”மைக்கை ஆஃப் பண்ணினாலும் மக்களை ஆஃப் பண்ண முடியாது!”

public

-குறைதீர்ப்பு கூட்டத்தை பிரபலமாக்கிய திமுக எம்.எல்.ஏ

.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நேற்று (நவம்பர் 15) முதலமைச்சரின் குறைதீர்ப்பு நாள் கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம், அமைச்சர் வீரமணி ஆகியோர் பங்கேற்ற இந்நிகழ்வில், அணைக்கட்டு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த, நந்தகுமார் கலந்து கொண்டு பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

விழாவுக்கு வந்த ஐந்தே நிமிடங்களில் அணைக்கட்டு நந்தகுமார் பேச அழைக்கப்பட்டார். திமுக சட்டமன்ற உறுப்பினரை முதலில் பேசச் சொன்னால், பேசிவிட்டுப் போய்விடுவார் என்று நினைத்தார்களோ என்னவோ முதலில் பேச அழைத்தனர்.

மைக் பிடித்த நந்தகுமார் எம்.எல்.ஏ., “மக்களுக்கு உதவி செய்கிறீர்கள் நல்ல விஷயம். முதியோர் உதவித் தொகை தருவதாக சொல்கிறீர்கள் வரவேற்கிறேன். நான் பல கிராமங்களுக்குப் போகிறபோது, ‘எனக்கு 3 மாதமாக ஓஏபி வரவில்லை. ஆறு மாதமாக ஓஏபி வரவில்லை’ என ஏகப்பட்ட பேர் புகார் சொல்கிறார்கள். இப்போது நீங்கள் புதிதாக தருகிறீர்கள். ஏற்கனவே வழங்கப்பட்டு நிறுத்தப்பட்டவர்களுக்கு வழங்கிவிட்டு இவர்களுக்கும் வழங்கினால் அது வரவேற்கத் தக்கது. என்னை அடுத்து பேச வரும் அமைச்சர் சொல்லுவார், ‘சட்டமன்ற உறுப்பினர் உண்மைக்கு மாறாக பேசுகிறார்’ என்று சொல்லுவார்.

அமைச்சர் அப்படி சொன்னார் என்றால் இரண்டு நாட்களில் நான் எல்லா கிராமத்துக்கும் போய் ஓஏபி வந்த ரசீது வைத்திருக்கிறார்கள் மக்கள். அவற்றையெல்லாம் சேகரித்து கொண்டுவந்து கொடுக்கிறேன் நம்புவீர்களா?

உதாரணத்துக்கு ஒன்றே ஒன்று… நான்கு மாதம் முன் ஜமா பந்தி கூட்டம் நடந்தது. அப்போது சேர்ப்பாடி பனந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த அம்பிகா என்ற ஒரு பெண் எழுந்து அழுதார். அவரிடம் கேட்டபோது, ‘என் கணவர் இறந்துவிட்டார். எனக்கு ரெண்டு பசங்க. அரசாங்கம் எனக்கு கொடுக்க வேண்டிய 25 ஆயிரம் உதவித் தொகையை தராமல் இழுத்தடிக்கிறாங்க’ என்று அழுதார். அப்போதே நான் அதிகாரிகளிடம் சொன்னேன். தருகிறோம் என்று சொன்னார்களே தவிர, தரவில்லை. இதோ அந்த பெண்’ என்று சொல்லி அந்த அம்பிகாவை மேடைக்கு அழைக்க, அமைச்சர், கலெக்டர் எல்லாம் அதிர்ந்துவிட்டார்கள்.

“இந்த அம்மா இரு குழந்தைகளை வைத்துக்கொண்டு கணவன் இல்லாமல் கஷ்டப்படுகிறார். இவருக்கு உதவி செய்யுங்கள். நாங்கள் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்,. ஆதாரம் இல்லாமல் எதுவும் பேசமாட்டோம்” என்று நந்தகுமார் பேச்சைத் தொடர,

