ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் 27 வயது ஆய்வு மாணவி ஷேஹ்லா ரஷீத், அகில இந்திய மாணவர் இயக்கத்தின் சார்பாக போட்டியிட்டு ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் வென்ற முதல் காஷ்மீரிப் பெண். காஷ்மீரிப் பெண் என்பதாலேயே, தீவிரவாதியா? என விசாரிக்கப்பட வேண்டியவர் என்று பாஜக-வினரால் பிரச்சாரம் செய்யப்பட்டவர். கன்ஹையா குமார், உமர் காலித் என அவரது இயக்கத் தோழர்கள்மீது தேசத் துரோக வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளநிலையில் தொடர்ந்து போராட்டங்களை முன்னின்று நடத்தி வருபவர் ஷேஹ்லா ரஷீத். நேரு பல்கலைக்கழகத்தைக் குறிவைத்து வலதுசாரிகள் தாக்குதல் தொடுத்திருக்கும்நிலையில் ஜேஎன்யு மாணவர் இயக்கத் துணைத்தலைவர் ஷேஹ்லா ரஷீத் உடனான பத்திரிகையாளர் அனு புயனின் நேர்காணல்.
அனு: தற்போதையநிலையில் தேசபக்தர் யார்? தேசத்துரோகி யார்? என்பதை யார் தீர்மானிப்பது? அதைத் தீர்மானிப்பதற்கு யாருக்கேனும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறதா?
ஷேஹ்லா: தேசியவாதம் தொடர்பான உரையாடலை, இன்றைய நிலையில் பெரும்பான்மைவாத உணர்வுதான் தீர்மானிக்கிறது. இவை அனைத்தும் ஒரு குழு மனப்பான்மையின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது. பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி, 2012 ல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, தன்னுடைய விளம்பரத் தரகர்கள்மூலம், மோடிக்கு எதிராக யார்? எதைச் சொன்னாலும், அவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்தினர். இன்றைக்கும் அதுவே எதார்த்தமாகி இருக்கிறது. சில காலத்துக்கு முன்புவரை யாருமே கண்டுகொள்ளாமல் இருந்த சிறிய குழுக்கள், இன்று மைய நீரோட்டத்துக்கு வந்திருக்கிறது. இங்கே இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று: மதவாதம். மற்றொன்று: முன்னேன்றம். இவற்றில் எது ஒன்றைக் குறித்தும் தர்க்கரீதியாகக் கேட்டால், உங்களுக்கு தேசவிரோதி என்னும் முத்திரை குத்தப்படும். நமது ஒவ்வொருவரின் நாட்டுப்பற்றை ஒரு ரவுடியிச கும்பல் சோதித்து, சான்றிதழ் வழங்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம் என்றால், அது கண்டிப்பாக பெரிய விபத்துதான்.
அனு: யார் இந்தியன், யார் இந்தியனல்ல என்ற இருப்பைப் பற்றிய கேள்வியை எல்லோரும் விவாதித்து வருகிறோம். இந்த ஐந்தாண்டு ஆட்சியின் மிகப்பெரிய கேள்வியாக இது உருவெடுக்கும் என்று நினைக்கிறீர்களா?
ஷேஹ்லா: என்னைப் பொறுத்தவரை, இது மேலும் மோசமடையும் என்றே நினைக்கிறேன். மேற்குவங்கம் மற்றும் உத்திரப்பிரதேச தேர்தல்கள் நெருங்கும் வேளைகள், அதற்கான முன்னறிவிப்பாக இருக்கும் என்றே நினைக்கிறேன். உத்தரப்பிரதேசத்திலும், மேற்குவங்கத்திலும் கலவரங்கள் ஏற்படுத்தப்படும் என்று நினைக்கிறேன். இப்போது நடப்பவை அனைத்தும் முன்னோட்டம்தான். மோசமானவை மேலும் நிகழ இருக்கின்றன. நீதிக்கான எங்கள் இயக்கங்கள், ரோஹித் வெமுலாவுக்கான எங்கள் இயக்கங்கள் பாஜக அரசை உண்மையாக அம்பலப்படுத்தின. ஆனால், ”இந்த மாணவர்களை நம்பாதீர்கள், நாங்கள் ஏற்கனவே கூறியதைப்போல, அவர்கள் தேசத் துரோகிகள். அது தற்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.” என்றுகூறி, அவர்களால் மீண்டு வர முடிந்திருக்கிறது. எனினும், கன்ஹையா கைது செய்யப்பட்டதால், நாங்கள் சந்தித்த பின்னடைவு அவர்களுக்கு எதிராகவே திரும்பியிருக்கிறது.
