சுற்றுச்சுழல் பாதுகாப்பு இயக்கச் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டுபிடித்து உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோரித் தொடரப்பட்ட வழக்கில், மூன்று காவல் துறை உயரதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குக் காவல் துறையே காரணம் என்று கடந்த வாரம் சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார் சுற்றுச்சுழல் பாதுகாப்பு இயக்கச் செயற்பாட்டாளர் முகிலன். காவல் துறை உதவியுடன் துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேற்றப்பட்டதாகக் கூறி, சில வீடியோ ஆவணங்களையும் வெளியிட்டார். இந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி முதல் முகிலனைக் காணவில்லை என்று புகார் எழுந்தது.
இதையடுத்து, இன்று (பிப்ரவரி 18) முகிலனைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவொன்றைத் தாக்கல் செய்தார் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம். இன்று பிற்பகலில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சென்னை பெருநகர காவல் ஆணையர் மற்றும் காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
�,