இன்று (ஜனவரி 20) ஆண்ட்ரி மேரி ஆம்பியரின் (Andre Marie Ampere) பிறந்தநாள்!
ஆசிஃபா
ஆண்ட்ரி மேரி ஆம்பியர் ஃபிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர், கணிதவியலாளர். இந்த இரு துறைகளிலும் மிகப் பெரிய ஆளுமையாகத் திகழ்ந்தவர்.
மின்காந்தம் (Electromagnetism) என்ற கருத்தை முன்வைத்தவர் ஆம்பியர். Solenoid, Electrical Telegraph ஆகிய கருவிகளையும் கண்டுபிடித்தார். மின்காந்தவியலில், மின்சாரத்துக்கும் காந்த சக்திக்கும் இடையிலான தொடர்பை முன்னிறுத்தி Ampere’s lawவை உருவாக்கினார்.
ஆம்பியர் தன்னுடைய குழந்தைப் பருவம் முழுவதும் தன் அப்பாவுடைய நூலகத்திலும், வீட்டுக்கு வெளியிலுமே கல்வியைக் கற்றார். தனக்குத் தானே கணிதத்தைக் கற்பித்துக் கொண்டு, உயர்நிலை கணிதத்தை 12 வயதிலேயே தெளிவாகச் செய்தார். இவர் லத்தீன் மொழியை மிகச் சிறிய வயதில் தானாகவே படித்தவர்.
முதலில் கணித ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார். சிறிது காலத்துக்குள்ளாகவே பேராசிரியரானார். கணிதத்திலும் வானியலிலும் தத்துவயியலிலும் உயர்ந்த இடங்களுக்குச் சென்றார். வரலாறு, பயணம், கவிதை, தத்துவம், அறிவியல் ஆகிய துறைகளில் வாசித்த பல்துறை வல்லுநர் (polymath) இவர்.
1820களில், மின்சாரம் பாய்வது மற்றும் அதனால் வயர்கள் மற்று கம்பிகளில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாகவும் ஆராயத் தொடங்கினார். அந்த ஆராய்ச்சியின் விளைவாகப் பல கண்டுபிடிப்புகளை இந்த உலகுக்குத் தந்திருக்கிறார். நவீன Astatic galvanometerஇல் பயன்படுத்தப்படும் Astatic ஊசி இவரது கண்டுபிடிப்புகளில் ஒன்று. இவரைக் கௌரவிக்கும் விதமாக, மின்சார அளவீடாக ஆம்பியர் என்ற அவர் பெயரை 1881ஆம் ஆண்டில், அவர் இறந்து 45 ஆண்டுகள் கழித்து சூட்டினார்கள். ஈஃபிள் டவரில் எழுதப்பட்டுள்ள 72 பெயர்களில், ஆம்பியர் பெயரும் ஒன்று.
1836இல், மரணத் தருவாயில், தன்னுடைய கல்லறையில் Tandem Felix என்று எழுதச் சொன்னார் ஆம்பியர். இதன் அர்த்தம், ‘ஒருவழியாகச் சந்தோஷமாக இருக்கிறேன்’.�,