ரஃபேல் ஒப்பந்த முறைகேடு தொடர்பான ஆதாரங்கள் கிடைத்தவுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் வழக்கறிஞருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. பிரதமர் மோடியின் நண்பரான அனில் அம்பானிக்கு விமானங்கள் தயாரிக்கும் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அனில் அம்பானிக்கு ரூ.45 ஆயிரம் கோடி லாபம் கிடைக்கும் என்றும் காங்கிரஸ் கூறி வருகிறது.
இதற்கு மறுப்பு தெரிவித்து அனில் அம்பானி ராகுலுக்கு கடிதம் அனுப்பினார். ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாகக் கட்டுரை வெளியிட்டிருந்த காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் இயங்கிவரும் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை மீது நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கும் ரிலையன்ஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனினும், ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்தூரில் நேற்று(செப்டம்பர் 2) செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், “ரஃபேல் ஒப்பந்தம் என்பது மிகப்பெரிய முறைகேடு. மோடி அரசாங்கத்திடம் இந்த விவகாரம் தொடர்பாக எந்த பதிலும் கிடையாது. போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான கொள்கையை மீறி இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டிருக்கிறது. ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்பாக வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சகங்களை மத்திய அரசு கலந்து ஆலோசிக்கவில்லை.
காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 2012ஆம் ஆண்டு ஒரு விமானத்திற்கு ரூ.560 கோடி என ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், மோடி அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு 2016ஆம் ஆண்டில் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதில், ஒரு விமானத்திற்கான விலை ரூ.1600 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
விமானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத் தகவல்களை நாங்கள் கேட்கவில்லை. எந்த அடிப்படையில் விமானத்தை வாங்குவதற்கான விலை 3 மடங்கு உயர்த்தப்பட்டது என்றுதான் கேட்கிறோம்” என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக காங்கிரஸ் நீதிமன்றம் செல்லுமா என்ற கேள்விக்கு, “தேவையான முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்வரை நீதிமன்றம் செல்ல மாட்டோம்” என்று பதிலளித்தார்.
சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது நில முறைகேடு வழக்கில் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு, “2019 பொதுத் தேர்தல்களுக்கான நேரம் தொடங்கிய நிலையில், அத்தகைய வழக்குகள் (எங்களுக்கு எதிராக) வரும் என்று நாங்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.�,