முதல்வர் வீட்டில் சோதனை நடத்துவார்களா? ஸ்டாலின்

Published On:

| By Balaji

யார் புகார் கொடுத்தாலும் ரெய்டு நடத்துவார்கள் என்றால், கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்ததற்கு ஆதாரம் இருக்கிறது. ஆகவே, முதல்வர் வீட்டில் ரெய்டு நடத்துவார்களா என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (மார்ச் 30) மாலை ஓசூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமார், ஓசூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சத்யா ஆகிய இருவரையும் ஆதரித்து ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அங்கு தெலுங்கு மொழி பேசும் வாக்காளர்கள் அதிகமாக உள்ளதால் ஸ்டாலின் முதலில் தெலுங்கில் வணக்கம் சொல்லி தனது உரையைத் தொடங்கினார்.

பிரதமர் மோடியும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தங்களது ஆட்சியில் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை எடுத்துச் சொல்லி வாக்கு கேட்டால் அவர்களை விமர்சிக்க எதுவும் இல்லை. ஆனால், அவர்கள் திமுக, காங்கிரஸை விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்று கூறிய ஸ்டாலின் திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவந்த திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

ஓசூரில் திமுகவை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமியை, 6% முனுசாமி என்றுதான் அதிமுகவினர் அழைப்பார்கள் என்ற ஸ்டாலின், “ஜெயலலிதா தலைமையில் அதிமுக பொதுக்கூட்டம் நடந்தபோது, அவரை கூட்டத்தின் ஒரு பக்கத்திலிருந்து 6% முனுசாமி என்று அழைத்தனர். முனுசாமி ஜெயலலிதாவால் அமைச்சரவையிலிருந்து தூக்கி எறியப்பட்டவர். அவரைத்தான் இன்று எடப்பாடி இங்கு வேட்பாளராக நிறுத்தியுள்ளார்.

ஜெயலலிதாவுக்குப் பிடிக்காத மோடி, விஜயகாந்துடன் ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் கூட்டணி வைத்துப் போட்டியிடுகின்றனர். வன்முறையின் மறு பெயரே பாமகதான் என்று ஜெயலலிதா சொன்னார். அந்த வகையில் அவர் யாருடைய பதவியை எல்லாம் நீக்கினார்களோ அவர்களைத்தான் தற்போது ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் ஆதரிக்கின்றனர்” என்றார். திருவண்ணாமலை வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பெரம்பலூர் வேட்பாளர் தொட்டியம் சிவபதி ஆகியோர் பெயரையும் ஸ்டாலின் பட்டியலிட்டார்.

மேலும், “மருத்துவமனையில் ஜெயலலிதாவைப் பார்த்தேன் என்று அமைச்சர் செங்கோட்டையன் சொன்னார். ஆனால், இது பொய் என்று மறுத்தார் கே.பி.முனுசாமி. சசிகலாவைக் காப்பாற்ற தர்மத்தையே சாகடித்திருக்கிறார் செங்கோட்டையன் என்றெல்லாம் சொன்ன கே.பி முனுசாமி இன்று ஓசூரில் அதிமுக வேட்பாளராக இருக்கிறார். அதிமுக ஆட்சி நோய்வாய்ப்பட்டுப் படுத்திருக்கிறது. ஐசியுவில் இருந்தால்கூட காப்பாற்றிவிடலாம். ஆனால் இந்த ஆட்சி கோமா நிலையில் இருக்கிறது ” என்று விமர்சித்தார்.

மத்திய அரசுத் துறை பணிகளில் தமிழக இளைஞர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டிய ஸ்டாலின், “இளைஞர்கள் வேலையில்லாமல் தவித்துவரும் நிலையில், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் தென்னக ரயில்வேக்கு 1,765 பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 1,600 பேர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுகிறார்கள். வருமான வரித் துறையில் 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் பணியில் அமர்த்தப்பட்டவர்களில் 90 சதவிகிதத்தினர் வடமாநிலத்தவர்கள். 2018ஆம் ஆண்டு வருமான வரித் துறை ஆய்வாளர்கள் பணியில் 100 பேரில் 99 பேர் வடமாநிலத்தவர்கள், டேக்ஸ் அசிஸ்டண்ட் பதவியில் அமர்த்தப்பட்ட 205 பேரில் வெறும் 5 பேர் மட்டும்தான் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று பட்டியலிட்டார். 2010 முதல் 2019 வரை தென்னக ரயில்வே பணியிடங்களில் மட்டும் பிகாரைச் சேர்ந்தவர்கள் 18 சதவிகிதம் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்” என்றார்.

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு தொடர்பாகப் பேசிய ஸ்டாலின், “போலீஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாகத் தேர்தல் அதிகாரி கூறுகிறார். யார் புகார் கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வார்களா? நான் புகார் கொடுக்கிறேன் பிரதமர் வீட்டில் கறுப்புப் பணம் இருக்கிறதென்று, அப்படியானால் பிரதமர் வீட்டில் சோதனை நடத்துவார்களா? கொடநாடு கொலை, கொள்ளை குறித்து ஆதாரம் இருக்கிறது. அப்படியானால் முதல்வர் வீட்டில் ஏன் சோதனை நடத்தவில்லை? தோல்வியின் விளிம்பில் இருப்பதால் இதுபோன்று நடந்துகொள்கிறார்கள்” என்றார் ஸ்டாலின்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share