சென்னை மாநகரத்தில், வண்ணாரப்பேட்டையில், மூலக்கொத்தளம் மயானத்தில் இந்தி எதிர்ப்பு முதல் போரில் சிறை சென்று மடிந்த வீரத் தியாகிகள் தாளமுத்து, நடராசன் இருவரின் நினைவிடங்கள் உள்ளன.
இப்பகுதியில் குடிசை மாற்று வாரியத் திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில் மொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்துக்கு ஆபத்து வராது என்று சட்டமன்றத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.
ஆனால் சட்டமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறி மொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்தை ஒட்டி அரசு திட்டம் செயல்படுத்தப் படுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியிருக்கிறார்.
மூலக்கொத்தளம் மயானத்தை சிதைக்கக்கூடாது என்று கடந்த மார்ச் 13ஆம் தேதி 13.03.2018 சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மதிமுக பொதுச் செயலாளர் தலைமையில் பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்ட ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதன் பின் மார்ச் 22ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் இது தொடர்பாக பதில் அளித்தார்கள்.
மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரது நினைவிடத்தில் இருந்து 300 மீட்டர் இடைவெளிக்கு அப்பாலும், மொழிப்போர் தியாகி தருமாம்மாள் அம்மையாரின் கல்லறை அமைவிடத்திலிருந்து 100 மீட்டருக்கு அப்பாலும் மட்டுமே திட்டப் பகுதிக்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. மொழிப்போர் தியாகிகளின் கல்லறைகளுக்கு எந்த ஊறும் விளைவிக்காமல் இருப்பதே எங்கள் கடமை என்று சட்டமன்றத்தில் தெரிவித்தார்கள்.
ஆனால் இப்போது சட்டமன்ற உறுதிமொழியை மீறி மொழிப்போர் தியாகிகளின் நினைவிடங்களை சேதப்படுத்தும் முயற்சி நடக்கிறது என்று வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து இன்று (ஜூலை 11) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரது நினைவிடத்துக்கு மிக அருகாமையில் பகுதி 1இல், மூன்று மீட்டர் கூட இடைவெளி விடாமல், கல்லறை அமைந்துள்ள பகுதியிலேயே திட்டப் பணிகளைத் தொடங்கி உள்ளனர். சட்டமன்றத்தில் அளித்த உறுதிமொழிக்கு எதிரான மிகப்பெரிய ஏமாற்று வேலையாகும்.
திட்டப் பகுதி குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை எண். 249, நாள் 04.08.2017 (வருவாய்த்துறை நில அகற்றுப் பிரிவு LD 5(2) பிரிவு) சிறப்பு நிபந்தனைகளான காற்று மாசு ஏற்படாமல் அப்பகுதியைக் காத்தல், மயானத்தில் தொன்றுதொட்டு கடைபிடித்து வரும் பழக்க வழக்கங்களுக்கு காப்புறுதி அளித்தல் மயானப் பகுதியில் அமைந்துள்ள கல்லறைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பாதுகாத்தல் உள்ளிட்ட சிறப்பு நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட ஆட்சியரின் புலதணிக்கைக் குறிப்பு, நாள் 15.12.2016 இன் படி நடைபெற்ற புலதணிக்கை ஆய்வில் திட்டப் பகுதி 1 இல், புல எண்.1802/1இல், 2 ஏக்கர் 58 சென்ட் பயன்பாட்டில் உள்ள மயானம் என்றும், திட்டப் பகுதி 2 இல் புல எண்.1802/1இல், வடக்கில் ஒரு ஏக்கர் 96 சென்ட் மயானம் மற்றும் கல்லறைகளாக பயன்பாட்டில் உள்ளது என்றும், கிழக்கில் ஒரு ஏக்கர் 55 சென்ட் இறந்தவர்களைப் புதைக்கும் மயானமாக இருந்து, தற்போது புதர்களாக உள்ள பகுதி என்றும், பகுதி 3 இல் ஒரு ஏக்கர் 43 சென்ட் பழைய சமாதிகள் மற்றும் கல்லறைகள் உள்ள பகுதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது’’ என்பதை தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கிறார் வைகோ.
“அரசாணை மற்றும் புலத்தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதி 1, பகுதி 2, பகுதி 3 ஆகிய இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கல்லறைகள் மற்றும் உறைவிடங்களை சட்டத்துக்குப் புறம்பாகவும், அரசாணைக்குப் புறம்பாகவும் அகற்றி, திட்டப் பணிகளை தமிழக அரசு அவசர கதியில் செய்து வருகிறது.
சட்ட விதிகளுக்கும், சட்டமன்ற அறிவிப்புக்கும் எதிராக பணிகளைத் தொடங்கி இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார் வைகோ.
மொழிப்போர் தியாகிகளின் கல்லறைகளை மதிக்க வேண்டிய அதிமுக அரசு, திராவிட இயக்கக் கொள்கைகளை குழிதோண்டிப் புதைக்கும் செயலில் ஈடுபடுவது எந்த வகையில் நியாயமானதாகும் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மத்திய அரசு தமிழர் பண்பாட்டின் அடித்தளத்தை அழிக்கும் உள்நோக்கத்தோடு இருக்கும் நிலையில், மூலக்கொத்தளம் சுடுகாட்டை இடித்து, குடியிருப்புகள் கட்டும் திட்டத்தைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிடவேண்டும் என்றும் இல்லையேல், உணர்ச்சிக் கொந்தளிப்பான அறப்போரைச் சந்திக்க நேரிடும். அதனால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் தமிழ்நாடு அரசுதான் பொறுப்பாகும் என்றும் வைகோ எச்சரித்திருக்கிறார்.
�,