முட்களின் மீது சில பட்டாம்பூச்சிகள்: பேராசிரியர் கல்யாணி பகுதி 5

Published On:

| By Balaji

(பிரபா கல்விமணி (எ) கல்யாணி, மனித உரிமைக்காகவும் இருளர்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்கும் சமூகச் செயல்பாட்டாளர். தீவிர மார்க்சிய அமைப்புகளிலிருந்து வந்து, தனது விழுமியங்கள் வழுவாது வாழும் எளிய போராளி. பாலியல் வழக்குகளில் பெண்களுக்கு நீதி கிடைக்கச்செய்வதற்காக அதிகமாக உழைத்தவர். வயதை முன்னிட்டு சேவை மனப்பான்மையை எள்ளளவும் சமசரம் செய்துகொள்ளாமல் உற்சாகத்துடன் உழைத்துவரும் மக்கள் தொண்டர். அவருடனான நேர்காணலின் தொகுப்பு இது – ஆசிரியர்)

தமயந்தி

திருக்கோவிலூரில் நடைபெற்ற பாலியல் வன்முறைச் சம்பவம் பற்றி…

கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளை முடிப்பதற்காக, போலீஸார் நாதியற்ற இருளர்களைப் பிடித்துச் சித்திரவதை செய்து சிறையில் அடைப்பது, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் காலம் காலமாக நடந்து வருகிறது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருக்கோவிலூர் அருகே உள்ள தி.கே. மண்டபத்தில் பெருமாள் கோயில் மண்டபப்படி பாறைமீது தனியாகக் குடியிருந்துவரும் முருகன் – வள்ளி குடும்பத்தினர் மீது போலீஸாரின் பார்வை திரும்பியது.

22-11-2011 அன்று அங்கு சென்ற போலீஸார் முருகன் (45), அவரது இரு மகன்கள் காசி, வெற்றிக்கண்ணு, முருகனின் தம்பி குமார், வீட்டுக்கு வந்திருந்த உறவினர்களான கண்டமானடி குமார், சிறுவாலை குமார் ஆகிய ஆறு பேரையும் பிடித்துவந்து சித்திரவதை செய்தனர். பின்பு வீட்டிலிருந்த வள்ளி (45), செல்வி (65), லட்சுமி (20), கார்த்திகா (18), வைகேஸ்வரி (20), ராதிகா (17), படையப்பா (12), மாணிக்கம் (10), ரங்கநாதன் (8) ஆகிய 9 பேரையும் அருகில் உள்ள தைலமரத் தோப்புக்குக் கடத்திச் சென்றுள்ளனர். நான்கு இளம் பெண்களை மட்டும் கீழே இறக்கி அவர்களை நான்கு போலீஸார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் 25-11-2011 அன்று விழுப்புரத்தில் உள்ள பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், மனித உரிமை ஆர்வலருமான பி.வி.ரமேஷ் அவர்கள் வீட்டில் தஞ்சமடைந்தனர். அன்று இரவு நானும், மேற்படி பி.வி.ரமேஷ் அவர்களும் அவர்களை நன்கு விசாரித்து புகாரைத் தயாரித்தோம். 26-11-2011 அன்று சங்கப் பொறுப்பாளர்களுடன் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்களை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பாமல் அன்று பிற்பகல் 2 மணியிலிருந்து மறுநாள் காலை 8 மணி வரை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனி அறையில் அடைத்துவைத்துப் பெண் போலீஸாரை வைத்து மிரட்டிப் புகாரைத் திரும்பப்பெற வற்புறுத்தியுள்ளனர். பொறுப்பு டி.ஐ.ஜி. சக்திவேல் தலைமையில் இந்தக் கொடுமை நடைபெற்றது.

தொலைக்காட்சி, நாளிதழ் மூலம் செய்திகள் வெளியாகி தமிழகம் முழுவதும் பரபரப்பானதால் வேறு வழியின்றி போலீஸார் ஒரு வழக்கைப் பதிவு செய்தனர் (திருக்கோவிலூர் கா.நி.கு.எண்.887/2011 இ.த.ச. பிரிவுகள் 323, 427, 363, 380, 3376 மற்றும் எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 3(1)(xii) ). பாதிக்கப்பட்டவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பாமல் தி.கே. மண்டபத்தில் கொண்டுபோய் விட்டனர்.

