ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக மத்தியக் கண்காணிப்பு ஆணையத்திடம் காங்கிரஸ் இன்று (செப்டம்பர் 24) மனு அளித்துள்ளது.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறது. மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மீதும் பாஜக அரசு மீதும் ரஃபேல் விவகாரத்தில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்நிலையில், பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்சாய்ஸ் ஹாலண்டே, “ரஃபேல் ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை இந்திய அரசு, அனில் அம்பானியின் நிறுவனத்துடன் மட்டும் தான் கூட்டு சேர்ந்து பணிகள் செய்யச் சொன்னது. எங்களுக்கு வேறு எந்த நிறுவனம் குறித்தும் தெரிவிக்கப்படவில்லை” என்று அந்நாட்டு ஊடகமான மீடியாபார்டிற்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து ரஃபேல் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியை(சிஏஜி) காங்கிரஸ் குழுவினர் சந்தித்துப் பேசியிருந்த நிலையில் மத்திய கண்காணிப்பு(விஜிலன்ஸ்) ஆணைத்திடம் காங்கிரஸ் சார்பில் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
குலாம்நபி ஆசாத், அகமது பட்டேல், ஆனந்த் சர்மா, ரந்தீப் சுர்ஜிவாலா, மனீஸ் திவாரி உள்ளிட்டோர் அடங்கிய 11 நபர் குழு விஜிலன்ஸ் ஆணையர் கேவி. சௌத்ரியை இன்று சந்தித்து இது தொடர்பான மனுவை அளித்துள்ளனர். அதில், அரசு கருவூலத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் சில தொழிலதிபர்களின் ஆதாயத்திற்காக அரசின் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் நிறுவனத்தை புறக்கணித்ததன் மூலம் நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அரசின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
”ஊழலின் தடங்கள் தினமும் வெளிப்பட்டுவரும் நிலையில் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து எந்த பதிலும் இதுவரை வரவில்லை. ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் மற்றும் பதவிசார் முதலாளித்துவத்தின் துர்வாடைகள் குமட்டலை ஏற்படுத்துகிறது. எனவே, நீங்கள்(விஜிலன்ஸ் ஆணையம்) இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும்” என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு அளித்தபின் செய்தியாளர்களை சந்தித்த ஆனந்த் சர்மா, “அனைத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்து எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யும்படி விஜிலன்ஸ் ஆணையரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்” என்று கூறினார்.
�,”