{முல்லைப் பெரியாறு: 152அடியாக உயர்த்த நடவடிக்கை!

Published On:

| By Balaji

பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் முல்லை பெரியாறு அணையிலிருந்து இன்று நீர் திறக்கப்பட்டது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் அணையிலிருந்து நீரைத் திறந்து வைத்தார்.

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதாலும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதாலும் அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்காக பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்கும், தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காகவும் முல்லை பெரியாறு அணையிலிருந்து 17ஆம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள தேனி, உத்தமபாளையம் மற்றும் போடிநாயக்கனூர் வட்டங்களிலுள்ள 14,707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன் பொதுமக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பாசனத்திற்காக இன்று (ஜூன் 17) முல்லைப் பெரியாறு அணை திறக்கப்பட்டுள்ளது. தேக்கடி ஷட்டர் பகுதியில் நடந்த பூஜையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று, அணையிலிருந்து 300கன அடி நீரைத் திறந்து வைத்தார். விழாவில் தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ், சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அணையிலிருந்து நீர் வெளியேறியபோது, தண்ணீரில் மலர்களைத் தூவி மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர், “முதல்போக சாகுபடிக்குத் தேவையான விதைநெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. உயிரி உரங்கள் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. யூரியா , பொட்டாஷ் மற்றும் கலப்பு உரங்கள் கூட்டுறவு சங்கங்களில் தயார் நிலையில் உள்ளன. மேம்படுத்தப்பட்ட விவசாய முறையினை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். பருவமழை தொடர்ச்சியாக பெய்து கொண்டிருப்பதால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டு 142அடியை எட்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, அணையின் நீர்மட்டத்தை 152அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். பேபி அணையும், சிற்றணையும் பழுது நீக்கம் செய்யப்பட்ட பின், அணையின் நீர்மட்டம் 152அடியை எட்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்ட அவர், கடந்த ஆண்டு அணையின் நீர் வீணாக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share