அனு: சில ஆண்டுகளுக்கு முன்னால் ஊழல் எதிர்ப்பு இயக்கமும், ஆம் ஆத்மி கட்சியும் உச்சத்தில் இருந்தபோது, நடுத்தர வர்க்கத்தினர் பெரிய அளவில் போராட்டங்களில் பங்கெடுத்தார்கள், ஆனால், குறுகியகாலத்தில் அது முடிவுக்கு வந்தது. அதுபோன்ற மக்கள் திரள் போராடுவதற்காக மீண்டும் தெருவுக்கு வருமா, என்ற சந்தேகம்தான் மக்களுக்கு வந்தது..
ஷேஹ்லா: பாராளுமன்றத்தைப் பாருங்கள், அங்கே எதிர்க்கட்சியே இல்லை. அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிரான எதிர்ப்பு என்பது கட்சிகளிடமிருந்து இல்லாமல், மாணவர்களிடம் இருந்துதான் வருகிறது. மக்களின் அதிகாரத்தை கேள்வி கேட்பதற்குப் பதிலாக, அதிகாரத்தோடு ஒத்துப்போகத் தொடங்கிவிட்டார்கள். கடைசி மனிதர்களுக்காக, சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்காக, மாணவர்கள்தான் எது சரியோ, அதன் பக்கம் தொடர்ந்து நிற்கிறார்கள். யாரோ ஒருவர் இட்ட கோஷத்துக்காக நாங்கள் தாக்குதலை எதிர்கொள்ளவில்லை. உண்மையில், சரியான செயல்களில் உறுதியாக இருப்பதால்தான் இவற்றை எதிர்கொள்ள நேரிடுகிறது. மாணவர்களுடைய இன்றைய பொறுப்பு மிகவும் பெரியது. மாணவராக இருப்பதின் பொருள் என்ன? கேள்வி கேட்பதுதானே? மாணவர்களாக அதுதான் அதிக முக்கியத்துவம் வாய்ந்த கடமையாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். எதிரிகளை மட்டுமல்ல; நம்மை நாமே கேள்வி கேட்க வேண்டும். கடுமையான விவாதங்களை மேற்கொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள் சுயமரியாதையோடு இயங்கக்கூடிய இடமாக பல்கலைக்கழகம் இருக்க வேண்டும், அப்படித்தான் நாடும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். நேர் எதிர் அரசியல் கருத்துகள் சகிப்புத்தன்மையோடு மோதும் இடமாக ஒட்டுமொத்த நாடும் இருக்க வேண்டும்
அனு: நீங்கள் முன்வைக்கும் கல்விரீதியான கோரிக்கைகளுக்கும், அரசியல், சாதிரீதியாக முன் அரங்கத்திற்கு வந்திருக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வாக என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்? இரண்டையும் குழப்புவது சரியான அணுகுமுறையாக இருக்குமா?
ஷேஹ்லா: நாங்கள் எதையும் செய்யாமலேயே இயக்கங்களுக்கு இடையில் ஒற்றுமை உணர்வு வளர்ந்திருக்கிறது. ’ஆய்வு உதவித் தொகைக்காக நடந்த மானியக் குழுவை கைப்பற்றுவோம்’ (OccupuUGC) என்னும் போராட்டத்துக்கு தேசம் முழுவதும் இருந்து, முன்பு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு மாணவர்களின் ஆதரவு கிடைத்தது. எதையுமே செய்யாமல் ரோஹித்தின் மரணத்துக்கு நீதிகேட்டு நடந்த போராட்டங்களும், உதவித் தொகைக்காக நடந்த போராட்டங்களும் மாணவர்களிடையே அர்த்தம் நிறைந்தவகையில் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஒற்றுமை, அரசுக்கு எதிரானதாகவும் மாறி வருகிறது. இதுவேதான், ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரத்தின் செயல்திட்டத்துக்கு மரண அடியாகவும் இருக்கப்போகிறது. Hokolorob அல்லது Pinjra Tod மற்றும் OccupyUGC-இல் இருந்து ரோஹித்துக்கான போராட்டம்வரையிலும் அனைத்தும் தன்னிச்சையாக நடந்ததுபோலவே நிகழ்ந்தது.
