அதிமுகவில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் அளித்த 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார். தற்போதைய நிலையில் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் எம்.எல்.ஏ.க்களில் வெற்றிவேலை தவிர மற்ற 20 பேரும் கர்நாடக மாநிலம் கூர்க் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தகுதி நீக்கத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர். இதற்கிடையே எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ததன் மூலம் சட்டமன்றத்தின் பலத்தை குறைத்து,எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முயல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
தமிழக சட்டமன்றத்தை பொறுத்தவரை மொத்தம் 234 +1 இடங்கள் உள்ளன. அதில் நியமன உறுப்பினருக்கு வாக்களிக்கும் தகுதி கிடையாது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவினால் ஒரு உறுப்பினரின் இடம் காலியாக உள்ளது. எனவே முன்பு சட்டமன்றத்தின் மொத்த பலம் 233 ஆக இருந்து வந்தது. தற்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்படுள்ள நிலையில், சட்டமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் பலம் 233 லிருந்து 215 ஆக குறைந்துள்ளது.
அதன்படி பார்த்தால் தற்போது சட்டப்பேரவையில் ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சபாநாயகர், தினகரன் அணியிலிருந்து மாறிய ஜக்கையன் ஆகியோரை சேர்த்து 111 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது( சட்டமன்றத்தில் வாக்கெடுப்பின் போது சமபலம் நிலவும்போது சபாநாயகர் வாக்களிக்கும் உரிமை பெறுவார்).
தினகரன் அணிக்கு நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் போக இரண்டாவது கட்டமாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த விருத்தாச்சலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி, கூட்டணி எம்.எல்.ஏவான கருணாஸ் உள்பட 3 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது.( இவர்கள் மீது சபாநாயகர் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை).
எதிர்க்கட்சியான திமுக கூட்டணியைப் பொறுத்தவரை திமுகவுக்கு 89 எம்.எல்.ஏ.களும், காங்கிரஸுக்கு 8எம்.எல்.ஏக்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர் 1 என 98உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றிபெற்ற தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் தங்களது நிலைப்பாட்டை இன்னும் தெரிவிக்கவில்லை. இதில் தமிமுன் அன்சாரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நீக்கப்பட்டதை ஜனநாயகப் படுகொலை என்று விமர்சித்துள்ளார்.
இந்த நிலையில் மொத்தமுள்ள 215 உறுப்பினர்களில், அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 108 எம்.எல்.ஏ.களின் ஆதரவு தேவைப்படுகிறது. தற்போதைய நிலையில் ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க சபாநாயகர் இல்லாமல் 110 எம்.எல்.ஏ.களின் ஆதரவு இருப்பதால் உடனே சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுங்கட்சியினர் முயற்சி செய்கின்றனர். ஆனால் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வரும் 20ஆம் தேதி வரை தடை விதித்திருப்பதாலும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ,க்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாலும் தற்போதைய நிலையில் ஆளுங்கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது.
மேலும் தகுதி நீக்கத்தை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சார்பில் தொடரப்படும் வழக்கில், தினகரன் தரப்புக்கு சாதகமான பதில் வந்தால் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் தெரிகிறது.�,