரு–காரைக்கால் பயணிகள் ரயிலை சிறைப்பிடித்தனர். ரயில்மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரயில் என்ஜின் மற்றும் இருக்கைகளை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. எனவே, சேலம் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி 150 பேர் மீது கடந்த வாரம் சேலம் ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

தடை செய்யப்பட்ட பகுதியில் தண்டவாளத்தைக் கடந்து செல்லுதல், ரயில் மறியல் செய்தல், ரயிலுக்கு இடையூறாக தண்டவாளத்தில் கற்கள் வைத்தல், ரயிலை சேதப்படுத்துதல் போன்ற பிரிவுகளில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ரயில் என்ஜின், பெட்டிகளின் கண்ணாடி உடைக்கப்பட்டும், இருக்கைகளைக் கிழித்தும் சேதப்படுத்தப்பட்டிருந்தன. இதன் சேதமதிப்பு சுமார் ரூ.68 லட்சம் என காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு சேலம் ரயில்வே காவல்துறையிடமிருந்து செவ்வாய்ப்பேட்டை காவல் துறையினருக்கு மாற்றம் செய்யப்பட்டது.

அதன்படி, ரயில் சேதப்படுத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோ காட்சிகளை வைத்து காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தேடி வந்தனர்.

இந்நிலையில் விஸ்வநாதன், சுரேஷ், தமிழரசு, காசிலிங்கம், தினேஷ்குமார், ஜெயக்குமார், விஜய், அருண்குமார், கண்ணன், தினேஷ்குமார், சந்திரன், அலெக்ஸ், வினித் உள்ளிட்ட 13 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதில் அருண்குமார், சந்திரன், ஜெயகுமார், தினேஷ்குமார், விஜய் ஆகிய 5 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர் மற்ற அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்று சென்னையில் நடந்த கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி 215 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share