கள்ளநோட்டு புழக்கத்தைத் தடுக்க, ஒவ்வொரு 3 – 4 ஆண்டுகளுக்கு 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்களை மாற்ற மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
மத்திய அரசு, கடந்த நவம்பர் மாதம் புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து, கடந்த நான்கு மாதங்களில் அதிகளவிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், கள்ள ரூபாய் நோட்டுகளைத் தடுக்க கடந்த மார்ச் 30ஆம் தேதியன்று டெல்லியில் மத்திய வர்த்தக மற்றும் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் உள்துறைச் செயலாளர் ராஜீவ் மெரிஷி ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் கூறுகையில், ‘பெரும்பாலான வளர்ந்த நாடுகள் தங்களது கரன்சியின் பாதுகாப்பை உறுதிசெய்ய ஒவ்வொரு 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாதுகாப்பு அம்சங்களை மாற்றிக்கொள்ளும். அதே முறையை இந்தியாவும் பின்பற்ற வேண்டியது அவசியம். மேலும் இந்தியாவின் உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் நீண்டகாலமாகவே மாற்றப்படவில்லை. ரூ.1000 நோட்டுகள் இந்தியாவில், கடந்த 2000ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும் கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசின் பண மதிப்பழிப்பு அறிவிப்புக்கு முன்பு வரை ரூ.1000 நோட்டுகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2000, ரூ.500 நோட்டுகளும் ஏறக்குறைய பழைய ரூபாய் நோட்டுகளைப்போலவே இருக்கின்றன. உதாரணமாக, சமீபத்தில் மேற்கு வங்கம், வங்கதேசம் எல்லையில் கைப்பற்றப்பட்ட ரூ.2000 போலி நோட்டுகளில் இருந்த பாதுகாப்பு அம்சங்கள், புதிதாக வெளியிடப்பட்ட ரூ.2,000 நோட்டில் இருக்கும் 17 பாதுகாப்பு அம்சங்களில் 11 இடம்பெற்றிருந்தன. எனவே, ஒவ்வொரு 3 – 4 ஆண்டுகளுக்கு 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்களை மாற்றுவதன்மூலம் கள்ள ரூபாய் நோட்டுகளை அதிகளவில் கட்டுப்படுத்த முடியும்’ என்று அவர்கள் தெரிவித்தனர்.�,