முட்களின் மீது சில பட்டாம்பூச்சிகள்: பேராசிரியர் கல்யாணி பகுதி 2

Published On:

| By Balaji

(பிரபா கல்விமணி (எ) கல்யாணி, மனித உரிமைக்காகவும் இருளர்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்கும் சமூகச் செயல்பாட்டாளர். தீவிர மார்க்சிய அமைப்புகளிலிருந்து வந்து, தனது விழுமியங்கள் வழுவாது வாழும் எளிய போராளி. பாலியல் வழக்குகளில் பெண்களுக்கு நீதி கிடைக்கச்செய்வதற்காக அதிகமாக உழைத்தவர். வயதை முன்னிட்டு சேவை மனப்பான்மையை எள்ளளவும் சமசரம் செய்துகொள்ளாமல் உற்சாகத்துடன் உழைத்துவரும் மக்கள் தொண்டர். அவருடனான நேர்காணலின் தொகுப்பு இது – ஆசிரியர்)

தமயந்தி

**இருளர்கள் மேம்பாட்டிற்கான பங்களிப்பின் சில முக்கியச் சுவடுகள்…**

• 2007இல் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ப.சிவசாமி அவர்களின் ஆலோசனை மற்றும் உதவியோடு பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டது. இந்த அறக்கட்டளையில் இருளர் கல்வி மேம்பாட்டில் அக்கறையுள்ள இருளர்கள் மற்றும் பிற சமூகத்தினரும் உறுப்பினராக உள்ளனர். இதன் தலைவராக ஆசிரியர் சி.ஜெயபாலன் அவர்களும் செயலாளராக ஆசிரியர் பொன் மாரி, பொருளாளராக விழுப்புரம் P.V. ரமேஷ் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர். இதன் மூலம் பொதுத்தேர்வுகளில் அதாவது 10ஆவது, 12ஆவது மற்றும் பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெறுவோர் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டுவருகின்றன. அண்மையில் 29-10-2017 அன்று நடந்த பரிசளிப்பு நிகழ்வில் நீதியரசர் சந்துரு அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். 217 மாணவ மாணவியருக்கும் பரிசுகளும், பழங்குடி இருளருக்கு ஆதரவாக செயல்படும் பிறசமூகத்தினர் மற்றும் வழக்குகளில் உறுதியாக நின்று போராடும் இருளர்கள் என மொத்தம் 11 பேருக்கும் அத்தியூர் விஜயா நினைவு விருதும் வழங்கப்பட்டன.

• பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளைக்குச் சொந்தமாக 2007இல் 3 இலட்சம் ரூபாய் கிரயத்தில் 27 சென்டு நிலம் அனந்தபுரத்தில் வாங்கப்பட்டது. அதன் இன்றைய சந்தை மதிப்பு ரூபாய் 30 இலட்சமாகும். விரைவில் அந்த இடத்தில் இருளர் மாணவர்களுக்கு விடுதி ஒன்று கட்ட உள்ளோம்.

• 1993 அத்தியூர் விஜயா வழக்கு முதல் இதுவரை 700க்கும் மேற்பட்ட வழக்குகளும் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒப்பீட்டளவில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பழங்குடியினருக்கு பாதுகாப்பு உணர்வு அதிகரித்துள்ளது. மேலும் அவர்கள்மீது போடப்படும் பொய் வழக்குகள் குறைந்துள்ளன.

• தானே புயலில் பாதிக்கப்பட்டுள்ள 85 இருளர் குடும்பங்களுக்கு வீடு கட்டத் தமிழக அரசு தலா ஒரு லட்சம் வழங்கியது. கிளாராட் சபை அருட்தந்தை அ.ரபேல்ராஜ் மற்றும் புனித அன்னாள் சபை ஒத்துழைப்போடு ரூபாய் 23 இலட்சம் நிதி திரட்டப்பட்டு அவ்வீடுகள் அனைத்தும் தரமாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் சித்தலிங்கமடத்தில் உள்ள இக்குடியிருப்புக்கு நீதிபதி கே.சந்துரு குடியிருப்பு என்று பெயரிட்டு, தொடந்து அக்குடியிருப்பை, ஒரு முன்மாதிரிக் குடியிருப்பாக மேம்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வருகிறோம். இக்குடியிருப்பிற்கு நீதிபதி கே.சந்துரு, ரூபாய் 5 இலட்சம், தஞ்சை பல்கலைக்கழக பொறியாளர் தலைமையிலான அறக்கட்டளை ரூபாய் 2 இலட்சம் வழங்கினார்கள். நடிகர் சூரியா அவர்களின் அகரம் பவுண்டேஷன் உள்ளிட்ட பலர் அதன் வளர்சியில் பங்கெடுத்துவருகிறார்கள்.

