[மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும்!

Published On:

| By Balaji

மேட்டூர் அணையை உடனடியாகத் திறக்க தமிழ்நாடு அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நடுவர்மன்ற இறுதி தீர்ப்பின்படி தண்ணீரைப் பெற்றுத்தர மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் வே.துரைமாணிக்கம் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று (செபடம்பர் 23) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையால் காவிரியில் கட்டப்பட்டுள்ள அணைகள் சில நாள்களில் நிரம்பி விடும் நிலையில் உள்ளது. அந்த அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்துவிடப்பட்டால் அந்த நீர் மேட்டூர் அணைக்கு வந்து சேரும். மேட்டூர் அணையின் நீர்மட்டம் வரும் சில நாள்களில் 90 அடியை எட்டிவிடும் நிலை உள்ளது. ஆகவே, காவிரி டெல்டாவில் ஒரு போக சாகுபடியாவது நடந்திட மேட்டூர் அணையை உடனடியாகத் திறக்க தமிழ்நாடு அரசு விரைவாக முடிவெடுக்க வேண்டும். நடுவர்மன்ற இறுதி தீர்ப்பின்படி தண்ணீரைப் பெற்றுத்தர மத்திய அரசை வற்புறுத்த வேண்டும். நடுவர்மன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர முடியாது என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை எதிர்க்கிறோம் என்றும் கர்நாடக முதல்வர் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.

மேலும், விவசாயத்துக்குத் தேவையான விதைகள், உரம் உள்ளிட்ட இடுபொருள்கள் தட்டுப்பாடில்லாமல் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். கடந்த ஆண்டு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதனால், புதிய கடன் பெறுவதில் தடை ஏற்படுத்தாமல் காலத்தில் கடன் வழங்க வேண்டும். தவறினால் கந்துவட்டிக் காரர்களிடம் அதிகவட்டிக்கு கடன் பெற்று விவசாயிகள் சீரழிய வேண்டிய நிலை ஏற்படும்.

அத்துடன் சுமார் 30% விவசாயிகளுக்கு மட்டும்தான் கூட்டுறவு வங்கிகளிலும், அரசு வங்கிகளிலும் கடன் கிடைக்கிறது. அனைத்து விவசாயிகளுக்கும் கடன் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel