மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என்ற தமிழக அரசிடம், இதற்கு முன்பிருந்த முதல்வர்கள் மெரினாவில் போராட்டம் நடத்தியிருக்கிறார்களே என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு மெரினாவில் போராட்டங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படி போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தாலும் அவர்களைக் காவல் துறையினர் உடனே கைது செய்வதும் வழக்கமாக உள்ளது. இதற்கிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினா கடற்கரையில் 90 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதிக்கக் கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்த சென்னை காவல் ஆணையர் தரப்பு, “மெரினா கடற்கரை என்பது பொதுமக்கள் வந்து செல்லக் கூடிய இடம். எனவே, மெரினாவில் போராட்டங்கள் நடத்த அனுமதி கிடையாது. சென்னையில் போராட்டங்கள் நடத்த அனுமதியளிக்கப்பட்ட இடங்களில் ஏதாவது ஒன்றில் மனுதாரர் ஒருநாள் மட்டும் உண்ணாவிரதம் இருந்து கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வழக்கு நீதிபதி ராஜா முன்னிலையில் நேற்று (ஏப்ரல் 20) விசாரணைக்கு வந்தபோது, “இதேபோன்ற கோரிக்கைகளுடன் முதலமைச்சர் கலந்துகொண்ட உண்ணாவிரதப் போராட்டம்கூட சேப்பாக்கத்தில்தான் நடைபெற்றது” என்றும் “அதனால் மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை” என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதை ஏற்க மறுத்த நீதிபதி, இதற்கு முன்பிருந்த தமிழக முதல்வர்கள் மெரினாவில் போராட்டம் நடத்தியுள்ளனரே என்று கேள்வி எழுப்பினார். மேலும் அரசின் அனுமதியுடன் மெரினாவில் கடைசியாக எப்போது போராட்டம் நடத்தப்பட்டது என்ற விவரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.�,