மெக்கா மசூதி குண்டுவெடிப்பு தீர்ப்பு: நீதிபதி ராஜினாமா!

public

ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரவீந்திர ரெட்டி தனது பதவியைத் திடீரென ராஜினாமா செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் மெக்கா மசூதியில் 2007ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர். 58 பேர் படுகாயமடைந்தனர். அப்போது மசூதிக்கு வெளியே போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிலர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாகச் சாமியார் அசீமானந்தா, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ்ஸின் முன்னாள் நிர்வாகிகளான சுனில் ஜோஷி, சந்தீப் டாங்கே, ஆர்எஸ்எஸ் தொண்டர் ராமச்சந்திர கல்சங்க்ரா, தேஜ்ராம் பார்மர், அமித் சவுகான் உள்ளிட்ட 10 பேர் மீது என்.ஐ.ஏ குற்றம்சாட்டியது.

இதில் சுனில் ஜோஷி விசாரணை நடந்து கொண்டிருந்த காலத்திலேயே கொலை செய்யப்பட்டார்.

கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி ரவீந்திர ரெட்டி, நேற்று (ஏப்ரல் 16) தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட சாமியார் அசீமானந்தா உட்பட ஐந்து பேருக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி விடுதலை செய்வதாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால் அவர்கள் குண்டு வெடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தீர்ப்புக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அசீமானந்தாவின் வழக்கறிஞர் ஜே.பி.ஷர்மா, “இது ஜோடிக்கப்பட்ட வழக்கு” என்று தெரிவித்தார்.

குற்றவாளிகளுக்கு எதிராக ஆதாரம் இல்லை என விடுவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி நேற்றே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக கூறி கடிதத்தை இணையம் மூலம் நீதிபதி உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்து வந்த தேசிய புலனாய்வு அமைப்பின் பொறுப்பு அதிகாரியான பிரதிபா அம்பேத்கர், இரண்டு வாரங்களுக்கு முன்பு அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *