ரஃபேல் ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து திருடு போய்விட்டதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பான மறுசீராய்வு வழக்கின் விசாரணை இன்று (மார்ச் 6) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் ஆஜரானார். மறுசீராய்வு வழக்கைத் தொடர்ந்த மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், டிசம்பர் 14ஆம் தேதி ரஃபேல் விவகாரத்தில் அளித்த தீர்ப்பில் மிகப்பெரிய பிழைகள் இருப்பதாகவும், பாஜக தலைமையிலான அரசு நீதிமன்றத்தை ஏமாற்றுவதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்து என்.ராம் அளித்த கடிதத்தின் ஆவணங்கள் புதிதாக சமர்ப்பிக்கப்பட்டதை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. இந்த கட்டத்தில் புதிய ஆவணங்கள் எதையும் பார்க்கப்போவதில்லை எனவும் நீதிபதிகள் கூறிவிட்டனர். இதையடுத்து அரசுத் தரப்பு வழக்கறிஞர் வேணுகோபால் வாதிடுகையில் *தி இந்து* ஊடகம் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ”இதுபோன்ற முக்கிய ஆவணங்களை வெளியிடுவது ஏற்புடையதல்ல. இந்த ஆவணங்களை ஒருவர் வைத்திருப்பதே இரகசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகும். இதற்காக அரசாங்கம் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளது” என்றார்.
மேலும், ”பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து ரஃபேல் ஒப்பந்தம் குறித்த சில முக்கிய ஆவணங்கள் முன்னாள் அல்லது இந்நாள் ஊழியர்களால் திருடப்பட்டுள்ளது” என்றும் வேணுகோபால் கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஆவணங்கள் திருடு போயுள்ளது என்றால் அதுதொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என கேள்வியெழுப்பினார். “ஆவணங்கள் வெளியானது எப்படி என்பது தொடர்பாக அரசு விசாரணை மேற்கொண்டு வருகிறது. ரகசிய ஆவணங்களை வைத்து வழக்காடுவது குற்றத்துக்குரிய ஒன்றாகும். எனவே இந்த மறு சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வேணுகோபால் கோரிக்கை வைத்தார். ஆனால் திருடப்பட்டதாக இருந்தாலும் அதை ஆவணமாகக் கருதலாம் என்று நீதிபதி ஜோசப் கூறினார்.
மேலும் *தி இந்து* மற்றும் *ஏ.என்.ஐ.* ஊடகங்கள் வெளியிட்ட ஆவணங்கள் திருடப்பட்ட ஆவணங்கள் என்றால், ஆவணங்கள் திருடு போனது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகளை நாளைக்குள் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து மனுதாரர்கள் பிரஷாந்த் பூஷன் மற்றும் அருண் ஷோரி ஆகியோர் தங்களது வாதங்களை முன்வைத்தனர். அதனைக்கேட்ட நீதிபதிகள் வழக்கை மார்ச் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
�,