�சென்ற 2017ஆம் ஆண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய முதலீடுகள் 4 பில்லியன் டாலர்கள் குறைந்துள்ளன.
வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு சார்பாக 2018ஆம் ஆண்டுக்கான உலக முதலீட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘இந்தியாவில் அந்நிய முதலீடுகள் குறைந்ததன் விளைவாக தெற்காசியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய முதலீடுகள் 52 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. 2016ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 44 பில்லியன் டாலர் மதிப்பிலான அந்நிய நேரடி முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால், 2017ஆம் ஆண்டில் வெறும் 40 பில்லியன் டாலர் முதலீடு மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இணைதல் மற்றும் கையகப்படுத்தும் தொழில் நடவடிக்கைகள் 8 பில்லியன் டாலர் மதிப்பிலிருந்து 23 பில்லியன் டாலருக்கு உயர்ந்துள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் 11 பில்லியன் டாலராக உள்ளது. குறிப்பாக இந்தியாவின் ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே வெளிநாட்டுச் சொத்துகளில் அதிகளவில் முதலீடு செய்து வருகிறது. தினசரி 2.85 லட்சம் பேரல் எண்ணெய்யை உற்பத்தி செய்துவரும் இந்நிறுவனம் உலகின் 18 நாடுகளில் சுமார் 39 திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. 2016ஆம் ஆண்டில் ரஷ்யாவில் வான்கோர்னெஃப்ட் நிறுவனத்தின் 26 சதவிகிதப் பங்குகளைக் கைப்பற்றியிருந்த ஓஎன்ஜிசி, 2017ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் டுலாவ் ஆயில் நிறுவனத்தின் 15 சதவிகிதப் பங்குகளைக் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.�,