~மேட்டூர் அணை ஒரு வாரத்தில் 10 அடி உயர்ந்துள்ளது!

Published On:

| By Balaji

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் கனமழையால் கர்நாடக அணைகளிலிருந்து 50 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. இதனால், ஒக்கேனக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இன்று (ஜூலை 12) காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்வரத்து 32,284 கனஅடியிலிருந்து 34,426 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 71.76 அடியாகவும், நீர் இருப்பு 34.23 டிஎம்சி.யாகவும் உள்ளது. அணையிலிருந்து குடிநீருக்காக விநாடிக்கு 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கபினி அணையில் உச்சகட்ட நீர் தேக்கும் அளவான 84 அடியில், தற்போது 82 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடரும் கன மழையால் அணைக்கு விநாடிக்கு 47,547 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. இதற்கு மேல் தேக்கி வைக்க முடியாது என்பதால் அணைக்கு வரும் தண்ணீர் மொத்தமும் திறந்து விடப்படுகிறது. கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து மொத்தம் 51 ஆயிரத்து 143 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் முதல் மேட்டூர் வரை 75 கிலோ மீட்டர் தூர காவிரி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குளித்தல், துணி துவைத்தல் உள்ளிட்ட செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் எனவும் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் கன மழை காரணமாக கோவை மாவட்டம் சிறுவாணி அணை 4 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பியுள்ளது. அணையின் மொத்த உயரமான 50 அடியை நீர் மட்டம் தொட்டுள்ளது. இதையடுத்து அணைக்கு வரும் தண்ணீர் மொத்தமும் திறந்துவிடப்பட்டுள்ளது. சிறுவாணியில் இருந்து வெளியேறும் நீர் பவானி ஆற்றில் கலந்து பில்லூர் அணைக்குச் செல்கிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள 100 அடி உயரம் கொண்ட பில்லூர் அணை இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக நிரம்பி உள்ளது. கடந்த மாதம் 10-ஆம் தேதி நிரம்பிய அந்த அணையின் நீர்மட்டம் நேற்று 97 அடியை தொட்டது. அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக வரும் தண்ணீர் மொத்தமும் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம், நெல்லித்துறை, ஆலாங்கொம்பு, லிங்காபுரம் போன்ற பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிக்கும் பொதுமக்கள், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share