சேலம் சிறுமி படுகொலை வழக்கில் கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் மாவட்டத்தில் நீதியின் லட்சணம் இதுதானா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்பட்டியைச் சேர்ந்தவர் சிறுமி ராஜலட்சுமி (13). கடந்த அக்டோபர் மாதம் 22ஆம் தேதி பக்கத்து வீட்டில் வசிக்கும் தினேஷ்குமார் என்பவரால் தொடர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, அவரது ஆசைக்கு இணங்க மறுத்ததால் தாய் எதிரிலேயே தினேஷ்குமாரால் கொடூரமான முறையில் கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்டார் எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக தினேஷ்குமாரை கைது செய்த ஆத்தூர் டவுன் போலீசார், அவர் மீது கொலை, ஆபாசமாகப் பேசுதல், வன்கொடுமை தடுப்புச்சட்டம், போக்சோ சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
விசாரணையின்போது தினேஷ்குமார், ”நான் சிறுமியைக் கொல்லவில்லை, என் உடம்பில் முனி ஏறிக் கொன்றுவிட்டது” என்று காவல் துறையிடம் தெரிவித்துள்ளார். இதனால் காவல் துறையினர் அவர் மீது போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும், சம்பவ இடத்தைப் பார்வையிட்டு போதுமான விசாரணை மேற்கொள்ளவில்லை, என்று குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் இன்று (நவம்பர் 1) சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, சிறுமி ராஜலட்சுமியின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
அப்போது தினேஷ்குமாரைக் கடுமையாக தண்டிக்க வேண்டும், ராஜலட்சுமியின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்தநிலையில், குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்காமல், அவரைக் காப்பாற்ற அரசு முயற்சிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, அவர் இன்று (நவம்பர் 1)தனது ட்விட்டர் பக்கத்தில், “சேலத்தில் 13வயது சிறுமி ராஜலட்சுமியை பாலியல் வன்கொடுமை செய்து,தலையைத் துண்டித்த அரக்கனைக் குண்டர் சட்டத்தில் சிறைக்குள் தள்ளாமல், மனநிலை சரியில்லாதவர் என்று சித்தரிப்பதாக தெரிகிறது. முதலமைச்சர் மாவட்டத்தில் கொடுங்குற்றத்திற்கு நீதி வழங்கும் லட்சணம் இதுதானா? இரும்புக்கரத்தால் அடக்க வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், இவ்வழக்கில் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.�,