• 1996இல் 15 கிராமங்களில் உதயமான இச்சங்கமானது விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை என மூன்று மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் விரிவடைந்துள்ளது.

• அண்மைக் காலமாக திண்டிவனம் தீ.ராஜேஷ் தீனா, உ.வெங்கடசுப்பிரமணியன், இரா.முருகப்பன் ஆகியோர் தங்களின் முகநூல் நண்பர்கள் மூலம் இருளர்களின் மேம்பாட்டுக்காகப் பேருதவி செய்து வருகின்றனர். தற்சமயம் பிரதம மந்திரியின் குடியிருப்புத் திட்டம் (ஊரகம்) –அடிப்படையில் செஞ்சி வட்டம் வல்லம் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகள் ஒத்துழைப்போடு 20க்கும் மேற்பட்ட பழங்குடியினர் வீடுகள் கட்டுவதற்கு உடனிருந்து உதவ உள்ளோம்.

• 1999இல் விழுப்புரத்திலும் 2005இல் திண்டிவனத்திலும், 2009இல் விழுப்புரத்திலும் மாநில மாநாடுகள் நடத்தப்பட்டு பழங்குடி இருளர்கள் மத்தியில் பெரும் எழுச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளோம்.

• 1999இல் இருளர்மீது தொடரும் வன்கொடுமைகள் என்ற நூலும், எழுத்தாளர் ப.சிவகாமி எழுதிய ‘பழங்குடியினர் நிலஉரிமை’, சகோதரி லூசினா எழுதியுள்ள ‘பழங்குடியினர் மற்றும் இருளர் பெண்கள்’, விழி.பா.இதயவேந்தன் தொகுத்துள்ள ‘பழங்குடியினர் கதை, கவிதை, கட்டுரைகள்’, பிரபா கல்விமணி தொகுத்துள்ள ‘இருளருன்னா இளக்காரமா?’, முருகப்பன் இராமசாமி எழுதிய ‘இருளர்களின் இதயம் வி.ஆர்.ஜெகநாதன்’ ஆகிய ஆறு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ‘இருளர் செய்தி’ என்ற மாத இதழ் சில காலம் நடத்தப்பட்டது. அதனை மீண்டும் தொடர்ந்து நடத்த உள்ளோம்.

**குற்றப் பரம்பரையினராக இருளர்கள் நடத்தப்படுவது குறித்து?**

போலீசார் தங்களால் கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளை, சமூகத்தில் மிகவும் சிறு எண்ணிக்கையிலும் விளிம்பு நிலையிலும் வாழ்கின்ற பழங்குடி இருளர்கள், குறவர்கள் போன்ற குறுங்குழு சமூகத்தினர்மீது சுமத்திச் சிறையில் அடைப்பது தமிழகத்தில் காலங்காலமாக நடைபெற்றுவருகிறது.

அத்தியூர் விஜயா பாதிக்கப்பட்ட வழக்குகூட (1993), புதுச்சேரி வெங்கட்டா நகரில் நடந்த ஒரு திருட்டு வழக்கினை முடித்து வைப்பதற்காக செஞ்சி வட்டம் அனந்தபுரம் அருகில் உள்ள சித்தரசூரில் வசித்துவந்த வெள்ளையன் (விஜயாவின் பெரியப்பா மகன்) என்பவரை தேடிச் சென்றபோது நடந்த சம்பவம்தான்.

தமிழக போலீசார் மட்டுமில்லாது, ஆந்திர போலீசாரும் இதுபோன்று திருட்டு வழக்கிற்காக, தமிழகம் வந்து இருளர்களைப் பிடித்துச் சென்று பொய் வழக்கு போடுவதும் காலங்காலமாக நடந்துவருகிறது. இப்படித்தான் 03-10-1993இல் அத்தியூர் விஜயாவின் தந்தை மாசி என்பவர், திருப்பதி போலீசாரால் கடத்தப்பட்டு, திருப்பதி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

நானும் சகோதரி லூசினா அவர்களும் இந்த வழக்கிற்காகத் திருப்பதி சென்று மாசியை ஜாமீனில் எடுத்துவந்தோம். இந்த வழக்கு ஆந்திரப் பிரதேச மனித உரிமை வழக்கறிஞர் கண்ணபிரான் போன்றோரின் உதவியோடு நடத்தப்பட்டது. 27-12-1993 அன்று ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் மாசியை சட்டவிரோதக் காவலில் வைத்தமைக்காக மாசிக்கு ரூ.5000 நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது.

2011இல் திருக்கோவிலூர் போலீசார், தி.கே.மண்டபத்தைச் சேர்ந்த 4 பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்குகூட, தி.கே.மண்டபத்தில் தனியாக வசித்து வந்த முருகன்-வள்ளி குடும்பத்தினர் வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருந்த மூன்று உறவினர்களுடன், முருகன் மற்றும் அவரது இரு மகன்களையும் கைதுசெய்து சட்டவிரோத காவலில் வைத்த சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெற்றதுதான்.