அனு: தற்போதைய நிலையை அவசரநிலைக் காலத்தோடு ஒப்பிடுவது சரிதானா?
ஷேஹ்லா: அவசரநிலைக் காலத்தில் நான் பிறந்தே இருக்கவில்லை, 80களில்தான் பிறந்தேன். ஆனால், நண்பர்களிடமிருந்து கேட்கும்போது அப்போது, அறிவிக்கப்பட்ட அவசரநிலை வந்தது, இப்போது அறிவிக்கப்படாமல் வந்திருக்கிறது என்றுதான் புரிந்துகொள்ள முடிகிறது. காவல்துறையினர், கல்லூரி வளாகத்துக்குள் நுழைவது, மாணவர் சங்கத் தலைவரைக் கைது செய்வது போன்றவை எல்லாம் அவசரநிலைக்குப் பிறகு நடக்கவில்லையே! சகிப்பின்மை என்பது இதை விளக்கப் பயன்படும் மிக மென்மையான சொல். இதற்குப் பெயர் ஃபாசிசம். நீதிமன்றத்தில் நீதி பெறுவதற்குச் சென்றால், காவல்துறை வேடிக்கை பார்த்து நிற்க, ஒரு கும்பலால் நீங்கள் தாக்கப்படுவதற்குப் பெயர் ஃபாசிசமல்லாமல் வேறென்ன? இது ஃபாசிசத்தைவிட, சகிப்பின்மையை விட கொடூரமானதாகும். என்ன வித்தியாசத்தைப் பார்க்க முடிகிறது? நிறுவனங்களின் செயல்பாடுகள்தான் முடக்கப்பட்டன. ஆனால், மக்களின் சுயநிலை என்பது வலிமையானதாக இருந்த காரணத்தால் அவசர நிலை பிரகடனத்தைத் தூக்கியெறிய முடிந்தது. அடுத்து வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வை தூக்கியெறிந்து அதே வரலாறு திரும்பும் என்று கருதுகிறேன். ஆர்.எஸ்.எஸ். தற்போதைய செயல்திட்டத்தில் அரசு நிறுவனங்களை தம்முடைய இலக்காக வைத்திருக்கவில்லை. மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் விதைகளைத் தூவி வருகிறது. இந்தியா தற்போதும் வாழத் தகுதியுடையதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கிறதென்றால் அது அரசு நிறுவனங்களால் அல்ல. உச்சநீதிமன்றம் உட்பட சில நிறுவனங்கள் தவிர, மற்றவை காலாவதியாகிவிட்டன. சாதாரண மக்களிடையே நிலவும் இணக்கமான சூழல்தான் நாம் ஒரு சமூகமாக வாழ்வதற்கு உதவி செய்து வருகிறது. அந்த நல்லிணக்கத்தை தகர்ப்பதற்காகத்தான் ஆர்.எஸ்.எஸ். ஓயாமல் முயன்று வருகிறது. அரசு நிறுவனங்களை காலி செய்வதைவிட, மக்களிடையே நிலவும் நல்லெண்ணத்தை உடைப்பதற்குத்தான் விரும்புகிறது. மக்களிடையே நிலவும் சமூகப் பிணைப்பை தகர்த்து, கலவரங்களை உருவாக்கி, குளிர்காய விரும்புகிறது. ஒரு சமூகமாக அதை எதிர்கொண்டு பிழைக்கமுடியுமா என்று தெரியவில்லை. ஹிட்லரின் ஜெர்மனியில் மக்கள் அண்டை வீட்டார்களை கைவிட்டார்கள். மக்களில் சிலர் சகமனிதர்களைக் காப்பாற்றவும் செய்தார்கள். ஆனால், ஒற்றைத் தலைவனை எந்தவித கேள்வியும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளும் இந்த கீழ்ப்படியும்தன்மை என்பது மிகவும் ஆபத்தானது. இந்தியச் சமூகம், எதையும் கேள்வி கேட்காமல் கடந்துபோகும்படியாக, இதற்குமுன் எப்போதும் இருந்திருக்காது என்றே நினைக்கிறேன். அதனால்தான் அமர்த்தியா சென் போன்றவர்கள் ’வாதிடும் இந்தியன்’ (Argumentative Indian) போன்றவற்றை எழுதுகிறார்கள். ஆனால், இன்று கீழ்ப்படியும் இந்தியர்களைக் காண நேர்கிறது. இதை நாஜிக்களின் ஜெர்மனியோடுதான் ஒப்பிடத் தோன்றுகிறது. இதிலிருந்து இந்தியா மீள வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
அனு: பிப்ரவரி 9ம் தேதி, அஃப்சல் குரு தொடர்பான நிகழ்ச்சியில் நீங்களும் இருந்தீர்களா?
