கரிகாலன் கட்டிய கல்லணை போல அதிமுக உறுதியாக இருக்கிறது என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையின் மதகுகள் உடைந்த நிலையில், இதனை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இப்பணிகளை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 3) பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி முக்கொம்பு அணை போல நடந்துகொண்டிருக்கிறது” என்று விமர்சித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்து காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், “முக்கொம்பு அணை 136 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணை. அதனையும் தமிழக அரசையும் ஒப்பிடுவது சரியாக வராது. அதிமுக அரசும், கட்சியும் கரிகாலச் சோழன் கட்டிய கல்லணை போல உறுதியாக இருக்கிறது. கல்லணை போல இன்னும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அதிமுக நிலைத்து நிற்கும். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எந்தக் காலத்திலும் விலைபோக மாட்டார்கள் என்பது கடந்த கால வரலாறு. ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின் போன்றோர் கூறுகிற கருத்தெல்லாம் அவர்களுடைய பகல் கனவாகத்தான் முடியும்” என்று தெரிவித்தார்.
உண்மைக்குப் புறம்பாக நீங்கள் பேசுவதாக தினகரன் கூறுகிறாரே என்ற கேள்விக்கு, “உண்மைக்குப் புறம்பாக நான் எந்தக் கருத்தைச் சொல்கிறேன் என்று கூறினால், என்னிடமிருந்து அதற்குரிய பதில் வரும் என்பதால்தான், அவர் பொதுவாக சொல்லிக்கொண்டிருக்கிறார். நான் கூறியதில் எந்த கருத்து உண்மைக்குப் புறம்பானது என்று கூறினால் அதற்குரிய பதிலை நான் அளிக்கத் தயாராக இருக்கிறேன்” என்று பதிலளித்தார்.�,