பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங் இருவரும் மாமல்லபுரம் பகுதியை பார்வையிட்டு உரையாடினர்.
இந்தியா-சீனா இடையே நடைபெறும் இரண்டாவது முறைசாரா உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள சீன அதிபர் ஜீ ஜின்பிங் இன்று (அக்டோபர் 11) பிற்பகல் 2.15 மணியளவில் சென்னை விமான நிலையம் வருகை தந்தார்.
தமிழக மண்ணில் முதல்முறையாக கால்பதித்த சீன அதிபரை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். விமான நிலையத்தின் அருகிலேயே சீன அதிபருக்கான வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழகத்தின் பாரம்பரிய கலைகளான பரதநாட்டியம், மயிலாட்டம், ஒயிலாட்டம் ஆகியவற்றை சிறிது நேரம் கண்டுகளித்த சீன அதிபர், தனது பயணத்துக்காக பிரத்யேகமாக கொண்டுவரப்பட்ட கார் மூலமாக கிண்டி ஐடிசி சோழா ஹோட்டலுக்கு புறப்பட்டுச் சென்றார்.
சிறிது நேரம் ஓய்வுக்குப் பின்னர் மாலை 4.30 மணியளவில் கிண்டியிலிருந்து மாமல்லபுரம் புறப்பட்டார் ஜீ ஜின்பிங். அவருடன் 20 கார்கள் வரை அணிவகுத்துச் சென்றன. வழிநெடுக சீன அதிபரை வரவேற்று அலங்கார வளைவுகளும், தோரணங்களும் அமைக்கப்பட்டிருந்தன. கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காரிலிருந்து அதனை ரசித்தபடியே மாமல்லபுரம் சென்று சேர்ந்தார்.
சீன அதிபரின் வருகை காரணமாக சென்னை மத்திய கைலாஷில் இருந்து ராஜீவ் காந்தி சாலை வழியாக செல்லும் வாகனங்கள் அடையாறு நோக்கி திருப்பிவிடப்பட்டன. திருவான்மியூர் சந்திப்பில் இருந்து ராஜீவ்காந்தி சாலை செல்லும் வாகனங்கள் வேறுவழியாக அனுப்பப்பட்டன. இதற்கிடையே சீன அதிபரை வரவேற்பதற்காக கோவளத்தில் இருந்து தமிழரின் பராம்பரிய உடையான வேட்டி, சட்டை மற்றும் துண்டு அணிந்து பிரதமர் மோடி மாமல்லபுரத்திற்கு வந்தார்.
மாமல்லபுரம் வந்தடைந்த சீன அதிபர் ஜின்பிங்கை அர்ஜூனன் தபசு பகுதியில் பிரதமர் மோடி வரவேற்று அழைத்துச் சென்றார். அதனைத் தொடர்ந்து அர்ஜுனன் தபசு பகுதிக்கு உள்ளே சென்ற சென்று இருவரும் பார்வையிட்டபடி உரையாடினார். அப்பகுதியில் இருந்த சிற்பங்களின் சிறப்பம்சங்கள் ஒவ்வொன்றாக ஜின்பிங்கிடம் மோடி விளக்கினார். அங்கு இருவரும் கைகுலுக்கியபடி புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். வெண்ணெய் உருண்டை பாறை பகுதிக்குச் சென்று பார்வையிட்ட பின்னர், வானிறைக் கல் முன்பு நின்றபடி இருவரும் கைகைளை உயர்த்தி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து ஐந்துரதம் பகுதிக்குச் சென்ற இருவரும், அங்கு போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து இளநீரை பருகியவாறே உரையாடினார். ஐந்துரதம் பகுதியின் சிற்ப வேலைப்பாடுகள் குறித்து ஜின்பிங்கிடம் பிரதமர் விளக்கினார். அதன்பின்னர் கடற்கரை கோயில் பகுதிக்குச் சென்றனர். இரு நாட்டுத் தலைவர்களின் வருகையொட்டி, கடற்கரை கோயில் வண்ண விளக்குகளால் ஒளிர்ந்தது. பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சிகளை இருவரும் ஒன்றாக அருகருகே அமர்ந்து பார்வையிட்டனர்.
�,