தொழிலாளர்களுக்கு எதிராக யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் செயல்படுவதைக் கண்டித்து, இன்று தமிழகம் முழுவதுமுள்ள யமஹா விற்பனை நிலையங்கள் முன்பாக சிஐடியூ தொழிற்சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னை ஓரகடத்தில் பன்னாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களின் ஆலைகள் வரிசையாக அமைந்துள்ளன. கடந்த செப்டம்பர் 20ஆம் தேதியன்று, இரண்டு தொழிலாளர்கள் யமஹா நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 700 பணியாளர்கள் வரை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் இருவரும், யமஹா வளாகத்தில் சிஐடியூவுடன் இணைக்கப்பட்ட தொழிற்சங்கத்தினை அமைத்ததுதான் இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது.
செப்டம்பர் 26ஆம் தேதியன்று நடைபெற்ற போராட்டத்தின்போது, யமஹா நிறுவன வளாகத்திலுள்ள மொபைல் டவர் மீது சில தொழிலாளர்கள் ஏறியதாகப் புகார் கூறப்பட்டது. இதன் அடிப்படையில், 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, இந்த போராட்டத்தை அடக்குமுறையால் தமிழக அரசு ஒடுக்கப் பார்ப்பதாகக் குற்றம்சாட்டினர் சிஐடியூ தொழிற்சங்கத்தினர். ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது சட்ட விரோதமானது என்று தமிழகத் தொழிலாளர் நல இணை ஆணையர் கூறியதாகவும் தகவல் வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய யமஹா மோட்டார் தொழிலாளர் சங்கம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
பன்னாட்டு நிறுவன ஆலைகளில் தொழிற்சங்க உரிமைகளை வலியுறுத்தி, இன்று (நவம்பர் 2) தமிழகம் முழுவதுமுள்ள யமஹா விற்பனை நிலையங்கள் முன்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் சிஐடியூ தொழிற்சங்கத்தினர். பல இடங்களில் போராட்டம் நடத்தியவர்களைக் கைது செய்தனர் போலீசார். பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலையில் சேர்க்க வேண்டுமென்று சிஐடியூ கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத் தொழிலாளர் நலத் துறையின் அறிவுரைகளை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தும் வகையில் தமிழக அரசானது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கூறியுள்ளது. இப்போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று தெரிவித்துள்ளது சிஐடியூ.
[வெறும் கூலிப் போராட்டம் அல்ல!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/10/31/22)
[நாட்டுக்கே வழிகாட்டும் சென்னைத் தொழிலாளர்கள்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2018/11/01/6)�,