அப்போதே அமைசச்ர் வீரமணி, ‘இவங்களை எல்லாம் மேடைக்கு கூட்டி வரக் கூடாது. இது அரசாங்க நிகழ்ச்சி’ என்று கேட்க, ‘அரசு நிகழ்ச்சியில ஒரு ஏழையை கூட்டி வரக் கூடாதா?’ என்று கேட்டார் நந்தகுமார். அப்போது அமைச்சர் வீரமணி, ‘மைக்க ஆஃப் பண்ணுங்க’ என்று உத்தரவிட்டார். அப்போது விழாவில் பங்கேற்ற திமுகவினரும், ‘ஏன் மைக்கை ஆஃப் பண்ண சொல்றீங்க?’ என்று கேட்க அமைச்சருக்கும், எம்.எல்..ஏ.வுக்கும் வாக்குவாதமானது. சில நிமிடம் இந்த சலசலப்பு நீடித்தது.

இதுபற்றி நாம் அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமாரிடம் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் பத்திரிகை சார்பாகப் பேசினோம்.

“இரு நாட்களுக்கு முன்னர் தாசில்தார் என்னை சந்தித்து, மனுக்களின் மீதான நடவடிக்கை எடுக்கும் அரசு விழாவுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். மக்களுக்கு நன்மை செய்யும் விழா என்றால் கண்டிப்பாக நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு, ‘எப்போது வாங்கின மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து இந்த விழா நடத்துகிறீர்கள்?’ என்று கேட்டேன். ‘முதல்வர் அறிவித்து ஒன்றரை மாதம் வாங்கின மனுக்களுக்கான உதவி’ என்று சொன்னார்.

அப்போதே நான், ‘அதுக்குமுன்னாடி ஆறு மாதம் முன்னாடி எங்கள் கட்சித் தலைவர் அறிவித்து ஊராட்சி சபை கூட்டம் நடத்தினோம். அதில் என் தொகுதி மக்களிடம் இருந்து வாங்கிய 1956 மனுக்களை ராமன் சார் கலெக்ட்ராக இருந்தபோதே பொதுமக்களுடன் சென்று அவரிடம் கொடுத்திருக்கிறேன். அந்த மனுக்களில் எத்தனை பேருடைய மனுக்களுக்கு இப்போது உதவி செய்கிறீர்கள்’ என்று கேட்டேன்.

மேலும் சேர்ப்பாடி பனந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த அம்பிகா என்ற பெண்ணுக்கான உதவித் தொகை பற்றியும் நினைவூட்டினேன். அந்த பெண்னுக்கு உதவித் தொகை வழங்கவில்லை என்றால் நான் நிகழ்ச்சி நடக்கும்போது குறிப்பிட்டுப் பேசுவேன்’ என்று கூறினேன். கொடுத்துவிடுகிறோம் என்று தலையாட்டிவிட்டுப் போனார்கள். இதை நம்பி அந்த பெண்ணையும் விழாவுக்கு வரச் சொன்னேன். ஆனாலும் அந்த பெண்ணுக்கு உதவித் தொகையை வழங்கவில்லை. இதை ஆதாரத்தோடு சுட்டிக் காட்டிப் பேசியதும் அமைச்சருக்கு வலிக்கிறது.நாங்கள் முந்திரியும், பிஸ்கட்டும் சாப்பிட்டுவிட்டுப் போவதற்காக வரவில்லை. மக்களுக்காக குரல் கொடுக்கவே வந்திருக்கிறோம். என் மைக்கை ஆஃப் பண்ணலாம். ஆனால் மக்களை ஆஃப் பண்ண முடியாது. அவர்களுக்கு எல்லாம் தெரியும்” என்றார் எம்.எல்.ஏ. நந்தகுமார்.

அமைச்சர் வீரமணியோ, “இந்த நிகழ்ச்சியில் பிரச்சினை செய்ய வேண்டும் என்ற திட்டம்போட்டே திமுக சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமாரும் திமுகவினரும் வந்திருக்கிறார்கள். அவர்களின் நோக்கம் நிறைவேறாது” என்று நிகழ்ச்சி பற்றி ஊடகங்களிடம் பேசினார்.

மனுவில் ஆளுங்கட்சி மனு, எதிர்க்கட்சி மனு என்று உள்ளதா என்ன? அனைவரின் குறைகளையும் தீர்க்க வேண்டும் என்பதுதானே முதல்வரின் உத்தரவு!

**-ஆரா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0