மெட்ரோ ரயில் நிலையங்களில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் நடத்தப்படவுள்ளன.
சென்னையில் மெட்ரோ சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை பொதுமக்களைக் கவரும் வகையில் மெட்ரோ நிர்வாகம் ஏதாவது புதிய முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்துவருகிறது. உணவுத் திருவிழா, வாடகை சைக்கிள், இலவச மெட்ரோ சேவை என சமீபத்தில் மெட்ரோ நிர்வாகம் கையாண்ட அனைத்துப் புதுமையான விஷயங்களும் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தன.
அந்த வகையில், தற்போது மெட்ரோ நிர்வாகம் அடுத்ததாகக் கையாண்டுள்ள புதிய முயற்சிதான் பாரம்பரிய விளையாட்டுப் போட்டி. இன்றைய தலைமுறையில் இருக்கும் பிள்ளைகளிடம் சென்று, உங்களுக்குத் தெரிந்த விளையாட்டுகளை வரிசையாகச் சொல்லுங்கள் என்று கேட்டால் அவர்கள் சொல்லும் பதில். வீடியோ கேம்ஸ், ஸ்மார்ட் ஃபோன் கேம்ஸ் அதையும் மீஞ்சினால் கிரிக்கெட், ஃபுட் பால், கபடி.
ஆனால், உண்மையில் நம் நாட்டில் விளையாடப்பட்ட பாரம்பரிய விளையாட்டுக்கள் ஏராளம். பல்லாங்குழி, பரமபதம், தாயம், ஆடு புலி ஆட்டம், கட்டம் விளையாட்டு, நக்ஷத்ரா போன்ற பல விளையாட்டுகளின் பெயர்கள்கூட இன்றைய தலைமுறையினருக்குத் தெரிவதில்லை. இதை இளம் தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய முயற்சியை எடுத்துள்ளது.
ஜூலை 16ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரையில் நந்தனம், கிண்டி, திருமங்கலம், கீழ்ப்பாக்கம், விமான நிலையம், வடபழனி, அண்ணாநகர், பச்சையப்பன் கல்லூரி, சென்ட்ரல், சைதாப்பேட்டை, டி.எம்.எஸ்., கோயம்பேடு, எழும்பூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட 26 மெட்ரோ ரயில் நிலையங்களில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரைலும் நடத்தப்படும் இந்த விளையாட்டுப் போட்டிகளைப் பொதுமக்கள் இலவசமாக கண்டு களிக்கலாம். தங்கள் பிள்ளைகளை அழைத்து சென்று நேரிலும் காணலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.�,