ஆளுநர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் அம்மாநில முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே அதிகார மோதல் இருந்து வருகிறது. கிரண்பேடி அறிவுறுத்தலின் பேரில், ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு, காவல்துறை மூலம் அம்மாநிலத்தைச் சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனிடையே இரண்டு ஆண்டு காலமாக கிரண்பேடி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் கோப்புகளை தடுத்து நிறுத்துவது, மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தத் தடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என்று குற்றம்சாட்டி கடந்த நான்கு நாட்களாகத் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார் நாராயணசாமி. இதனால் ஆளுநர் மாளிகை முன்பு போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
எனினும், காவல்துறை அதிகாரிகள் மற்றும் குடிமைப் பணி அதிகாரிகளுக்கு உத்தரவிடுவது, அவர்கள் தரும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகிறார் முதல்வர்.
இதுதொடர்பாக கிரண்பேடி தனது ட்விட்டர் பக்கத்தில் நாராயணசாமி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதில், ஆளுநர் மாளிகைக்கு வெளியேயும் சாலையிலும் முதல்வர் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுகிறார். இந்தப் புகைப்படம் அவருடையது மற்றும் அவருடைய செயலாளருடையது என்று கூறி புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ள கிரண்பேடி, ”இதுதான் சட்டப் பூர்வமானதா? என்று முதல்வருக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாராவது ஒரு சாமானியன் உங்கள் அலுவலகத்துக்கு வெளியே இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருந்தால் காவல் துறையினர் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள்? தயவு செய்து காவல்துறையினர் அதனைச் செய்யுங்கள்?” என்று தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து பிப்ரவரி 21ஆம் தேதி காலை 10 மணியளவில் முதல்வர், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தத் தயாராக இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ள கிரண்பேடி, அதற்குப் பிறகாவது ஆளுநர் மாளிகை முன்பு போக்குவரத்து சீராகும் என்று நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியவர்கள் புதுச்சேரி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள நாராயணசாமி, ”காந்திவழியில் அமைதியாக. போராடுவதாகவும், இலவச அரிசி திட்டத்தை தடுத்தது, சிஎஸ்ஆர் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது போன்ற அரசு திட்டங்களை செயல்படுத்தவிடாமல் தடுத்ததற்காக கிரண்பேடிதான் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
�,”