பண்டிகைக் கால சிறப்பு விற்பனைகளால் யூபிஐ பரிவர்த்தனைகள் மதிப்பு 25 விழுக்காடு அளவுக்கு அதிகரித்துள்ளது.
இந்திய தேசியக் கொடுப்பனவுக் கழகத்தின் தகவல்படி, அக்டோபர் மாதத்தில் 482 மில்லியன் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இது செப்டம்பர் மாதத்தைக் காட்டிலும் 19 விழுக்காடு அதிகமாகும். செப்டம்பர் மாதத்தில் 402 மில்லியன் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. அக்டோபர் மாத பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ.74,978 கோடியாகும். இது முந்தைய மாதத்தைக் காட்டிலும் சுமார் 25 விழுக்காடு அதிகமாகும். செப்டம்பர் மாத பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ.59,835 கோடியாக இருந்தது.
வட மாநிலங்களில் பெரிதும் கொண்டாடப்படும் நவராத்திரி மற்றும் துர்கா பூஜை போன்ற பண்டிகைகளையொட்டி அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் மின்னணு வர்த்தக நிறுவனங்கள் சிறப்பு தள்ளுபடி விற்பனைகளை மேற்கொண்டதே பரிவர்த்தனைகளின் மதிப்பு உயர்ந்ததற்கு முக்கியக் காரணமாக உள்ளது. அமேசானின் பண்டிகைக் கால விற்பனையில், வழக்கமான விற்பனைக்கான பரிவர்த்தனைகளைப் போல 2.5 மடங்கு கூடுதலான பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல இம்மாதத்தில் தீபாவளிப் பண்டிகை நாடும் முழுவதும் கொண்டாடப்படுவதால் நவம்பர் மாத ஆன்லைன் பரிவர்த்தனைகள் மதிப்பும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் மாதத்தைப் பொறுத்தவரையில் பேடிஎம் வழியாகவே அதிகப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் பேடிஎம் வழியாக 180 மில்லியன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உடனடி பணம் கொடுப்பனவு சேவைகள் (ஐ.எம்.பி.எஸ்.) அக்டோபர் மாதத்தில் 12 விழுக்காடு வளர்ச்சி கண்டு ரூ.1.4 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது செப்டம்பர் மாதத்தில் ரூ.1.25 லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது. பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் அக்டோபரில் 154.6 மில்லியன் பரிவர்த்தனைகளும், செப்டம்பரில் 135.7 மில்லியன் பரிவர்த்தனைகளும் ஐ.எம்.பி.எஸ். மூலமாக நடந்துள்ளன.�,