முதலில் கைதுசெய்யப்பட்ட, முருகன் உள்ளிட்ட ஆறு இருளர்களுடன் பின்பு அவர்களின் உறவினர்கள் மூவர் என ஒன்பது பேர் முதலில் திருக்கோவிலூர் பின்பு திருப்பாலைப்பந்தல், இறுதியில் விழுப்புரம் காவல் நிலையத்தில் வைத்துக் கடும் சித்திரவதைக்கு ஆளானார்கள்.

பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரையடுத்து சட்ட விரோதக் காவலில் இருந்த ஒன்பது இருளர்கள் மீதும் கண்டுபிடிக்க முடியாதிருந்த பல பொய் வழக்குகள் சுமத்தப்பட்டு, 26-11-2011 அன்று கடலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். இக்கொடுஞ்செயல் ஆய்வாளர் தமிழ்மாறன் தலைமையில் நடைபெற்றது.

பாதிக்கப்பட்ட இருளர்களுக்கு நீதி கேட்டுப் பல்வேறு மனித உரிமை அமைப்புகள், கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. வன்புணர்ச்சிக்கு ஆளான நான்கு பெண்களுக்கும் தலா ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்பட்டது. திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் சீனுவாசன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமநாதன் மற்றும் தனசேகர், கார்த்திகேயன், பக்தவச்சலம் ஆகிய ஐந்து பேரும் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், இதுவரை மேற்படிக் குற்றவாளிகள் எங்கும் கைது செய்யப்படவில்லை.

பாதிக்கப்பட்ட பெண்களைக் காவல் அதிகாரிகள் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பாத நிலையில், திருக்கோவிலூர் நீதிபதி முரளிதர கண்ணன் மேற்படி பாதிக்கப்பட்ட பெண்களை அவர்களின் இருப்பிடமான தி.கே. மண்டபத்துக்குச் சென்று விசாரணை செய்து மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பினார். மருத்துவப் பரிசோதனைக்குப் பின்பு மேற்படி பெண்கள் 30-11-2011 அன்று மாலை திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த பாதிக்கப்பட்ட பெண்களை, பழங்குடி மக்கள் கட்சித் தலைவர் தங்கமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் விழுப்புரம் சிபிஎம் கட்சி அலுவலகத்துக்குக் கடத்த முயன்றனர். அப்போது பணியில் இருந்த டி.எஸ்.பி. பன்னீர் செல்வம் மேற்படி கடத்தல் முயற்சியைத் தடுத்ததோடு, பெண்கள் விரும்பியபடி அவர்களைப் பத்திரமாக விழுப்புரம் பி.வி.ரமேஷ் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தார். உண்மை இவ்வாறு இருக்க மேற்படி தங்கமணியைப் பேராசிரியர் பிரபா கல்விமணி, பி.வி.ரமேஷ் இருவரும் தாக்கி கொலை மிரட்டல் விட்டதாகப் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.

மேற்படி அனைத்து வழக்குகளும் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என உயர் நீதிமன்ற வழக்கறிஞர் புகழேந்தி அவர்களும், மேற்படி ரமேஷ் அவர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். சம்பவம் நடந்து ஆறு வருடங்கள் முடிய போகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.

**உங்கள் தாய்த் தமிழ்ப் பள்ளிக்கான விதை எங்கிருந்து விதைக்கப்பட்டது?**

• திண்டிவனம் நகரில் 1986லிருந்து ஓர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்காகவும், கல்விச் சீர்கேடுகளுக்கு எதிராகவும் நகரக் கல்வி மேம்பாட்டுக் குழுவின் தொடர் போராட்டங்கள்.

• மக்கள் கல்வி இயக்கம் மூலம் தமிழகமெங்கும், தமிழ்வழிக் கல்வி இயக்கத்துடன் இணைந்து கருத்தரங்குகள், ஆர்ப்பாட்டங்கள், மாநாடுகள் நடத்தியது.

• 1990களில் தோழர் தியாகு தலைமையில் தமிழகமெங்கும் தாய்த் தமிழ் தொடக்கப் பள்ளிகள் ஆங்காங்கே தொடங்கப்பட்டன.

• குறிப்பாக, தோழர் தங்கராசு திருப்பூரில் நடத்திவரும் தாய்த் தமிழ் தொடக்கப் பள்ளி பற்றி பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள்.

