முட்டுச்சந்தில் தேமுதிக: முடிவு இன்று அறிவிப்பு!

Published On:

| By Balaji

தேமுதிக, அதிமுக கூட்டணியில் இருக்குமா அல்லது தனித்துப் போட்டியிடுமா என்பதுதான் அக்கட்சிக்கு இப்போது இருக்கும் வாய்ப்புகள்.

தேமுதிக கூட்டணி விஷயங்களில் இரட்டை நிலை கடைப்பிடித்தது என்று கோபமாக இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இரண்டு இடங்கள் மட்டுமே அக்கட்சிக்கு ஒதுக்கப்படும் என்று கட்சிக்குள் கூறி வருகிறார். அதேநேரம் தேமுதிக பற்றி நேற்று சேலத்தில் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘நல்லவற்றைப் பாராட்டுவோம்னு பிரேமலதா சொல்லியிருக்காங்க. நீங்க குண்டக்க மண்டக்க கேட்காதீங்க’ என்று பதில் சொன்னார் எடப்பாடி.

அதேபோல நேற்று அமைச்சர் ஜெயக்குமாரும், “பிரேமலதா சொன்னதை மறப்போம் மன்னிப்போம்’ என்று கருத்து தெரிவித்தார். மேலும், “பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. இனி தேமுதிகதான் அறிவிக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில் அதிமுக தரப்பில் அதிகபட்சம் நான்கு தொகுதிகள் என்றும் அவை வடசென்னை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விருதுநகர் ஆகிய தொகுதிகளாக இருக்கலாம் என்றும் நேற்று தேமுதிகவுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் தேமுதிக தரப்பில் மாற்றுவதற்கோ, பேசுவதற்கோ எதுவுமில்லை என்றும், ஒப்புக்கொண்டால் கூட்டணி இல்லையென்றால் அடுத்த கட்சிகளுடனான கூட்டணியை இறுதி செய்ய அதிமுக தயாராக இருப்பதாகவும் சுதீஷிடம் அதிமுக தரப்பில் நேற்றே சொல்லப்பட்டுவிட்டது.

அதிமுக அதிகபட்சமாக தர ஒப்புக்கொண்டுள்ள நான்கு தொகுதிகளில் போட்டியிடலாமா அல்லது தனித்துப் போட்டியிடலாமா என்பதுதான் தேமுதிகவின் முன்னுள்ள ஒரே கேள்வி. எனவே, இப்போது அதிமுக என்ற கட்டடத்தோடு முடியும் முட்டுச்சந்தில் போய் நிற்கிறது தேமுதிக. கிடைத்ததை வாங்கிக் கொண்டு அங்கேயே செட்டில் ஆகுமா அல்லது தன்னந்தனியே திரும்பிவிடுமா என்பதை அக்கட்சிதான் முடிவெடுக்க வேண்டும்.

ஏற்கெனவே பிரேமலதா அறிவித்தபடி இன்று (மார்ச் 10) ஞாயிற்றுக்கிழமை தேமுதிக தனது கூட்டணி அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share