முத்தலாக் சொல்லி, விவாகரத்து செய்வது மார்க்கத்துக்கு எதிரானது

public

-மொயின் குவாசி

மூன்று தடவைகள் ‘தலாக்’ சொல்லி விவாகரத்து செய்யும் முறையை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனைக்கு எடுத்துள்ளதற்கு நாட்டின் செல்வாக்குமிக்க இசுலாமிய அமைப்புகள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளன. ‘‘முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறையால் இசுலாமிய ஆண்கள், பெண்களை ‘அடிமை’ போல நடத்துகிறார்கள். எனவே, இம்முறையானது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று அறிவிக்கவேண்டும்’’ என, இசுலாம் மதத்தைச் சேர்ந்த ஒரு பெண் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றம் இந்த இசுலாம் சமுதாய விவாகரத்து நடைமுறையை மறுபரிசீலனை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. இதையடுத்தே, இசுலாமிய அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

குறிப்பாக, அகில இந்திய இசுலாம் தனிநபர்சட்ட வாரியம், ஜமெயித்-இ-உலிமா போன்ற நாட்டின் முக்கிய அமைப்புகள் உச்சநீதிமன்றத்தின் முடிவுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இசுலாமிய தனிநபர் சட்டம் என்பது குர்-ஆனை அடிப்படையாகக் கொண்டது. இது சட்டம் அல்ல. எனவே, இது நீதி விசாரணைக்கு அப்பாற்பட்டது என்று, அவர்கள் தமது எதிர்ப்புக்குக் காரணம் கூறுகிறார்கள்.

முத்தலாக் என்பது ‘தலாக்-தலாக்-தலாக் என்று, ஒருவர் கண்இமைக்கும் நேரத்தில் சொல்லிவிட்டால் உடனடியாக அவர், தமது மனைவியை/கணவரை விவாகரத்து செய்ததாக ஆகிவிடுகிறது. இதை ஆண்களே நூறு விழுக்காடு பயன்படுத்துவதால் இசுலாமியப் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் முகநூல், மின்னஞ்சல், ஸ்கைப், வாட்ஸ்அப் மூலமாகக்கூட இசுலாமியக் கணவர்கள் தங்கள் மனைவியை விவாகரத்து செய்கின்றனர். அந்த அளவுக்கு இது, ஆணாதிக்கத்தன்மைகொண்டதாக இருக்கிறது. அதேநேரத்தில், பெண்கள் எதற்காக தமது மணவாழ்வு முறிக்கப்படுகிறது என்பதைக்கூட அறியமுடியாத அவலநிலையில் இருக்கிறார்கள். இதற்கு, அம்மதத்தின் தலைமையும்ஆதரவு அளிக்கிறது. ஏனெனில், இது புனித வாசகம். இதை மீற முடியாது என்று கூறுகிறார்கள்.

ஆனால், நவீன சிந்தனையாளர்கள் மட்டுமல்ல; மதத்துக்குள் உள்ள பாரம்பரிய சிந்தனையாளர்களும் முத்தலாக் முறையை எதிர்க்கிறார்கள். இச்சட்டம் காலாவதியாகிவிட்டது, இது கொடுமையானது, குர்-ஆனுக்கு எதிரானது என்று, இசுலாம் மதத்துக்குள்ளேயே வாதிடுகிறார்கள். மதத்துக்குள்ளேயே இருக்கும் ஆணாதிக்கவாதிகள், குர்-ஆனின் தார்மிக நெறிக்கு எதிராக முத்தலாக் முறையைப்பயன்படுத்தி சமூகத்தைக் கறைப்படுத்தி வருகிறார்கள் என்று, முத்தலாக் முறைக்கு எதிராகத் தொடர்ந்து பேசிவருகிறார்கள். இசுலாம் மார்க்கத்தில் பெண்களுக்கு கவுரவமான நிலையை குர்-ஆன் வழங்கியுள்ளது. முத்தலாக் அதற்கு எதிரானது என்கிறார்கள்.

உண்மையில், குர்-ஆனில் முத்தலாக் வடிவிலான விவாகரத்துபற்றி எதுவும் சொல்லப்படவில்லை என்பது இசுலாமியர்களுக்கும், மற்றவர்களுக்கும் அதிர்ச்சியாக இருக்கலாம். இதனால், இந்திய இசுலாமியப் பெண்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. மத்திய கிழக்கு நாடுகள், மலேசியா போன்ற நாடுகளிலும் தலாக், தலாக், தலாக் என்று செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி, திருமண வாழ்வை முடிவுக்குக் கொண்டுவருகிறார்கள். செல்போன் வருவதற்குமுன்பு தொலைபேசிமூலம், மெயில்மூலம் ஏன், தந்திமூலம்கூட முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்தனர்.

