காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதில் காஷ்மீரிகளின் பங்கு என்ன?
இந்திய வான்படை விமானி அபிநந்தனை நிபந்தனையின்றி விடுவித்தற்காக உலகப் புகழ்பெற்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தான் நோபல் பரிசுக்குத் தகுதியானவன் அல்ல எனச் சொல்லியிருப்பதன் மூலம் மீண்டுமொருமுறை கவனத்தை ஈர்த்திருக்கிறார். பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் பயங்கரவாத இயக்கங்கள் சிலவற்றுக்குத் தடை விதித்திருக்கிறார், அவற்றின் முன்னணித் தலைவர்களில் சிலரையும்கூடக் கைது செய்திருக்கிறது பாகிஸ்தான் அரசு. இந்திய ராணுவம், பாகிஸ்தான் பயங்கரவாத இயக்க முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பாகிஸ்தான் சரணடைந்துவிட்டதாக இந்திய ஊடகங்களில் சிலவும் மோடி ஆதரவு வலைப்பதிவர்கள் சிலரும் பெருமிதப்பட்டுக் கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறாரா ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்?
அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தான் தகுதியானவன் அல்ல எனச் சொன்ன பாகிஸ்தான் பிரதமர் கூடவே காஷ்மீர் பிரச்சினைக்கு யார் உண்மையான தீர்வைக் கண்டடைகிறார்களோ அவர்களே அதற்குத் தகுதியானவர்கள் எனக் கூடுதலாக ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறார். தனது இந்தக் கருத்தின் மூலம் மறைமுகமாக இந்திய – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நிலவி வரும் பதற்றத்துக்கான வேர்களைப் பற்றிப் பேசுமாறு இந்திய – பாகிஸ்தான் மக்களையும் சர்வதேசச் சமூகத்தையும் கேட்டுக்கொள்ள முயன்றிருக்கிறார்
**காஷ்மீரின் மீது உலகின் கவனம்**
மூன்று நாட்களுக்கு முன்னால் ஐரோப்பிய நாடாளுமன்றக் கூட்டத்தில் புல்வாமா தாக்குதல் பற்றியும், இந்திய வான்படை நடத்திய தாக்குதல் பற்றியும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. காஷ்மீர் மக்களின் மீது இந்திய ராணுவம் செலுத்திவரும் வன்முறையைத் தடுத்து நிறுத்துமாறு இந்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றம் நிலைமையை ஆராய குழு ஒன்றையும் அனுப்புவதற்கான முகாந்திரங்களைப் பற்றியும் விவாதித்திருக்கிறது. காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக நடைபெறும் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் காஷ்மீர் மக்களின் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும் என யோசனை கூறியிருக்கிறது. இம்ரான் கானும் அதை வலியுறுத்தத் தொடங்கியுள்ளார். காஷ்மீர் குறித்த எந்தப் பேச்சுவார்த்தையிலும் காஷ்மீர் மக்களின் கருத்தறிவதற்கான இடம் அளிக்கப்பட்டதற்குச் சான்றுகள் இல்லை.
புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச ஊடகங்களும் பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் Dawn பத்திரிகையும் காஷ்மீர் சிக்கலின் வேர்களைப் பற்றிய கேள்விகளை எழுப்பத் தொடங்கியிருக்கின்றன. காஷ்மீர் பிரச்சினை, இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினை என்பதற்கப்பால் மனித உரிமைகள் சார்ந்த விஷயமாகவும், அரசியல் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ளப் போராடும் தேசிய இனங்கள் எதிர்கொள்ளும் அரசியல் ராணுவ அத்துமீறல்கள் தொடர்பான பிரச்சினையாகவும் சர்வதேச அரங்கில் உருவெடுப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.
அப்படி உருவாகக்கூடுமானால் இந்தியாவும் பாகிஸ்தானும் பல கேள்விகளை எதிர்கொண்டாக வேண்டும்.
**காஷ்மீரும் இந்தியாவும்**
காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கும் இந்திய அரசு, அது இந்தியாவின் ஒரு பகுதியானது எப்படி என்பதைப் பற்றிப் பேச மறுக்கிறது. சுதந்திரத்துக்குப் பிறகு 1947இல் ஜம்மு காஷ்மீரில் நிலவிய அசாதாரண சூழலைப் பயன்படுத்திக்கொண்டு அப்போதைய இந்திய கவர்னர் ஜெனரல் மௌன்ட் பேட்டன் பிரபு காஷ்மீரை ஆண்டுவந்த மன்னர் ஹரிசிங்குடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி இந்தியா காஷ்மீரை ஆக்கிரமித்ததாகப் பலர் குற்றம் சுமத்தி வருகிறார்கள். பூஞ்ச் பகுதியில் மன்னனுக்கெதிராக மூண்ட கலவரமே அதற்குக் காரணம். பூஞ்ச் போராளிகள் காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் எனப் போராடினர். காஷ்மீரின் சில பகுதிகளைக் கைப்பற்றி ஆஸாத் காஷ்மீர் எனப் பெயரிட்ட பூஞ்ச் போராளிகள் அப்போதே மன்னருக்கெதிராகவும் இந்திய ராணுவத்துக்கு எதிராகவும் கொரில்லா போராட்டங்களை நடத்தினர். பாகிஸ்தான் அவர்களுக்கு ஆதரவளித்தது. பயங்கரவாதத்தின் வேர் அதுதான்.
