முகிலன் விவகாரம்: திருமுருகன் மீது வழக்குப்பதிவு!

Published On:

| By Balaji

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான சில ஆதாரங்களைப் பத்திரிகையாளர் மத்தியில் வெளியிட்டார் சமூகச் செயற்பாட்டாளர் முகிலன். அதன்பின்னர், கடந்த பிப்ரவரி 16ஆம் தேதியன்று அவர் சென்னை – நாகர்கோவில் சிறப்பு ரயிலில் மதுரைக்குப் பயணிக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அன்றைய தினத்திலிருந்து அவரைக் காணவில்லை. முகிலன் மாயமானது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான வழக்கில், ‘முகிலனை தீவிரமாக தேடி வருவதாக’ சிபிசிஐடி போலீசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் முகிலனை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன.

அந்தவகையில், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில், தனது ஆதரவாளர்களுடன் முகிலனை கண்டுபிடித்துத் தர கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது முகிலன் காணாமல் போனதற்கு எடப்பாடி அரசும், காவல்துறையுமே பொறுப்பு என்ற தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய திருமுருகன் காந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தவறான செய்திகளைப் பரப்பியதாகவும், பொது மக்களிடையே கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாகவும் கூறி இன்று (மார்ச் 30) நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இயக்கத்தின் ஆதரவாளர்கள் பெரியசாமி, அருள் முருகன், டைசன் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share