மூன்றாம் குழந்தைக்கு வாக்குரிமை கிடையாது: பாபா ராம்தேவ்

Published On:

| By Balaji

இந்தியாவில் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதற்கு, மூன்றாவதாகப் பிறந்த குழந்தைக்கு வாக்குரிமையை வழங்கக் கூடாது என்று கூறியுள்ளார் பாபா ராம்தேவ்.

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நேற்று (மே26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் யோகா குருவும் பதஞ்சலி நிறுவனத்தின் தலைவருமான பாபா ராம்தேவ். அப்போது, அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் மக்கள்தொகை 150 கோடிக்கு மேல் அதிகரிக்கக் கூடாது என்று தெரிவித்தார். “மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த ஒரே வழி, மூன்றாவதாகப் பிறக்கும் குழந்தைக்கு வாக்குரிமை வழங்கப்படக் கூடாது. அரசு வழங்கும் எந்தவொரு நலத்திட்டமும் கிடைக்காதவாறு சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களானாலும் சரி, இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தால் யாரும் நிறைய குழந்தைகளைப் பெற மாட்டார்கள்” என்று கூறினார் பாபா ராம்தேவ்.

அதேபோல, பசு வதைத் தடையை முழுமையாகக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். “இதனால் பசு கடத்தல்காரர்களுக்கும், பசு பாதுகாவலர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்படுவது குறையும். இறைச்சி சாப்பிட வேண்டும் என்பவர்களுக்குப் பலவகையான இறைச்சி இருக்கிறது. அதைச் சாப்பிடுங்கள்” என்றார். இஸ்லாமிய நாடுகளில் மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது போன்று இந்தியாவிலும் தடை விதிக்கப்பட வேண்டுமென்று தெரிவித்தார்.

இந்திய இ மஜ்லிஸ் இட்டகத்துல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி தனது ட்விட்டர் பக்கத்தில், பாபா ராம்தேவ் தெரிவித்த கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பதிவிட்டுள்ளார். “அரசியலமைப்பிற்கு முரணாகக் கருத்து தெரிவிப்பவர்களைச் தடுக்கச் சட்டம் ஏதுமில்லை. ஆனால், பாபா ராம்தேவ் போன்றவர்களின் கருத்துகள் ஏன் அதிகக் கவனத்தைப் பெறுகின்றன? பாபா ராம்தேவ் வயிற்றில் வித்தை காட்டுவார். அவர் சொன்னார் என்பதற்காக, தனது பெற்றோரின் மூன்றாவது குழந்தையான நரேந்திர மோடி வாக்குரிமையை இழப்பாரா?” என்று ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று நடந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் சிறுபான்மையினர் அச்சத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டார். அதற்கு, “சிறுபான்மையினர் அச்சத்தில் வாழ்கிறார்கள் என்று மோடி நினைத்தால், பசுவின் பெயரால் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் கும்பல் தாக்குதல்களைத் தடுக்க முடியுமா? அதனை வீடியோ பதிவு செய்து எங்களை அவமானப்படுத்துவதை நிறுத்த முடியுமா” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[அமமுக தோல்விக்கான காரணங்கள்: அறிக்கை அனுப்பிய நிர்வாகிகள்!](https://minnambalam.com/k/2019/05/27/15)

**

.

**

[தலித்திய தனிமைப்படுதல் என்னும் அபாயம்!](https://minnambalam.com/k/2019/05/27/17)

**

.

.

**

[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)

**

.

**

[அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!](https://minnambalam.com/k/2019/05/26/52)

**

.

.

**

[வரப் போகும் நாட்கள் கடினமானவை: சோனியா](https://minnambalam.com/k/2019/05/27/18)

**

.

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share