• மாணவர்களுக்காக இலவசமாகத் தனிப்பயிற்சி நடத்த வேண்டும் என்பதற்காக திண்டிவனம் அரசு கலைக் கல்லூரிப் பேராசிரியர் அபிபுர் ரகுமான் அளித்த நன்கொடையில் 1994இல் ஏற்படுத்தப்பட்ட திண்டிவனம் நகர மற்றும் ஊரகக் கல்வி மேம்பாட்டுக் கழகம் என்ற அறக்கட்டளைக்காக திண்டிவனம் உரோசனப் பகுதியில் வாங்கி போடப்பட்டிருந்த 31 செண்டு நிலம்.

• மேலும், திண்டிவனம் நகரத்தில் நகரக் கல்வி மேம்பாட்டுக் குழுவுக்கிருந்த பரந்துபட்ட மக்களின் ஆதரவு. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் வழிக் கல்வியில் எங்களுக்கிருந்த ஈடுபாடு.

**தமிழைப் பாடமொழியாக வைப்பது மொழியின்பாலுள்ள ஈர்ப்பாலா? அல்லது தமிழ்த் தேசியத்தின் கூறாலா?**

என்னைப் பொறுத்தவரையில் மேற்படி இரண்டைக் காட்டிலும் கல்வியின் மீதுள்ள ஈர்ப்புதான். ஒரு நல்ல கல்வியை, தரமான கல்வியை, படைப்பாற்றல் மிக்க கல்வியை தாய்மொழி மூலம் மட்டுமே அளிக்க முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவன் நான். மேலும் ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது மனிதவளத்தையே பிரதானமாகச் சார்ந்துள்ளது. மனிதவளம் மேம்படத் தாய்மொழியில் கல்வி மிக மிக அவசியம். தாய்மொழிக் கல்வி மூலமே ஒரு நாடு அனைத்துத் துறைகளிலும் ஏற்றம் காண முடியும். தாய்மொழி வழிக் கல்வி என்பது அறிவுபூர்வமானது மட்டுமின்றி ஜனநாயகபூர்வமானதுமாகும்.

**கல்யாணி என்னும் களப் போராளியின் ரணங்கள் என்னென்ன?**

• தனிப்பயிற்சி எடுக்கும் பேராசிரியர்களால் தூண்டிவிடப்பட்ட மாணவர்கள் எனக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து புகார் அளித்தது.

• ஒரு கட்டப் பஞ்சாயத்துக்கு உடன்படவில்லை என்பதற்காக என்னுடன் இணைந்து போராடிவந்த திண்டிவனம் தி.க. தோழர்களும் ஆசிரியர் கந்தசாமியும் என்மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்தித் துண்டறிக்கை வெளியிட்டது.

• தாய்த் தமிழ் பள்ளியில் பயின்ற மாணவன் ஒருவன் நீச்சல் தெரியாமல் கிணற்றில் இறங்கியபோது நடந்த சம்பவத்தை முன்னிட்டு அந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி என்மீது அபாண்டமான பழியைச் சுமத்தி மொட்டை துண்டறிக்கைகள் போட்டது.

• இப்படிப் பல பொய்க் குற்றச்சாட்டுகள் நட்பு வட்டங்களிலிருந்து வந்தபோது மிகவும் மனவேதனையடைந்தேன்.

• ஆனால் ஒருபோதும், போலீஸாரால் என்மீது போடப்பட்ட பொய் வழக்குகள் பற்றியோ, அரசு மற்றும் கல்லூரிக் கல்வித் துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்தோ கொஞ்சமும் மன வேதனையோ, தளர்ச்சியோ அடைந்ததில்லை.

எல்லாவற்றையும் திண்டிவனம் நகரத்தின் பரந்துபட்ட மக்களின் ஆதரவோடு எதிர்கொள்கிறேன்.

**கல்யாணி கல்விமணி ஆனதன் காரணம் என்ன?**

(நேர்காணலின் தொடர்ச்சி மாலை 7 மணிப் பதிப்பில்)

[முட்களின் மீது சில பட்டாம்பூச்சிகள்: பேராசிரியர் கல்யாணி பகுதி 1](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2017/11/25/1511548230)

[முட்களின் மீது சில பட்டாம்பூச்சிகள்: பேராசிரியர் கல்யாணி பகுதி 2](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2017/11/25/1511594386)

[முட்களின் மீது சில பட்டாம்பூச்சிகள்: பேராசிரியர் கல்யாணி பகுதி 3](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2017/11/25/1511614837)

[முட்களின் மீது சில பட்டாம்பூச்சிகள்: பேராசிரியர் கல்யாணி பகுதி 4](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2017/11/26/1511634609)

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share