ரஃபேல் விவகாரத்தில் பத்திரிகையில் வெளியான ஒப்பந்த ரகசியங்கள் தொடர்பான தகவல்களை நீதிமன்றம் ஆவணங்களாக ஏற்குமா, ஏற்காதா என்ற தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மத்திய அரசைக் கடுமையாகக் குற்றம்சாட்டி வருகிறது. அந்தக் குற்றச்சாட்டை உறுதிபடுத்தும் வகையில் ’தி இந்து’ பத்திரிகை சில ஆதாரங்களுடன் பிப்ரவரி 8ஆம் தேதி கட்டுரை ஒன்றை வெளியிட்டது. உச்ச நீதிமன்றத்தில் ரஃபேல் விவகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் மறு சீராய்வு வழக்கில், இந்து பத்திரிகையில் வெளியான ஆவணங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டுமென மனுதாரர் பிரசாந்த் பூஷன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பாதுகாப்புத் துறை தொடர்பான ரகசியத் தகவல்களை வெளியிட்டது தவறானது எனவும், எனவே அந்த ஆவணங்களை நீதிமன்றம் ஏற்கக் கூடாது எனவும் மத்திய அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் தொடர்ந்து கூறி வருகிறார்.
இது தொடர்பான வாதங்கள் உச்ச நீதிமன்றத்தில் நேற்றும் (மார்ச் 14) காரசாரமாக நடந்தது. நேற்றைய விசாரணையின்போது அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், “மத்திய அரசு தாக்கல் செய்த சிஏஜி அறிக்கையில் முதல் மூன்று பக்கங்கள் விடுபட்டிருப்பதாகவும், அதை மீண்டும் தாக்கல் செய்ய அனுமதி வேண்டும்” என்றும் கேட்டுள்ளார். மேலும், “பாதுகாப்புத் துறை தொடர்பான முக்கிய ஆவணங்களை, இந்தியச் சான்று சட்டம் 123இன் படி ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த ஆவணங்கள் அரசு ரகசியங்கள் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன. தகவல் அறியும் உரிமைச் சட்டம் 8(1)(எ)-விலிருந்து இதுதொடர்பான தகவல்களை வெளிப்படுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதற்குப் பதிலளித்த நீதிபதி கே.எம் ஜோசப், சட்டப் பிரிவுகள் 22 மற்றும் 24ஐ சுட்டிக்காட்டி, “ஊழல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்களை பாதுகாப்புத் துறை மற்றும் புலனாய்வு நிறுவனங்களும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வெளிப்படுத்தலாம்” என்று குறிப்பிட்டார்,
பின்னர் வாதிட்ட மனுதாரர் பிரசாந்த் பூஷன், “ரஃபேல் விவகாரத்தில் ஆவணங்கள் திருடப்பட்டதாக அரசு கூறும் விவகாரத்தில் இதுவரை எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் குறிப்பிடும் ஆவணங்கள் ஏற்கெனவே பொது வெளிக்கு வந்துவிட்டன. அவர் குறிப்பிட்ட சான்று சட்டம் 123 வெளியிடப்படாத ஆவணங்களை மட்டும்தான் பாதுகாக்கிறது” என்றார்.
“பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா சட்டப் பிரிவு 15, ஆதாரங்களைப் பாதுகாப்பதற்குப் பத்திரிகையாளர்களுக்குச் சிறப்புரிமை வழங்குகிறது. இதற்கு முன்பு 2ஜி மற்றும் நிலக்கரி சுரங்க வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. முன்னாள் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா ஆவணங்கள் யாரால் வெளிப்படுத்தப்பட்டது என்பதை வற்புறுத்தாமல், அவற்றை விசாரணைக்கு ஏற்றுள்ளார்” என்று சுட்டிக்காட்டிய பிரசாந்த் பூஷன், “பெண்டகன் பேப்பர் வழக்கில், வியட்நாம் போர் தொடர்பாக ஆவணங்களை வெளியிட அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது” என்றும் குறிப்பிட்டார். “இப்போது அரசாங்கத்தின் கவலை தேசத்தைப் பாதுகாப்பதல்ல. இந்த ஒப்பந்தத்தில் தலையிட்ட அரசாங்க அதிகாரிகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் கவலையாக உள்ளது” என்றார்.
இவரைத் தொடர்ந்து வாதிட்ட அருண் ஷோரி, ”ரஃபேல் விவகாரத்தில் வெளியிடப்பட்ட ஆவணம் என்பது வெறும் நகல் என்று அட்டர்னி ஜெனரல் கூறுவதன் மூலம் அது, உண்மையான ஆவணங்கள் என்று ஒப்புக்கொள்கிறார். எனவே அவருக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, கசிந்த ஆவணங்கள் தொடர்பாக விசாரணை நடத்தலாமா, கூடாதா என்பது குறித்த தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
�,