[ரஃபேல் ஆவணங்கள் திருடு போகவில்லை!

Published On:

| By Balaji

ரஃபேல் ஆவணங்கள் திருடு போனதாக நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து இரண்டே நாட்களில், ஆவணங்கள் திருடு போகவில்லை என்று கூறியுள்ளது.

ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பான மறுசீராய்வு வழக்கு மார்ச் 6ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து ரஃபேல் ஒப்பந்தம் குறித்த சில முக்கிய ஆவணங்கள் முன்னாள் அல்லது இந்நாள் ஊழியர்களால் திருடப்பட்டுள்ளது என அன்று அட்டர்னி ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆவணங்கள் வெளியானது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.

பாதுகாப்புத் துறையிலேயே திருட்டு நடந்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, சரத் பவார் உள்ளிட்டோர் மத்திய அரசை மிகக் கடுமையாகச் சாடினர்.

இந்நிலையில் ஆவணங்கள் திருடுபோகவில்லை என்று மூத்த வழக்கறிஞர் வேணுகோபால் *பிடிஐ* செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ரஃபேல் ஆவணங்கள் தொடர்பான அசல் ஆவணங்களின் நகல்களை மனுதாரர் பயன்படுத்தியிருப்பதைத்தான் நீதிமன்றத்தில் அவ்வாறு கூறியுள்ளோம். திருடு போய்விட்டது என்ற வாதம் முற்றிலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது” என்றார். ரகசியம் காக்கப்பட வேண்டிய ஆவணங்களின் நகல்கள் வெளியானதற்கு எதிரான வாதத்துக்கு வலு சேர்க்கும் விதமாகவே ஆவணங்கள் திருடு போயுள்ளதாக மூத்த வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியதாக அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share