இந்தியன் சூப்பர் லீக் தொடரில் இன்று (பிப்ரவரி 11) நடைபெறவிருக்கும் போட்டியில் சென்னையின் எஃப்.சி, டெல்லி டைனமோஸ் அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன.
இந்தியன் சூப்பர் லீக் தொடர் கடந்த ஆண்டு (2017) நவம்பர் மாதம் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. அதில் மும்பையில் மாலை நடைபெறவிருக்கும் முதல் போட்டியில் மும்பை சிட்டி அணியுடன், புனே சிட்டி அணி பலபரிட்சை நடத்துகிறது. புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள புனே அணி இதுவரை விளையாடிய 14 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்று 25 புள்ளிகளைப் பெற்றுள்ளது. மும்பை அணி இதுவரை விளையாடி உள்ள 13 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பெற்று 17 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தில் உள்ளது. இவ்விரு அணிகளும் இந்த சீசனில் புனேவில் இதற்கு முன்னர் மோதிய போட்டியில் புனே அணி 2-1 என வெற்றி பெற்றது. அதேபோல் உள்ளூர் போட்டியில் புனே அணிக்கு பதிலடி கொடுத்து வெற்றி பெறுமா மும்பை அணி என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இரவு டெல்லியில் நடைபெறவிருக்கும் மற்றொரு போட்டியில் சென்னை அணியும் டெல்லி அணியும் மோத உள்ளன. இந்த சீசனில் தொடக்கம் முதலே புள்ளிப்பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் இடம் பெற்று வந்த சென்னை அணி தற்போது நான்காவது இடத்துக்குப் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. சென்னை (23), கேரளா (21) மற்றும் கோவா (20) அணிகள் குறைந்த புள்ளிகள் வித்தியாசத்தில்தான் புள்ளிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. எனவே ஒவ்வொரு இந்த மூன்று அணிகளுக்கு ஒவ்வொரு போட்டியும் மிக முக்கியமான ஒன்று. லீக் ஆட்டங்கள் முடிவதற்கு இன்னும் சில போட்டிகளே மீதமுள்ளதால் தோல்வியைத் தவிர்த்து முதல் நான்கு இடங்களுக்குள் இடம்பெற இந்த அணிகள் முயற்சி செய்யும். எனவே இன்றைய போட்டியில் சென்னை அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வெற்றி பெற்றால் சென்னை அணி 26 புள்ளிகளைப் பெற்று மீண்டும் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெறும்.�,