திராவிட இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு பேட்டி
**-ஆரா**
பிப்ரவரி 10- 1969…
இன்றைக்கு மிகச் சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்னால், ‘மு.கருணாநிதி என்னும் நான்’ என்ற கரகரத்த குரலுடன் சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் சர்தார் உஜ்ஜல் சிங் முன்னால் தமிழக முதல்வராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் கலைஞர்.
அன்றில் இருந்து பல்வேறு ஏற்ற இறக்கங்களைக் கடந்து, சமவெளிகள், பள்ளத்தாக்குகளைக் கடந்து அவரது அரசியல் நதி ஜீவநதியாக இன்னும் ஓடிக் கொண்டே இருக்கிறது. கலைஞர் கடந்த ஆகஸ்டு 7 ஆம் தேதி காலமான பின்னாலும் அவரது அடிச்சுவடு இன்னும் தமிழக, இந்திய அரசியலில் தொடர்கிறது.
கலைஞர் முதல்வராகப் பொறுப்பேற்று பொன் விழா தொடங்குகிற இந்த முக்கியமான நாளில் அவரை எவ்வழியில் நினைவு கூர்வது? திராவிட இயக்க ஆய்வாளரும், திமுக வரலாறு உள்ளிட்ட எண்ணற்ற நூல்களை எழுதிய எழுத்தாளருமான க. திருநாவுக்கரசு அவர்களை சென்னை மந்தவெளியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.
**கலைஞரின் சாதனைகளில் மகத்தானதாக எதைக் கருதுகிறீர்கள்?**
“கலைஞர் முதல்வர் பொறுப்பேற்று 50 ஆம் ஆண்டு தொடக்க விழாவுக்கான தொடக்க நாள்தான் பிப்ரவரி 10. அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின் கலைஞர் இந்தப் பொறுப்புக்கு வந்து செய்த சாதனைகள் மிகச் சிறப்புக்குரியவை. ஐந்துமுறை கலைஞர் முதல்வராக இருந்தார். 18 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறார். இந்த ஆட்சிக் காலத்தில் அவர் செய்த சாதனைகள், மத்திய அரசோடு அவர் நடத்திய உரிமைப் போராட்டங்கள், அதன் மூலம் பெற்ற வெற்றிகள் என்று நிரம்பச் சொல்லலாம். ஆனால் இன்றைய தினம் நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ப கலைஞருடைய பணிகளை நினைவுகூர வேண்டுமானால் மாநில சுயாட்சியைப் பற்றி சொல்லலாம்.
**மாநில சுயாட்சிக்கு அண்ணா இட்ட உரம் பற்றிச் சொல்லுங்களேன்…**
அறிஞர் அண்ணா அவர்கள் 1960-களிலேயே திமுக ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னதாகவே வழக்கறிஞர்களிடையே நிகழ்த்திய சொற்பொழிவுகளில் மத்திய – மாநில உறவுகளைப் பற்றியும் மாநிலங்களுக்கு குறைவான அதிகாரமே இருப்பது பற்றியும், இப்போதைய அரசியல் சட்டத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பது பற்றியும் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
1967 ஆம் ஆண்டு அண்ணா ஆட்சிப் பொறுப்பினை ஏற்று தமிழ்நாட்டின் முதல்வர் என்ற பொறுப்பை அவர் வகித்தபோது தனது அனுபவத்திலேயே மத்திய மாநில உறவுகளில் எவ்வளவு சிக்கல் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார். மாநில அரசு என்பது ஒரு நகராட்சி அந்தஸ்தில்தான் இருக்கிறது. சுயேச்சையான அதிகாரத்தை தன்னிச்சையாக தனதுமாநில மக்களுக்கு ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கிற முதல்வர் செயல்படமுடியாத நிலையில் அவரது கரங்கள் கட்டப்பட்டிருக்கின்றன என்பதை அண்ணா உணர்ந்துகொண்டார்.
23 மாதங்களே அண்ணா ஆட்சியில் இருந்தார். நோயால் அவர் மரணம் அடைந்தார். இறுதியாக அவர் பொங்கல்விழாவின் போது தம்பிக்கு எழுதிய மடலில் மாநில சுயாட்சி பற்றி வற்புறுத்தி மாநிலங்களுக்குரிய அதிகாரம் பகிர்ந்த ளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அண்ணா ஆட்சியில் மாநில சுயாட்சி மாநாடு ஒன்றை நடத்தினார்கள். 60 களில் தொடங்கி அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது வரை மாநிலங்களுக்கு உரிய அதிகாரம் இல்லை என்பதைக் குறிப்பிட்டு அதிகாரப் பகிர்வு வேண்டும் என்பதை வலியுறுத்திக்கொண்டே மரணம் அடைந்தார்.
