ஒடிஷாவில் நடந்ததுபோல் திருச்சி மாவட்டத்திலும் இறந்த மூதாட்டியின் உடலை தகனம் செய்ய முடியாமல் தள்ளுவண்டியில் வைத்துக்கொண்டு இரவு முழுவதும் அலைந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாளாடி அருகே நெருசாலக்குடியில் குப்பை அள்ளும் தொழிலாளியான முருகேசன் (45), என்பவரது பாட்டி மேரியம்மாள் (75), உடல்நலக்குறைவு காரணமாக கடந்த புதன்கிழமை உயிரிழந்துள்ளார். இந்நிலையில், முருகேசன் தன் பாட்டியின் உடலை தகனம் செய்வதற்காக அலைந்துள்ளார். தகனம் செய்வதற்கு யாரும் இடம் கொடுக்கவில்லை. மேலும் அந்த ஊரில் உள்ள ஒரு தேவாலய கல்லறையில் புதைக்க அனுமதி கேட்டுள்ளார். அதற்கு தேவாலய நிர்வாகமும் மறுத்துவிட்டது.
இந்நிலையில், முருகேசன் இரவு முழுவதும் தள்ளுவண்டியில் மூதாட்டியின் உடலை வைத்து அலைந்துள்ளார். பின், வள்ளிவாயல் சுடுகாட்டில் கரும்புச் சக்கைகளை கொண்டு பாட்டியின் சடலத்தை முருகேசன் எரித்துள்ளார்.
இதைக்கண்ட கிராம மக்கள் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின்பேரில் காவல் துறையினர் முகேசனிடம் விசாரித்துள்ளனர். பின், கிராம நிர்வாகத்திடம் பேசி முறையாக மூதாட்டியின் உடலை தகனம் செய்துள்ளனர். மேலும் கிராம நிர்வாக அதிகாரியிடமிருந்து பாட்டியின் இறப்புச் சான்றிதழையும் பெற்றுத் தந்தனர்.
இதுகுறித்து திருச்சி காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது: இச்சம்பவம் குறித்து காவல் துறைக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் பொதுமக்களுக்கு காவல்துறை உரிய நேரத்தில் உதவி செய்யும் என்று கூறியுள்ளார்.
வழக்கமாக, இதுபோன்ற சம்பவம் ஒடிஷா மாநிலத்தில்தான் அதிகளவு நிகழும். ஆனால் தற்போது தமிழ்நாட்டில் நிகழ்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.�,