காஷ்மீர் மக்கள்தொகையில் 70 சதவிகிதத்தினர் இஸ்லாமியர்கள், 20 சதவிகிதத்தினர் இந்துக்கள். இந்தக் கணக்கு எப்படி காஷ்மீரின் மீது உரிமை கொண்டாடுவதற்கு பாகிஸ்தானுக்கு உதவாதோ அப்படியே அதை இந்து – இஸ்லாமியச் சமூகங்களுக்கிடையேயான மதரீதியான சிக்கலாகப் புரிந்துகொள்வதற்கும் உதவாது. 1947 முதல் காஷ்மீரைப் பங்குபோட்டுக்கொள்வதில் இந்திய – பாகிஸ்தான் ராணுவத்துக்கும் பயங்கரவாதக் குழுக்களுமிடையே நடைபெற்றுவரும் போர்களும் மோதல்களும் ஜம்மு – காஷ்மீர் குடிமைச் சமூகத்தை அடியோடு நாசமாக்கியிருக்கின்றன. இரு அரசுகளும் காஷ்மீர் மக்களின் விருப்பத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்வதற்கான வழிமுறைகளைப் பற்றிப் பேசவில்லை. பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என இரு நாடுகளையும் சேர்ந்த ஜனநாயகவாதிகளும் மனித உரிமை அமைப்புகளும் கோரிவருகின்றனர். இந்திய – பாகிஸ்தான் அரசுகள் அதைப் பொருட்படுத்தவில்லை.
மத ரீதியான கணக்குகள்தாம் பிரிவினைக்குக் காரணமானது. இந்திய – பாகிஸ்தான் நாடுகளில் வேரூன்றியிருந்த அடிப்படைவாத அரசியல் ஆசைகளின் மோசமான விளைவுகளை இரு நாடுகளும் சந்தித்து வருகின்றன. இந்து – இஸ்லாமியச் சமூகங்களுக்கிடையே வரலாற்று ரீதியில் நிலவிவந்த வேற்றுமைகளைப் பகைமையாக மாற்றிய காலனியக் கோட்பாடுகளைச் சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்திய – பாகிஸ்தான் அரசுகள் அப்படியே பின்பற்றியதன் விளைவுகளே இன்றைய பயங்கரவாதமும் ராணுவ நடவடிக்கைகளும்.
**தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை**
சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபபாய் பட்டேல் சமஸ்தானங்களையும் நிஜாம்களையும் இந்திய ஒன்றியத்தில் இணைப்பதற்கு ராணுவத்தையே பயன்படுத்தினார்.
மத, இன, மொழி, ரீதியில் வேறுபட்டிருந்த பல சமூகங்கள் அந்த இணைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. தெலங்கானா விவசாயிகள் ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர். தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் தனித்தமிழ் நாடு கோரிக்கையை முன்வைத்துப் போராடின. இப்போதும் சிலர் சுதந்திரமான தமிழ்நாட்டைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவை தேசிய இனங்களின் சிறைச்சாலை என்னும் விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.
அசாம், நாகாலாந்து, மணிப்பூர், பஞ்சாப் உள்ளிட்ட எல்லைப்புற மாகாணங்களில் பிரிவினைக் கோரிக்கைகளை முன்வைத்துப் பல்வேறு இயக்கக்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருந்தன. சுதந்திர காலிஸ்தான் கோரிப் போராடிய சீக்கியர்களின் ஆயுதந்தாங்கிய போராட்டம் 1984 இந்திரா காந்தி படுகொலை வரை நீடித்தது. அசாம், மணிப்பூர், மேகாலயா, அருணாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் இதே நிலைதான்.
தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை பற்றிய பேச்சுகள் 1947க்கு முன்பே சர்வதேச சமூகங்களில் நடைபெற்றுக்கொண்டிருந்தவை. அக்டோபர் புரட்சிக்குப் பிந்தைய சோவியத் யூனியனின் அரசியலமைப்புச் சட்டத்தில் தேசிய இனங்களுக்குப் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. 1980களில் அப்போதைய சோவியத் யூனியனுடன் இணைந்திருந்த பல தேசிய இனங்கள் ஒப்பீட்டளவில் அமைதியான முறையில் பிரிந்து செல்ல முடிந்ததற்கு அது உதவியது.
வெவ்வேறு தேசிய இனங்கள் சுயவிருப்பத்தின் அடிப்படையில் இணைக்கப்படாத எந்த ஒரு கூட்டமைப்பும் பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் மற்றொரு புறத்தில் பாசிசத்துக்கும் இரையாவது தவிர்க்க முடியாதது. இலங்கை அதற்குச் சரியான உதாரணம். காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் எல்லைப்புற மாநிலங்களில் நீடித்துவரும் பயங்கரவாத, ராணுவ நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு மட்டுமல்லாது மொத்த இந்தியாவின் நலன்களுக்கும் எதிரானதுதான்.
இந்தியா அதைப் புரிந்துகொள்ள முன்வர வேண்டும்.
காஷ்மீர் சிக்கல்களுக்கான வேர்களைக் கண்டறியவும் அந்த மாநில மக்களின் பங்கேற்புடன் கூடிய முத்தரப்புப் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வு காண்பதைப் பற்றி இருநாட்டுத் தலைவர்களும் யோசிக்க வேண்டும். அப்படிச் செய்தால் அமைதிக்கான நோபல் பரிசை இருநாட்டுத் தலைவர்களும் கூட்டாகப் பகிர்ந்துகொள்ள முடியும்.
அதைவிட முக்கியமாக இந்தப் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட முடியும்.
[உண்மையில் மோடிக்கு வேறு வழியில்லை](https://minnambalam.com/k/2019/03/04/19)�,”