உண்மையில், ஒரேசமயத்தில் ‘தலாக், தலாக், தலாக்’ என்றுசொல்லி, திருமண உறவை முற்றுமுழுவதுமாக முறிப்பது, விவாகரத்து குறித்து குர்-ஆன் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிரானது. மனித மனத்தின் பலவீனத்தை அறிந்து விவாகரத்து நடைமுறையை மூன்று கட்டங்களாக குர்-ஆன் வடிவமைத்துள்ளது. முதல் இரண்டு கட்டங்கள் என்பது, பிரிந்துவாழும் தம்பதி தமது மனதை மாற்றிக் கொள்வதற்கான காலஅவகாசம் வழங்குவதற்கும், மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கான விருப்பத்தை உருவாக்குவதற்கு அவசியமான காலஅவகாசம் வழங்குவதை உறுதிசெய்யும்வகையில் இடைவெளி விட்டுச் சொல்லப்படும் நிலை ஆகும்.

இரண்டு வாய்ப்புகளிலும் அவர்கள் சேர்ந்துவாழ வாய்ப்புகள் உருவாகாதநிலையில், அவர்களின் பிரிவை உறுதிப்படுத்த மூன்றாவது தலாக் சொல்லப்பட வேண்டும். இந்த விஷயத்தில் குர்-ஆன் விடுத்துள்ள மிக முக்கியக் கட்டளை என்னவென்றால், ஒவ்வொருதடவை தலாக் உச்சரிக்கப்பட்டபிறகும், காத்திருப்புக் காலம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். அது, விவாகரத்துக்கு மாற்று சிந்தனை உருவாதற்குத் தேவைப்படும் காலஅவகாசமாக இருக்கவேண்டும் என்பதாகும். அப்படியும் மாறாதநிலையில்தான் விவாகரத்து நடைமுறை முழுமையடைகிறது.

மேலும் தலாக், தலாக், தலாக் என, ஒரே வாக்கியமாகவோ அல்லது ஒரே உச்சரிப்பிலும் கூறுவது திருமணத்தை முழுவதுமாக முறித்துக்கொள்வது; அது மாற்றத்தகாதது என்று, இறைத்தூதர் முகமது நபிகள் அங்கீகரிக்கவில்லை.

உண்மை இதுதான்: ஒரேநேரத்தில் முத்தலாக் சொல்வது என்பது, இசுலாம் மார்க்கத்துக்கே எதிரானது; ஏனென்றால், விவாகரத்து குறித்து குர்-ஆன் வகுத்துள்ள நெறிகளுக்கு இது எதிராகச் செல்கிறது. இவ்வாறு, ஒருவர் ஒரே நேரத்தில் முத்தலாக் சொன்னதாக கேள்வியுற்றபோது, நபிகள் மிகவும் வெகுண்டார்கள். “பெரியவனும், புனிதம் மிகுந்தவனுமான அல்லாவோடு, நான் இருக்கும்போதே விளையாடுகிறாயா?’’ என்று, நபிகள் அப்போது கேட்டுள்ளார்கள். இசுலாமிய மார்க்கக் கல்வியில் துறைபோகியான அறிஞர் தாய்மியா அவர்களும் முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்வதை நிராகரித்துள்ளார்கள்.

