முத்தலாக் விவகாரம் : புதிய சட்டம் இயற்றப்படுமா ?

public

முத்தலாக் விவாகரத்து முறையை நீதிமன்றம் ரத்து செய்தால் புதிய சட்டம் கொண்டு வரத் தயார் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று(15.5.2017) தெரிவித்துள்ளது. மோடி தலைமையில் மத்திய அரசு அமைந்தது முதல், முஸ்லீம்களின் முத்தலாக் முறையை ஒழிக்க வேண்டும் என்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. முத்தலாக் முறை முஸ்லீம் பெண்களின் வாழ்வுரிமைக்கும் சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிரானது என்பது பாஜக தரப்பின் கருத்து. ஆனால் மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டிற்கு பல முஸ்லீம் அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து முஸ்லீம் அமைப்புகள் கூறும் போதும் போது, “முத்தலாக் என்றால் என்னவென்று புரிந்துகொள்ளாமலே இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை” என்று கூறிவருகிறார்கள். இந்நிலையில்தான் தலாக்கிற்கு எதிரான வழக்குகள் மீதான விசாரணை கடந்த மூன்று நாட்களாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

தலாக் – ஓர் விளக்கம்.

இந்த வழக்கைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன் நாம் முத்தலாக் என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்வது நல்லது. இஸ்லாமிய வழக்கில் கணவன் மனைவியை விவாகரத்து செய்வதையே ”தலாக்” என்ற வார்த்தை குறிக்கும். தலாக் என்றால் ‘விடுவித்தல்’ ‘கட்டவிழ்த்து விடுதல்’ என்பது பொருளாகும். தலாக் கூறிட ஆண்களுக்கு மூன்று சந்தர்ப்பங்கள் – வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தலாக் கூறி, முதல் இரண்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்திய பின் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வாழலாம். மூன்றாவது சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி விட்டால் அவர்கள் சேர்ந்து வாழ முடியாது. இதுதான் இஸ்லாம் கூறும் தலாக்.

தலாக்கை எதிர்க்கும் மோடி

உத்தரபிரதேச மாநிலம், மகோபா என்ற இடத்தில் 24. 10. 2016 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலாக்கிற்கு எதிராக இப்படிப் பேசினார் மோடி, “ஜனநாயகத்தில் உரையாடலும் விவாதமும் இருக்க வேண்டும். அரசு தன் நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது. மும்முறை தலாக் நடைமுறையினால் முஸ்லிம் பெண்களின் வாழ்வு சீரழிக்கப்படக் கூடாது. நாம் முஸ்லிம் பெண்களின் உரிமைகளை காப்பதா வேண்டாமா? அவர்களுக்கும் சமத்துவ உரிமைகள் அளிக்கப்பட வேண்டுமா அல்லது வேண்டாமா? நாட்டிலுள்ள சில அரசியல் கட்சிகள் வாக்கு வங்கி அரசியலுக்காக பெண்களுக்கு அநீதி இழைப்பதில் குறியாக இருக்கின்றன. இது என்ன நீதி?. ஒரு இந்து பெண் சிசுக்கொலை செய்தால் சிறையில் தள்ளப்படுகிறார். அதேபோலத்தான், போனில் கூட தலாக் கூறிவிட்டு பெண்கள் வாழ்க்கை அளிக்கப்படுவதற்கு எதிராகவும் நடவடிக்கை தேவைப்படுகிறது. டிவி சேனல்கள் இந்த விவகாரத்தை இந்து மற்றும் முஸ்லிம் சண்டையாகவோ, பாஜக மற்றும் பிற கட்சிகளின் மோதலாகவோ சித்தரிக்க வேண்டாம். உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அரசின் நிலைப்பாட்டை சரியாக எடுத்து வைத்துள்ளோம். ஜனநாயகத்தில் மதத்தின் பெயரால் பெண்களுக்கு எதிராக கொடுமைகள் நடைபெறக்கூடாது. பாரபட்சம் இருக்க கூடாது என்பது மட்டுமே அரசின் நோக்கம்” என்றார் அவர்.

தலாக்கிற்கு எதிராக 10 லட்சம் கையெழுத்து

முத்தலாக் முறையை தடை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், முத்தலாக் முறை, பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி. அரசியல் சாசனத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்பட்ட சமநிலைக்கு எதிரானது எனக்கூறியிருக்கிறது. .இந்நிலையில், முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் என்ற அமைப்பு முத்தலாக் முறைக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தியது. இதில் இந்தியா முழுவதுமுள்ள 10 லட்சம் முஸ்லிம்கள் கையெழுத்திட்டுள்ளதாகவும், இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

தொடரப்பட்ட வழக்குகள்

முத்தலாக் முறையை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்திருக்கும் வழக்கை தவிர்த்து, ஷாயரா பானு, ஆப்ரின் ரஹ்மான் உள்ளிட்ட சில பெண்களும், குரான் சுன்னத் அமைப்பும் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்து வருகிறது. இதுதவிர, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பொதுநல வழக்கும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி, இம்மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

வழக்கு விசாரணை

இவ்வழக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹின்டன் எப்.நாரிமன், யு.யு.லலித், எஸ்.அப்துல் நசீர் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று(15.5.2017) உச்சநீதிமன்றத்தில் நடந்தது. அப்போது ‘தலாக் முறை செல்லாது என அறிவிக்கப்பட்டால் முஸ்லிம் ஆண்கள் தங்கள் திருமணத்தை ரத்து செய்ய என்னதான் வழி?’ என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அதற்கு பதிலளித்த மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி “இஸ்லாமியர்கள் மத்தியில் பின்பற்றப்படும் வாய்மொழியாக மூன்று முறை தலாக் என்று தெரிவித்தால் மணமுறிவு ஏற்படும் நடைமுறையை செல்லாது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் அறிவித்தால் மாற்று ஏற்பாடாக சட்டம் நிறைவேற்ற மத்திய அரசு தயாராக இருக்கிறது. முஸ்லிம் சமூகத்தினரின் திருமணத்தையும் விவாகரத்து முறையையும் ஒழுங்குபடுத்தும் வகையில் சட்டம் இயற்றப்படும்” என்றார்.மேலும் “இஸ்லாமிய பெண்களின் சம உரிமையை முத்தலாக் மீறுவதாக உள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் மத சீர்திருத்தத்தை நோக்கி செல்லும் நிலையில் மதசார்பின்மை நாடான இந்தியா விவாதம் மட்டுமே செய்து வருகிறது” என்றும் முகுல் ரோத்தகி வாதிட்டார். முத்தலாக் முறைக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய வாதம் இன்று மூன்றாவது நாளாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் சட்டவாரியத்தின் மாதிரி சட்டம்

முஸ்லிம்கள் மும்முறை ‘தலாக்’ கூறி விவாகரத்து செய்வதற்கு முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் 2005ல் புதிய கட்டுப்பாடு விதித்திருப்பதை தற்போது நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது. 2005ல் போபாலில் நடைபெற்ற அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் 2 நாள் பொதுக்குழு கூட்டத்தின் முடிவில், செய்தியாளர்களிடம் பேசிய வாரியச் செயலாளர் அப்துல் ரகீம் குரேஷி “முஸ்லிம் திருமண விதிமுறை மாதிரிச் சட்டம் ‘நிக்காஹ் நாமா’ தயாரிக்கப்பட்டு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் பார்வையில் ‘தலாக்’ செய்வது மிகவும் வெறுக்கத்தக்க ஒன்றாகும். எனவே முஸ்லிம்கள் விவாகரத்து செய்வதைத் தவிர்க்க வேண்டும். தம்பதிகள் விவாகரத்து செய்ய முடிவு செய்தால், அதற்குரிய கால அவகாசம் கொடுக்கப்படவேண்டும். ‘தலாக்’ என்பது கடைசி ஆயுதமாகப் பயன்படுத்தப்படவேண்டும் என்பதே ‘நிக்காஹ் நாமா’வில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சமாகும். ‘தலாக்’ கூறுபவர்கள் ஒரே முறையில் மூன்று முறை ‘தலாக்’ கூறமுடியாது. ஒரு ‘தலாக்’க்கும் இன்னொரு ‘தலாக்’க்கும் குறைந்தபட்சம் ஒரு மாத இடைவெளி இருக்கவேண்டும். ஒரு முறை ‘தலாக்’ சொன்னால் அதை மூன்று மாதத்துக்குள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்” என்று கூறியிருக்கிறார்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *