தபால் தேர்வுகளை தமிழில் நடத்தாதது தொடர்பான விவகாரத்தில் சட்டமன்றத்திலிருந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்திய தபால் துறை நடத்தும் பல்வேறு தேர்வுகளில் முதல் தாளுக்கான தேர்வுகள் இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை சுற்றறிக்கை வெளியிட்டதற்கு தமிழகம் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இது இந்தித் திணிப்புக்கான முயற்சி என்று கடுமையாக சாடிய தமிழக அரசியல் கட்சிகள், அந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தின. இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் தபால் துறை தேர்வுகளுக்கு தடைவிதிக்க மறுத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தேர்வு முடிவுகளை வெளியிட மட்டும் தடை விதித்தது.
இந்த நிலையில் தபால் தேர்வுகளில் மாநில மொழிகள் நீக்கப்பட்டது தொடர்பாக சட்டமன்றத்தில் இன்று (ஜூலை 15) திமுக சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதுதொடர்பாக பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு, “தபால் துறை தேர்வை தமிழில் நடத்த சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “தமிழகத்தில் தபால் தேர்வுகள் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 இடங்களில் மட்டுமே நடந்தது. தபால் துறை முதல் நிலை தேர்வுகள் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே நடத்தப்படும். இரு மொழிக் கொள்கையைப் பின்பற்றும் தமிழக அரசு இந்தித் திணிப்பை ஏற்காது. மத்திய அரசு தேர்வுகளை மாநில மொழிகளிலும் நடத்த வலியுறுத்தப்படும்” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், “மொழிக் கொள்கை விவகாரத்தில் எதிர்க்கட்சியுடன் கருத்து வேறுபாடு இல்லாதபோது ஏன் தீர்மானம் நிறைவேற்றக் கூடாது. இதில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் கொள்கை பேதமில்லை. எனவே மொழிக் கொள்கையில் மத்திய அரசை எதிர்த்து ஒருமித்த கருத்துடன் தீர்மானம் இயற்ற வேண்டும்” என வலியுறுத்தினார்.
இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுந்து, “மொழிக் கொள்கையில் திமுகவுக்கு இருக்கும் உணர்வை விட 100 மடங்கு அதிகமாக அதிமுகவுக்கு இருக்கிறது. மொழிக் கொள்கையில் முடிவு கிடைக்கும் வரை தமிழக அரசு தொடர்ந்து போராடும். நீங்கள் வெளிநடப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கான காரணத்தை தேடிக் கொண்டிருக்கிறீர்கள்” என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், “தீர்மானம் நிறைவேற்ற முடியாது என முதல்வர் சொல்லவில்லை. தேர்வு முடிவுகளை வெளியிட நீதிமன்றம் தடை விதித்திருக்கும் நிலையில் தீர்மானம் நிறைவேற்ற எந்த அவசரமும் இல்லை. மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் பிரச்சினை உருவாக்கி குளிர் காய நினைக்கிறது திமுக. மொழிக் கொள்கையில் மத்திய அரசின் பதிலுக்குப் பின் தீர்மானம் நிறைவேற்றப்படும்” எனத் தெரிவித்தார்.
விவாதத்தில் முதல்வரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து துரைமுருகன் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ், முஸ்லீம் லீக் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், “எந்தெந்த துறைகளில் இந்தியை திணிக்க முடியுமோ அங்கெல்லாம் திணிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. ஐஏஎஸ் தேர்வு கூட தமிழில் எழுதலாம் என்ற நிலையில் சாதாரண போஸ்ட் மேன் வேலைக்கு இந்தி தெரிய வேண்டும் என்கிறது. இதுதொடர்பாக சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, தீர்மானம் கொண்டுவருவோம் என்றோ வரமாட்டோம் என்றோ அரசு பதில் சொல்லவில்லை. முதல்வர் எங்களுடைய உணர்வுகளை கொச்சைப்படுத்துவது போல கருத்து தெரிவித்ததால் வெளிநடப்பு செய்தோம்” என்றும் தெரிவித்தார்.
**
மேலும் படிக்க
**
**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**
**[திமுகவில் இணைந்த தேமுதிக மா.செ!](https://minnambalam.com/k/2019/07/14/48)**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[ வேலுமணியா இப்படி? – எடப்பாடி ஆதங்கம்!](https://minnambalam.com/k/2019/07/14/27)**
**[எம்.எல்.ஏ புகார்: அமைச்சரை எச்சரித்த எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/14/46)**
�,”