முன்னேறிய ஜாதியினருக்கு இடம்: தடை விதிக்க மறுப்பு!

Published On:

| By Balaji

முன்னேறிய ஜாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

முன்னேறிய ஜாதிகளைச் சேர்ந்த ஏழைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மத்திய அரசு ஜனவரி 8ஆம் தேதி மக்களவையிலும், 9ஆம் தேதி மாநிலங்களவையிலும் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இதையடுத்து இந்த இடஒதுக்கீடு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. குஜராத், ஜார்க்கண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டன. இந்த இடஒதுக்கீடு அரசியல் சாசன அமர்வுக்கு எதிரானது என்றும், இதை நிறுத்தி வைக்குமாறும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மனுதாரரின் ஆதரவாக மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவான் இன்று இந்த வழக்கில் ஆஜரானார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கானா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. முன்னேறிய ஜாதிகளில் இருக்கும் ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென்று நீதிபதிகள் கூறிவிட்டனர். வழக்கு விசாரணையை மார்ச் 28ஆம் தேதி எடுத்துக்கொள்வதாகவும் தெரிவித்துவிட்டனர்.

இடஒதுக்கீடு சட்டங்கள் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு விதிகளில் ஒன்றாக இருப்பதால், அரசியல் சாசன அமர்வில் இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டுமென்று ராஜிவ் தவான் கோரிக்கை வைத்தார். மார்ச் 28ஆம் தேதி நடக்கும் விசாரணையின்போது இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடரப்பட்ட உடனேயே மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share