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் செயல்பட்டுவரும் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 1993லிருந்து இதுவரை, 30க்கும் மேற்பட்டவர்கள்மீது போடப்பட்ட வழக்குகளை எடுத்து நடத்தியுள்ளோம். அதிலும் குறிப்பாக செஞ்சி வட்டம், சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (31/2013) மீது போடப்பட்ட பொய் வழக்குகளைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அவர்மீது 2012ஆம் ஆண்டு வளத்தி சேத்துப்பட்டு, செய்யாறு, வந்தவாசி மற்றும் சென்னை மாநகரில் உள்ள இரு காவல் நிலையங்கள் என 6 காவல் நிலையங்களில் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்குகள் சுமத்தப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ரமேஷுக்கு டிவிஎஸ். 50 மட்டுமே ஓட்டத் தெரியும், மோட்டார் சைக்கிள் ஓட்டத் தெரிது என்பது குறிப்பிடத்தக்கது. நாங்கள் எடுத்த மேற்படி வழக்குகளில் இதுவரை ஒன்றுகூட நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

மேற்படி பொய் வழக்குகள் சுமத்தப்படும் குறுங்குழு சமூகத்தினருக்குப் பெரிய ஓட்டு வங்கி இல்லாததாலும், இருப்பவர்களும் பெரும்பாலும் சிதறி வாழ்ந்துவருவதாலும் பெரும்பாலும் எந்தப் பெரிய கட்சிகளும் இவர்கள் பிரச்சினையை எடுப்பதில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இடதுசாரி கட்சிகள் விதிவிலக்கு. பெரும்பாலும் இதுபோன்ற வழக்குகளை மக்கள் கண்காணிப்பகம், சசி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு போன்ற மனித உரிமை அமைப்புகளே எடுத்து நடத்திவருகின்றன.

நாங்கள் தொடர்ந்து செயல்பட்டுவரும் விழுப்புரம், கடலூர் பகுதிகளில் இருளர்கள்மீது போடப்படும் பொய்வழக்குகள் கணிசமாகக் குறைந்துள்ளன.

**பழங்குடியினருக்கு அரசு என்ன செய்ய வேண்டும்?**

• முதலில் பழங்குடியினர் மீது போடப்படும் பொய் வழக்குகள் நிறுத்தப்பட வேண்டும். பழங்குடியினர்மீது பொய்வழக்கு போடும் காவல் அதிகாரிகள்மீது எஸ்.சி.எஸ்டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் (2015) வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

• பிற சாதியினரைப் போன்று எஸ்.டி. மக்களுக்கும் விரைவில் சாதிச் சான்றுகள் வழங்கப்பட வேண்டும். எஸ்.டி. மாணவர்களுக்கும், பிறசாதி மாணவர்களைப் போன்று 6ஆம் வகுப்பு படிக்கும்போதே சாதிச் சான்றுகள் வழங்கப்பட வேண்டும்.

• வீட்டு மனைப் பட்டா இல்லாத அனைத்து பழங்குடியினருக்கும் கால நிர்ணயம் செய்து அனைவருக்கும் மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும்.

• தமிழகப் பழங்குடியினரின் நிலவுரிமை என்ற நூலில் எழுத்தாளர் ப.சிவகாமி குறிப்பிட்டுள்ளதைப் போன்று தமிழக அரசு பழங்குடிப் பிரிவுகளை அரசியல் சாசனப்பிரிவின் 5ஆவது அட்டவணைக்குக் கீழ் கொண்டுவருதல் வேண்டும்.

• சிதறி வாழும் பழங்குடியினர் ஒன்றுக்கு சி.தங்கராஜ் கமிட்டி பரிந்துரையின்படி 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும்.

• கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ள நிலையில் பழங்குடி இன மாணவர்களுக்குப் பெயரளவில் இல்லாமல் உண்மையான அக்கறையுடன் சிறப்பு கவனம் செலுத்தி நிறைய உண்டு உறைவிடப் பள்ளிகளை ஏற்படுத்தி, அதன் நிர்வாகப் பொறுப்பை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின் நலத் துறையிடம் இருந்து விடுவித்து, கல்வித் துறையில் தனிப்பிரிவை ஏற்படுத்தி அதன் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர வேண்டும்.

• மேற்கண்டவற்றை நிறைவேற்றவும், அவற்றைப் பாதுகாக்கவும் தமிழக அளவில் தகுந்த சட்டங்கள் இயற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

(நேர்காணலின் தொடர்ச்சி மாலை 7 மணிப் பதிப்பில்)

[முட்களின் மீது சில பட்டாம்பூச்சிகள்: பேராசிரியர் கல்யாணி பகுதி – 1](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2017/11/25/1511548230)

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share