மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் விதத்தை இணையதளம் மூலம் கண்காணிக்கத் தவறிய மூன்று மாநிலங்களுக்கு ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் அவ்வாறு வழங்கப்படும் உணவுகள் தரமானதாக இல்லை என்று புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. 2013ஆம் ஆண்டு, தொண்டு நிறுவனம் ஒன்று இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்றைத் தாக்கல் செய்தது. “நாடு முழுவதும் 12 லட்சத்துக்கும் அதிகமான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முறையான கண்காணிப்பு இல்லாததால், அவ்வாறு வழங்கப்படும் உணவு தரமானதாக இல்லை. இதனால், மாணவர்களுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன” என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு மார்ச் 23ஆம் தேதியன்று நடந்த விசாரணையின்போது, மதிய உணவுத் திட்டத்தால் எத்தனை பள்ளி மாணவர்கள் பயனடைகின்றனர் என்பது உள்ளிட்ட தகவல்களை ஒவ்வொரு மாநிலமும் 3 மாதங்களுக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தரமான உணவு வழங்கப்படுவதற்கான பட்டியலைக் கொடுக்க வேண்டும் என்றும், மதிய உணவு சுத்தமானதாக உள்ளதா என்பதைக் கண்காணிப்பதற்கு தேசிய மற்றும் மாநில அளவில் 2 குழுக்களை அமைக்க வேண்டும் என்றும், மதிய உணவுத் திட்டத்தை இணையதளம் வாயிலாகக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு உத்தரவிட்டது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று (ஆகஸ்ட் 1) நீதிபதிகள் மதன் பி.லோகூர், தீபக் குப்தா அமர்வு முன்பு வந்தது. அப்போது, தன்னார்வத் தொண்டு நிறுவன அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை சில மாநிலங்கள் செயல்படுத்தவில்லை என்று தெரிவித்தார்.
இதைக் கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதிகள், மதிய உணவுத் திட்டத்தை இணையதளம் மூலம் கண்காணிக்காத மற்றும் அது குறித்த தகவல்களை இணையதளத்தில் பதிவேற்றாத மாநிலங்களான தமிழகம், ஜார்க்கண்ட், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.50,000 அபராதம் விதித்தனர்.
“அபராதத் தொகையை 4 வாரங்களில் உச்ச நீதிமன்ற சட்டப்பணி அமைப்பில் டெபாசிட் செய்ய வேண்டும். இந்தத் தொகை சிறார் நீதிப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும். இதேபோல அருணாசலப் பிரதேசம், தாதர் நாகர்ஹவேலி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களும் இந்த உத்தரவைப் பின்பற்றவில்லை. அவற்றுக்கு இப்போது அபராதம் விதிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை விரைவில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அமல்படுத்தும் என நம்புகிறோம்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு மீதான விசாரணையை செப்டம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
�,