மக்களவைத் தேர்தலையொட்டி வெறுப்பு அரசியலுக்கு விடை கொடுப்போம் என்று முழக்கத்துடன் இந்திய அளவிலான 200 முக்கிய எழுத்தாளர்கள் இணைந்து திறந்த மடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளன. 7 கட்டங்களாக நடைபெறும் 17 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு ஆட்சியமைக்கவுள்ளது. வெறுப்பு அரசியலுக்கு முடிவுகட்டி பன்மைத்துவம் மற்றும் சமத்துவ இந்தியாவை அமைக்கும் வகையில் மக்கள் தங்களது வாக்குகளை செலுத்த வேண்டும் என்று அருந்ததி ராய், அமிதவ் கோஸ், ரோமிலா தாபர் உள்ளிட்ட 200 எழுத்தாளர்கள் இணைந்து திறந்த மடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
*இந்தியன் கல்ட்சுரல் ஃபார்ம்* வெளியிட்டுள்ள இந்தக் கடிதமானது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, உருது, வங்காளம் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. பாசிசத்தை வீழ்த்துவோம் என்ற முழக்கத்தை முன்வைத்துக் கடந்த மாதத்தில் இந்திய அளவிலான 103 முக்கிய திரைப்பட இயக்குநர்கள் பாஜகவுக்கு எதிராகக் கடிதம் வெளியிட்ட நிலையில், தற்போது எழுத்தாளர்களின் கடிதம் வெளியாகியுள்ளது. இவர்களும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்தக் கடிதத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், திரைத்துறையினர், இசைக்கலைஞர்கள், கலாச்சார ஆர்வலர்கள் பலரும் மிரட்டப்பட்டனர், இன்னலுக்குள்ளாகினர், தணிக்கைக்குள்ளாகினர். யாரெல்லாம் இந்த அரசை எதிர்த்து கேள்வி கேட்டார்களோ அவர்களெல்லாம் தவறான குற்றச்சாட்டுகளால் அச்சமூட்டப்பட்டனர். கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் மீது தவறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
எல்லோரும் இதிலிருந்து மாற்றத்தை விரும்புகிறோம். இதன் முதல்படியாக நாம் செய்ய வேண்டியது வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். பன்முகத்தன்மை மற்றும் சமத்துவத்தன்மை வாய்ந்த இந்தியாவை உருவாக்க மக்கள் வாக்களிக்க வேண்டுமென்று உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம். இந்த நாடு தற்போது ஒரு குறுக்கு வழிச்சாலையில் நிற்கிறது. இதிலிருந்து இந்த நாட்டை புனரமைக்கும் வகையில் குடிமக்கள் வாக்களிக்க வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டம் எல்லோருக்கும் சம உரிமை வழங்கியுள்ளது. அவரவர் விருப்பமான உணவை உண்ணவும், தங்களது கடவுளை வழிபடவும், வாழவும் நமக்கு சட்டம் உரிமை அளித்திருக்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சமூகம், ஜாதி, பாலினம் அல்லது பிராந்தியப் பாகுபாடுகளால் இந்த நாட்டு மக்கள் துன்புறுத்தப்பட்டார்கள் அல்லது கொல்லப்பட்டார்கள் என்பதை நாம் கண்டோம். பகுத்தறிவாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தேவையில்லை என்று கருதப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள். பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது வன்முறைகள் ஏவப்படுகிறது.
நாம் வளங்களை விரும்புகிறோம். வேலைகளை உருவாக்க வேண்டும். கல்வி, ஆராய்ச்சி, சுகாதாரம் மற்றும் சமவாய்ப்புகள் எல்லோருக்கும் வேண்டும். இந்த நாட்டின் பன்முகத்தன்மையையும், ஜனநாயகத்தையும் காப்பது நமது அடிப்படைக் கடமை.�,