ஷேஹ்லா: நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நானும் இருந்தேன். சங்க உறுப்பினர்கள் அங்கே இருக்கவேண்டும். நாங்களும் இருந்தோம். ஏபிவிபி உறுப்பினர்கள் அங்கே கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். யாருக்கும் அங்கே நிகழ்ச்சி நடத்த உரிமை உண்டு. ஏபிவிபி-யினர் ஆர்ப்பாட்டம் செய்ய விரும்பினால், அமைதியான முறையில் அதைச் செய்யலாம். அங்கே நாங்கள் ஆதரிக்காத சில கோஷங்கள் எழுப்பப்பட்டன என்பது உண்மைதான். ஆனால், சிறிது நேரத்துக்குப் பிறகு அது நின்றுவிட்டது. நானே தனிப்பட்ட முறையில் அப்படியான முழக்கங்களை எழுப்பாதீர்கள்! என்று கேட்டுக் கொண்டேன். அதன்பிறகு, நாங்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டோம். பேரணி அமைதியான முறையில் நடப்பதை உறுதிசெய்வதற்கு சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் நிகழ்விடத்தில் இருந்தனர். நாங்கள் அத்தகைய கோஷங்களுடன் உடன்பட்டுப் போகவில்லையென்றாலும், வெறும் கோஷத்துக்கு தேசத் துரோக வழக்கு என்பது பொருத்தமில்லாத ஒன்றுதான்.
அனு: நீங்கள் அங்கே இருந்தபோது, அஃப்சல் குருவின் தூக்கு குறித்து கேள்வி எழுப்பப்படும் என்று அறிந்திருந்தீர்களா?
ஷேஹ்லா: இங்கே இரண்டு கேள்விகள் இருக்கின்றன. அஃப்சல் குருவின் வழக்கு தொடர்பாக நிகழ்ச்சி நடத்துவதற்கு யாருக்கேனும் அனுமதி உண்டா? நான் இருக்கிறதென்று நினைக்கிறேன். மாற்று கருத்துகளை இப்படித்தான் நசுக்கப்போகிறோமென்றால், நம்மால் ஒருவரைக் கூட நமது பக்கம் வென்றெடுக்க முடியாது. பல தேசிய அளவிலான சட்டப் பல்கலைக்கழகங்களில் அஃப்சல் குருவின் வழக்கு தொடர்பாக கருத்தரங்கங்கள் நடந்திருக்கின்றன. நீதிபதி ஏபி ஷா, அஃப்சலின் தூக்கு தொடர்பான தனது மாற்றுக் கருத்தை மிக அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார். இவர்கள் எல்லோரையும் நாம் சிறையில் அடைக்கப் போகிறோமா? ஒருங்கிணைவதற்கும், போராடுவதற்கும் உரிமை உண்டுதானே? நிகழ்வை ஒருங்கிணைப்பதற்கு உரிமை இருப்பதாக நம்புகிறோம். துணைவேந்தர் அதிகாரபூர்வ ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. ஓரிடத்தில் 10 மாணவர்கள் கூடி நிகழ்ச்சி நடத்த கண்டிப்பாக அவர்களுக்கு உரிமை உண்டு என்றுதான் நினைக்கிறேன். அடுத்து, அஃப்சல் குரு தியாகியா என்ற கேள்வி வருகிறது. அமைப்புரீதியான சித்தாந்தத்தில் எங்களுக்கும் அதில் சில வேறுபாடுகள் இருக்கலாம். ஜேஎன்யு-வுக்குள்ளேயும் இடதுசாரிகள் மத்தியில் அஃப்சல் குருவின் வழக்கு தொடர்பாக சிறந்த நிலைப்பாடுகள் இருக்கின்றன. அதற்காக, ஏபிவிபி காவல்துறையை ஏவிவிட்டு அந்த நிகழ்ச்சியைத் தடுப்பதற்கு உரிமை படைத்தவர்களா? அவர்களுக்கு அந்த உரிமை இல்லை என்றே நினைக்கிறேன். அவர்கள், தங்கள் மாற்றுக் கருத்தைத் தெரிவிக்கலாம். அவர்களுடைய அரசு ஆளும்நிலையில் இருக்கிற காரணத்தினாலும், உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் காவல்துறை வருவதாலும், மக்களின் நிலைப்பாடுகளை அரசின் பலத்தைக் கொண்டு தீர்மானிப்பார்களா என்ன?
