ரஜினிக்கு எதிர்ப்பு, விஜய்க்கு ஆதரவு: மக்களவையில் திமுக!

Published On:

| By Balaji

ரஜினி மற்றும் விஜய் ஆகியோரிடம் வருமான வரித் துறை நடந்துகொண்ட விதம் தொடர்பாக மக்களவையில் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வருமான வரித் துறைக்கு தவறான தகவல் அளித்ததாக நடிகர் ரஜினிகாந்துக்கு 2005ஆம் ஆண்டு 66 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக ரஜினிக்கு எதிராக வருமான வரித் துறை தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது. அதே நேரத்தில் நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை நேரில் சென்று கையோடு சென்னை அழைத்துவந்த வருமான வரித் துறையினர், அவரது இல்லத்தில் இரண்டு நாட்கள் வரை சோதனை நடத்தினர்.

விஜய்-ரஜினி விவகாரத்தில் வருமான வரித் துறை நடந்துகொண்ட விதம் தொடர்பாக பல அரசியல் கட்சித் தலைவர்களும் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளது திமுக.

மக்களவையில் இன்று (பிப்ரவரி 10) பேசிய மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், “நடிகர் ரஜினிகாந்துக்கு ஒரு கோடி ரூபாய் வரை மத்திய அரசு வரிச்சலுகை அளித்திருக்கிறது. அற்புதம். நீங்கள் கொடுத்த சலுகை நன்றாகவே வேலைசெய்துள்ளது. அதே நேரத்தில் நடிகர் விஜய் போன்றோர் மீது மத்திய அரசு குறிவைத்து நடவடிக்கை எடுக்கிறது. நெய்வேலியில் நடந்த படப்பிடிப்பிலிருந்து விஜய்யை அழைத்துவந்துள்ளனர். இது எந்தவிதத்தில் நியாயம்” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “ஆதார் அட்டைக்காக ஏற்கனவே 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவிடப்பட்டு நாட்டு மக்களின் தகவல் திரட்டப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடுக்காக மேலும் 4500 கோடி ரூபாய் மத்திய அரசு செலவிட முடிவு எடுத்துள்ளது. பொதுமக்களின் வரிப்பணத்தில் இதுபோன்று தேவையற்ற செலவு செய்வதை ஏற்க முடியாது” என்றும் தெரிவித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share