**அண்ணாவின் மாநில சுயாட்சிக் கொள்கையை கலைஞர் எவ்வாறு முன்னேந்தினார்?**
அண்ணா மறைவுக்குப் பின்னர் 10-02-1969 அன்று முதல்வராகப் பொறுப்பேற்றார் கலைஞர். சாதனை வீரரான கலைஞர் பல அரிய சாதனைகளை நிகழ்த்திக் காட்டினார். அதில் முக்கியமாக அண்ணா வலியுறுத்திய மாநில சுயாட்சிக்கு ஒரு வடிவம் கொடுக்கத் தொடங்கினார்.
ஏன் இதை இப்போது விரிவாக சொல்கிறேன் என்றால் இப்போதும் மாநில சுயாட்சி தேவைப்படுகிறது. மத்திய அரசு அதிகாரக் குவிப்பில் இயங்கிக்கொண்டிருக்கிறது. அண்ணா முன் மொழிந்த மாநில சுயாட்சிக் கொள்கைக்கு கலைஞர் அவர்கள் வடிவம் கொடுத்தார். முதல் கட்டமாக ராஜமன்னார் குழுவை அமைத்து அந்தக் குழுவில் சந்திரா ரெட்டி, கல்வி அறிஞர் டாக்டர் ஏ.எல். முதலியார் ஆகியோரை உறுப்பினர்களாக நியமித்தார். அந்தக் குழு தமிழ்நாடு அரசுக்கு மத்திய -மாநில உறவுகளைப் பற்றி தமிழ்நாடு அரசுக்கு ஒரு அறிக்கையை அளித்தது.
அதற்கு மேல் கட்சியிலும் மாநில சுயாட்சி பற்றி ஆராய ஒரு குழுவை அமைத்தார் கலைஞர். அந்தக் குழுவில் இரா. செழியன், மாறன், சிந்தனைச் செம்மல் கு.சா. ஆனந்தன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ராஜ மன்னார் கமிட்டியின் அறிக்கையை அந்தக் குழுவிடம் ஆராயச் சொன்னார். அவர்களும் ராஜமன்னார் கமிட்டி பற்றி ஆராய்ந்து ஓர் அறிக்கையை தந்தார்கள். அந்த அறிக்கையின் அடிப்படையிலேதான் 1974 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த கலைஞர் மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றினார்.
இந்தச் சாதனையை எந்த முதல்வரும் நிகழ்த்தியதில்லை. கலைஞர் அவர்கள்தான் நிகழ்த்திக் காட்டினார். இதோடு நில்லாமல் குண்டூரிலும்,கல்கத்தாவிலும், சென்னையிலும், காஷ்மீரிலும் மாநில சுயாட்சி மாநாடுகளை நடத்தினார் கலைஞர். அதன் மூலம் எல்லா மாநிலக் கட்சித் தலைவர்களையும் அழைத்து அதற்கு ஒரு உத்வேகத்தைத் தந்தார்கள்.
** அதன் பின்னர் மாநில சுயாட்சிக் கொள்கையில் தேக்கம் ஏற்பட்டதா?**
இடையில் அந்தக் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில் ஒரு தொய்வு ஏற்பட்டுவிட்டது. தொய்வு என்பது மத்திய ஆட்சியில் மாநில கட்சிகள் பங்கு வகிக்கத் தொடங்கியபோது மத்திய அரசினை மாநிலக் கட்சிகள் தமது உரிமைக்காக வற்புறுத்துவது குறைந்துவிட்டது என்று சொல்ல வேண்டும்.
இன்றைய நிலைமையில் மத்தியில் காங்கிரஸாக இருந்தாலும், காங்கிரஸ் அல்லாத கட்சிகளாக இருந்தாலும், பாஜக ஆட்சியாக இருந்தாலும் அதிகாரக் குவிப்பு என்பது அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது.
மத்தியப் பட்டியல், மாநிலப் பட்டியல் என்றும் பொதுப் பட்டியல் என்றும் அரசியல் அமைப்பு சாசனத்தில் சொல்லப்பட்டுள்ளன. ஆனால் இன்றைய தினம் என்னவாக இருக்கிறது என்றால், பொதுப் பட்டியலில் இருந்து (அதாவது மாநில அரசும் மத்திய அரசும் சேர்ந்து செய்கிற பணிகள்) பல பணிகளை மத்திய அரசாங்கம் எடுத்துக் கொண்டது. எல்லா அதிகாரங்களும் மத்திய அரசிடம்தான் குவிந்திருக்கிறது.
