முதல்வரை வழியனுப்ப துப்பாக்கியுடன் வந்த அதிமுக நிர்வாகி!

Published On:

| By Balaji

சென்னை விமான நிலையத்திற்கு முதல்வரை வழியனுப்ப துப்பாக்கியுடன் வந்த அதிமுக நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து இன்று (செப்டம்பர் 27) பிற்பகல் விமானம் மூலம் கோவை புறப்பட்டுச் சென்றார். வழக்கமாக முதல்வர் விமான நிலையம் வந்தால் அவரை வழியனுப்ப அதிமுக நிர்வாகிகள் வருவது வழக்கம். அதுபோலவே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் முதல்வரை வழியனுப்ப வந்தனர்.

முன்னதாக விமான நிலையத்திற்குள் அதிமுக நிர்வாகிகளை அனுமதிப்பதற்கு முன்பாக, அவர்களை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, காஞ்சிபுரம் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக ஒன்றியச் செயலாளர் ஜீவானந்தம் என்பவர் துப்பாக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரே தாமாக முன்வந்து துப்பாக்கி வைத்திருப்பதாக ஒப்புக்கொண்டார்.

அவரை மீனம்பாக்கம் எஸ்3 காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முதல்வர் பயணம் செய்யவுள்ள நேரத்தில் இதுபோன்று துப்பாக்கி எடுத்து வருவது குற்றம் என்பது தமக்கு தெரியாது என்று கூறிய அவர், துப்பாக்கியை பயன்படுத்துவதற்கான உரிய சான்றிதழ் தம்மிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரிமச் சான்றிதழை கேட்டபோது, தற்போது அது தம்மிடம் இல்லை என்று கூறியுள்ளார். இதனையடுத்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், உரிய ஆவணங்களை காண்பித்த பிறகு எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share