அனு: ஏபிவிபி, எந்த எல்லைவரை தங்கள் மாற்றுக் கருத்தைத் தெரிவிக்கலாம்?
ஷேஹ்லா: பல்கலைக்கழகத்தில் சட்டத்தை கேள்விக்கு உட்படுத்தலாம். காவல்துறை வகுப்பறைக்குள் நுழைந்து, “நீதிமன்றம் 377வது பிரிவு குறித்து ஏற்கனவே கருத்து கூறியிருப்பதால் நீங்கள் இதுகுறித்து எந்த கருத்தரங்கமும் நடத்தக் கூடாது. அது, நீதிமன்ற அவமதிப்புச் செயலாகும்” என்று கூறினால், ஒரு சமூகமாக நாம் முன்னேற்றத்தையும் சந்திக்க முடியாது. காவல்துறை எப்படி இயங்குகிறது என்பது நாம் எல்லோரும் அறிந்ததுதான். அது, அதிகாரம் படைத்தவர்களின் சார்பாக இயங்கும் துறை. இடதுசாரிகள் தங்கள் அரச பலத்தை தவறாகப் பயன்படுத்தினால், அதையும் நாம் கேள்வி கேட்கவேண்டும். சிங்கூர் நந்திகிராமத்தில் மக்களுக்கு எதிராக தனது அரசபலத்தை இடதுசாரிகள் பயன்படுத்தியபோது, இடதுசாரிகள் பெரும்பான்மையாக இருக்கும் ஜேஎன்யு, மக்களைத்தான் ஆதரித்தது. வலதுசாரிகளைவிட இடதுசாரிகளின் நிலைப்பாட்டை இடதுநிலைப்பாட்டில் உள்ளவர்கள்தான் அதிகம் விமர்சிப்பார்கள். வலதுசாரிகள்கூட சகித்துக் கொள்வார்கள்.
அனு: உங்களைப் பொறுத்தவரை எதுதான் தேசத் துரோகம்?
ஷேஹ்லா: தற்போதைய நிலையில் தேசத் துரோகம் என்பது அது விவரிக்கப்படும் தன்மையிலேயே பிரச்சினை உடையதாக இருக்கிறது. எது குற்றம், எது குற்றமில்லை என்பதை அதிகாரவர்க்கம்தான் தீர்மானிக்கிறது. திருமண உறவுக்குள் நடக்கும் வன்புணர்ச்சி என்பது இன்று குற்றமல்ல. ஆனால், அது குற்றம்தான் என்பது நமக்குத் தெரியும். இப்படி பல விஷயங்களைக் கூறலாம். நாம், எதை நோக்கிப் பயணம் செய்யவேண்டும்? வரம்பு நிர்ணயிக்கும் வேலையை செய்வதிலா? அதற்கு முடிவே கிடையாது. இதற்கு தீர்வு என்ன தெரியுமா? தனிநபர்களை சிறையில் அடைப்பது இல்லை, அதற்குமாறாக, சமத்துவ சமுதாயத்தை படைப்பதற்கு உழைப்பதில்தான் இருக்கிறது. எல்லோருக்கும் இது நம்முடைய சமூகம் என்ற எண்ணம் வரும்படி உழைக்க வேண்டும். அதற்கு ஜேஎன்யு சிறந்த எடுத்துக்காட்டு என்று நினைக்கிறேன். இங்கே பெண் தலைவர்கள், ஆண் வேட்பாளர்களை 2200 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வதை உங்களால் பார்க்க முடியும், தொழிலாளர்கள் உரிமைகளுக்காக மாணவர்கள் போராடுவதைப் பார்க்க முடியும், மாணவர்களின் விடுதி உரிமைகளுக்காக தொழிலாளர்கள் போராடுவதைப் பார்க்க முடியும். இந்த சர்ச்சையும்கூட, ஜேஎன்யு உண்மையில் எதற்காக உழைக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை உலகத்துக்கு அறிவிக்கும்.
ஜேஎன்யு-வின் கனவு என்பது சமத்துவம் நிறைந்த சமூகத்திற்கான கனவாகும், நாம் நினைத்தால் அதை, சமூகத்தின் நடைமுறை உண்மையாகவும் மாற்றலாம்.
தமிழில்: குணவதி
�,