கவுகாத்தியில் உள்ள ஆம்சாங் வனவிலங்குகள் சரணாலயத்தில் யானைகள் வலம் வரும் பாதையில் ஆணிகள் பதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் மேனகா காந்தி.
அசாம் மாநிலத் தலைநகர் கவுகாத்தியில் ஆம்சாங் வனவிலங்குகள் சரணாலயம் அமைந்துள்ளது. இதன் அருகே அமைந்துள்ள ராணுவ அலுவலக வளாகத்தினுள் யானைகள் அடிக்கடி புகுவதாகப் புகார் எழுந்தது. இதனைத் தடுக்கும் பொருட்டு, காட்டில் யானைகள் வலம் வரும் பாதையில் ஆணிகளைப் பதித்தனர் ராணுவத்தினர். யானைகள் கால் தடம் பதிக்காமல் இருக்க, இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கடந்த 4ஆம் தேதியன்று இதில் கால் பதித்ததனால் ஒரு யானை பலியானது. இந்த ஆணிகளில் கால் பதித்து, அதன் காலில் ஏற்பட்ட புண்ணின் காரணமாக உயிரிழந்தது வனத் துறையினரால் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இதுவரை இரண்டு யானைகள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதனை எதிர்த்துக் குரல் எழுப்பியுள்ளார் மத்திய அமைச்சர் மேனகா காந்தி. இது குறித்து ராணுவத் தலைமை வகிக்கும் பிபின் ராவத்திடம் பேசியதாகவும், அவர் இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்போவதாக உறுதியளித்ததாகவும் கூறியுள்ளார். “காட்டின் நடுவே, உயிரைப் பறிக்கும் பயங்கரமான ஆணிகளைப் பதிக்க வேண்டிய அவசியம் என்ன? நமது நாட்டில் 15,000க்கும் குறைவான யானைகளே உள்ளன. அவற்றையும் நாம் கொல்லப் போகிறோமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
2017ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 27,312 யானைகள் உள்ளன. உலகம் முழுக்க இருக்கும் யானைகளில் இது 55 சதவிகிதம் ஆகும்.
கடந்த 2010 முதல் இப்போதுவரை, அசாம் மாநிலத்தில் 249 யானைகள் உயிரிழந்துள்ளன. வேட்டையாடுதல், ரயிலில் அடிபடுதல், விஷம் உண்ணுதல், மின்சாரத் தாக்குதல் காரணமாக நாடு முழுவதும் அதிகமான எண்ணிக்கையில் யானைகள் உயிரிழந்து வருவதாகத் தெரிவித்துள்ளது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம். கடந்த 5 ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது.
�,”