முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படவுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.டி., எம்.எஸ்., எம்டிஎஸ் உள்ளிட்ட மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 1,250 முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் இருந்தன. கூடுதலாக 124 இடங்களை வழங்க இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்தது. மேலும், முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்பு இடங்களை முதுநிலை பட்டப்படிப்புகளாக மாற்றுவதற்கு அனுமதி அளித்தது மத்திய அரசு.
இதையடுத்து 384 இடங்கள் கூடுதலாகக் கிடைத்துள்ளன. இதைத் தொடர்ந்து, வரும் கல்வியாண்டில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் 1,758ஆக அதிகரித்துள்ளது. இவற்றில் 50 சதவிகித இடங்கள் தேசிய அளவிலான ஒதுக்கீட்டுக்கு விடப்படும். மீதமுள்ள இடங்களுக்கும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படும் 235 இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.
வரும் ஆண்டில் முதுநிலை படிப்புகளில் சேர்வதற்காக விண்ணப்பிப்பது மார்ச் 11ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 11,650 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, முதுநிலை படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை (மார்ச் 30) வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.�,