சில இசுலாமிய நாடுகளில், ஒரு திருமணம் செல்லாது என்று அறிவித்தலுக்கான இசுலாமியச் சட்டம் கீழ்க்கண்டவாறு சொல்கிறது: ஒன்று, கணவன் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இருக்குமிடம் தெரியாமலிருத்தல், இரண்டு, மனைவியின் பராமரிப்புச் செலவுக்கு கணவன் எதுவும் கொடுக்காமல் இருத்தல் அல்லது ஏழு ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத்தண்டனை கணவனுக்கு விதிக்கப்பட்டிருத்தல்; மூன்று, மூன்று ஆண்டுகளுக்கும் அதிகமாக ஒரு கணவன், கணவனுக்குரிய கடமைகளைச் செய்யாதிருத்தல்; நான்கு, ஆண்மையற்றவனாக இருத்தல் அல்லது தொழுநோயாளியாக இருத்தல்; ஐந்து, மனைவியை அடித்துத் துன்புறுத்துபவனாக, கொடூரமானவனாக, மனைவியைத் தவறான வழிகளுக்கு வற்புறுத்துகிறவனாக கணவன் இருத்தல்; ஆறு, மனைவி தனது மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதைத் தடுத்தல் அல்லது அவளது உடன்பாடு இல்லாமல் ஒன்றுக்கும் அதிகமான மனைவியரை வைத்திருத்தல் ஆகிய ஏழு காரணங்களால் ஒருவரது திருமணம் முடிவுக்கு வருவதாக அறிவிக்கமுடியும் என்கிறது அந்த இசுலாமிய நாடுகளின் சட்டங்கள்.

ஒரே நேரத்தில், முத்தலாக் சொல்வதற்கு எதிராக குர்-ஆன் கட்டளையிட்டுள்ளபோதிலும், ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்லி விவாகரத்தாகிவிட்டதாக அறிவிப்பதை அகில இந்திய இசுலாமிய தனிநபர் சட்ட வாரியம் தொடர்ந்து ஆதரவுக் கருத்துகளை பரப்பியும், அதற்கு எதிராகக் கருத்துச் சொல்பவர்களை இசுலாம் மார்க்கத்துக்கு எதிரானவர் என்று முத்திரை குத்தியும் வருகிறது. அகில இந்திய இசுலாமிய தனிநபர் சட்ட வாரியம் 1972-73 காலகட்டத்தில் அமைக்கப்பட்டது. இந்திய இசுலாமியர்கள் கடைப்பிடிக்கும் ஷரியத் சட்டம் தொடர்பாக, மத்திய அரசு புதிய சட்டம் இயற்ற முயன்றதைத் தொடர்ந்து இந்த வாரியம் அமைக்கப்பட்டது. இதன் பின்புலம் என்னவென்றால், அப்போது நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான ஏற்பு மசோதா தாக்கலானபோது, நாடு முழுவதும் ‘ஒரே சிவில் சட்டம் கொண்டுவருவதற்கான முதல் நடவடிக்கை’ என்று, அந்த மசோதாவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக உலிமா வெகுண்டெழுந்து, இது இந்தியாவில் இசுலாமியர்களுக்கு உள்ள தனித்த அடையாளங்களை நீர்த்துப்போகச் செய்யும் என்று, உடனடியாக உலிமா கதறியது.

முரண்நகையாக, உலகம் முழுவதுள்ள இசுலாமிய நாடுகளான பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி, துனிஷியா, அல்ஜீரியா, ஈராக், ஈரான், இந்தோனேஷியா மற்றும் வங்கதேசம் என, பல நாடுகளில் ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்லி விவாகரத்து உறுதிசெய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இவற்றில் பல நாடுகளில் திருமணமான தம்பதிக்குள் ஏற்படும் முரண்கள், கருத்து மாறுபாடுகளை விசாரிக்க தனித் தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குரானிய ஆன்மிகக் கோட்பாடுகள் நீதி, நியாயம், நேர்மை, சமத்துவம் ஆகிய நெறிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பதை இசுலாமிய அமைப்புகள் புரிந்துகொள்ள வேண்டும். இத்தகைய அறநெறிகளுக்கு எதிரான, குறுக்கும் எந்த ஒரு சட்டமும் ஏற்கத்தக்கதல்ல. ஆனால், இசுலாமிய ஆணாதிக்கச் சக்திகள் தொடர்ந்து இதை ஏற்க மறுத்துவருகிறது.

கட்டுரையாளர்: மொயின் குவாசி. இசுலாமிய அறிஞர், எழுத்தாளர், வங்கியாளர். பொருளாதாரம் மற்றும் ஆங்கிலத்தில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவர். மதம், ஊரக நிதி, பண்பாடு, கைவினைக் கலை குறித்து பல புத்தகங்கள் எழுதியுள்ளார். ‘வளர்ச்சிக்கான வங்கியாளரின் கிராமக் குறிப்புகள்’ என்ற அவரது புத்தகம் மிகவும் பிரபலமானது.

முத்தலாக்- மூன்று முறை தலாக் என்று சொல்வது.

http://www.countercurrents.org/qazi290316.htm�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *