கர்நாடக முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வராவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடகா முன்னாள் துணை முதல்வருமான பரமேஸ்வராவுக்கு தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் இன்று (அக்டோபர் 10) காலை 6.30 மணி முதல் சோதனை மேற்கொண்டனர். பெங்களூரு, தும்கூர் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
பரமேஸ்வராவுக்கு தொடர்புடைய ஸ்ரீ சித்தார்த்தா கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் முறைகேடு நடப்பதாகவும், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான அட்மிஷன்களுக்கு பெரிய அளவில் தொகைகள் பெறப்படுவதாகவும் வந்த தகவலையடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக வருமான வரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பரமேஸ்வரா, “வருமான வரித் துறை சோதனை எங்கு நடத்தப்படுகிறது என்பது குறித்து எனக்குத் தெரியாது. அவர்கள் சோதனை நடத்தட்டும். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எனது தரப்பில் ஏதாவது தவறுகள் இருந்தால் அதனை சரிசெய்துகொள்ள தயாராக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இதுபோலவே காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய அமைச்சராக இருந்தவருமான ஆர்.எல்.ஜாலப்பாவுக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
ஏற்கனவே ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கர்நாடகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமார், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர்களை கைது செய்வது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று பாஜக மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இந்த நிலையில் தற்போது கர்நாடகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களை குறிவைத்து மீண்டும் வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, “பரமேஸ்வரா, ஜாலப்பா உள்ளிட்டோரை குறிவைத்து தீய எண்ணத்துடனும் அரசியல் உள்நோக்கத்துடனும் வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது. கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமே குறிவைக்கப்படுகின்றனர். அவர்களின் தந்திரத்துக்கு நாங்கள் ஒருபோதும் அடங்கிவிடமாட்டோம்” என்று விமர்சித்துள்ளார்.
�,”