மீரா குமார் வேட்புமனு தாக்கல்: தலைவர்களுக்கு அழைப்பு!

public

ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள மீரா குமார் இன்று ஜூன் 28ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதையொட்டி, கூட்டணிக் கட்சிகளான 17 கட்சி தலைவர்களும் பங்கேற்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 14ஆம் தேதியுடன் முடிவடைவதையடுத்து ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் வரும் ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த், தனது வேட்புமனுவைக் கடந்த 23ஆம் தேதி பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்பட பல்வேறு முக்கியத் தலைவர்கள் முன்னிலையில் தாக்கல் செய்தார். அவருக்குப் பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமாரை ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தற்போது வரை 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தாலும் 56 நபர்களே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ஒரு நபர் அதிகபட்சமாக 4 வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம் என்பதையடுத்து, ஒரு சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

தற்போதுவரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்களில் பாஜக வேட்பாளரைத்தவிர அனைவரது வேட்புமனுக்களும் தள்ளுபடி செய்யப்பட உள்ளது. ஏனெனில், ஒருவருக்கு 50 பேர் முன்மொழிய வேண்டும் என்பதால் ஏனைய வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது தள்ளுபடி செய்யப்படும். ஜனாதிபதி தேர்தலில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 64 வேட்புமனுக்களில் தமிழகத்தைச்சேர்ந்த தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் கே.பத்மராஜன் என்பவரும் அடங்குவார். சேலத்தைச் சேர்ந்த இவர் 150-க்கும் மேற்பட்ட தேர்தல்களில் போட்டியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று ஜூன் 28ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதையடுத்து, காங்கிரஸ் சார்பில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மீரா குமார் இன்று 28ஆம் தேதி தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார். அவருக்கு காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், கம்யூனிஸ்டுகள் உள்பட 17 கட்சிகளின் ஆதரவு உள்ளது. வேட்புமனுத் தாக்கலின்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும், இதில் கலந்துகொள்ளும்படி கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் திமுக சார்பில் கனிமொழி எம்.பி. கலந்து கொள்கிறார்.

வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கு ஜூலை 1 கடைசி தேதியாகும். அதன்பிறகு தேர்தலில் யார், யார் போட்டியிடுகிறார்கள் என்ற இறுதி நிலவரம் தெரியவரும்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0