ஆகவே கலைஞரை நினைவுகூர்கிற இந்த நாளில் அவர் தீர்மானமாக முன்னெடுத்த, பல மாநிலங்களில் மாநாடுகளை நடத்திக் காட்டிய,அதற்காக குழுவை அமைத்த மாநில சுயாட்சியை திமுக மீண்டும் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்.
**திமுக ஏற்கனவே மாநில சுயாட்சியை தன் முதன்மை முழக்கமாக வைத்திருக்கிறது. இதை மேலும் தீவிரப்படுத்துதல் எவ்வாறு? **
இன்றைக்கு மத்திய- மாநில அரசுகளின் உறவு சுமுகமாக இல்லை என்பதற்கு நேற்று பிப்ரவரி 8 ஆம் தேதி கூட எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. நேற்று வடக்கு கொல்கத்தாவில் உயர் நீதிமன்றத்தின் கிளையை பிரதமர் மோடி திறக்க வருகிறார். அந்த விழாவுக்கு மேற்கு வங்காள மாநில முதல்வர் அழைக்கப்படவில்லை. கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கும் அழைப்பு இல்லை. பிரதமர் நேராக விழாவுக்கு வருகிறார், கிளையைத் திறக்கிறார், சென்றுவிடுகிறார்.
இது எதைக் காட்டுகிறது? மத்திய அரசின் ஏகாதிபத்தியத்தைக் காட்டுகிறது. ஜனநாயகம் பெயரளவுக்குத்தான் இருக்கிறது. ஃபெடரல் செட்டப் என்று சொல்கிறார்கள். கூட்டாட்சி என்று சொல்கிறார்கள். கூட்டாட்சி என்று அரசியல் சட்டத்தில் ஒரு இடத்தில் கூட சொல்லப்படவில்லை. கூட்டாட்சி என்பது செயல்படுத்திக் காட்டுவதன் மூலமாகச் செய்துகொள்ளலாம் என்று அரசியல் சட்ட அமைப்பை உருவாக்கிய அறிஞர்கள் ஒருவேளைக் கருதியிருக்கலாம். ஆனால் நடைமுறையில் கூட்டாட்சி முறை செயல்படுத்தப்படவில்லை.
இன்றைக்கும் ஒற்றை ஆட்சி முறைதான் இங்கே அமலில் இருக்கிறது. எனவே மாநிலங்களுக்கு உரிய உரிமைகளை வழங்கி, முக்கியமான சில உரிமைகளை மட்டும் மத்திய அரசு வைத்துக் கொள்வதுதான் இந்த இந்தியா, நிலைபெற்று இருப்பதற்கு காரணமாக இருக்க முடியும்.
எனவே கலைஞர் வற்புறுத்தி வந்த மாநில சுயாட்சிக் கொள்கையை மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் போன்றவர்கள் இந்தியாவெங்கும் உயர்த்திப் பிடித்து அந்தத் தீர்மானத்துக்கு வடிவம் கொடுக்க வேண்டும்”
கலைஞர் எப்படி குண்டூர், கல்கத்தா, காஷ்மீரில் மாநில சுயாட்சி மாநாடு நடத்தினாரோ அதுபோல திமுக தலைவர் ஸ்டாலினும் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில சுயாட்சி மாநாட்டை நடத்த வேண்டும். இதுவே கலைஞர் முதல்வராகப் பொறுப்பேற்றதன் பொன் விழாவில் நாம் ஆற்றும் ஆகச் சிறந்த அரசியல் கடமையாக இருக்கும்”என்று நிறைவு செய்தார் திராவிட இயக்கத்தின் என்சைக்ளோபீடியா க. திருநாவுக்கரசு.
இந்தக் கோரிக்கையை ஏற்று இந்தியா முழுதும் மாநில சுயாட்சி மாநாடுகளை திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தினால், இந்தியாவுக்கே தமிழகம் மீண்டும் வழிகாட்டத் தொடங்கும். மாநில சுயாட்சிக் குரல் நாடு முழுதும் எழுந்தால் மத்திய அரசின் அதிகாரக் குவிப்பும் அடங்கும்! ஸ்டாலின் செய்வாரா?
படம் நன்றி: தி ஹிந்து ஆர்ச்சிவ்ஸ்
�,”